புதுடில்லி: மாணவர்களின் பிரச்னையில் அக்கறை காட்டப்பவதில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இந்தாண்டு தேர்வு நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக தொடரப்பட்ட மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தேர்விற்கான ஹால் டிக்கெட்டும் இன்று வெளியிடப்பட்டது.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக, பா.ஜ., ஆட்சி செய்யாத மாநில முதல்வர்களின் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, மே.வங்க முதல்வர் மம்தா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி , சத்தீஸ்கர் முதல்வர் பூபெஷ் பாகெல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வீடியோ கான்பரன்ஸ் முறையில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:

சோனியா பேசியதாவது
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை தர மறுப்பது என்பது மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் மோடி அரசு செய்யும் துரோகம் ஆகும். தேசிய கல்வி கொள்கை தொடர்பான அறிவிப்புகள், உண்மையில் நமக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் கவலை அளிக்கிறது. தேர்வு உள்ளிட்ட மாணவர்களின் பிரச்னைகள் மீது அக்கறை காட்டப்படுவதில்லை.
ஹேமந்த் சோரன்
தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், அவசரம் காட்டக்கூடாது. ஜார்க்கண்டில் குறைந்தளவு தேர்வு மையங்கள் தான் உள்ளன. மாணவர்களுக்கு வசதிகளை செய்து தர, அனைத்து ஓட்டல்களை திறந்துவிட வேண்டும். பஸ்களை இயங்க வேண்டும். கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தேர்வு எழுத மத்திய அரசு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். ஏதாவது தவறாக நடந்தால், மாநில அரசுகளை தான் மத்திய அரசு குறை சொல்லும். இந்த விவகாரத்தை கூட்டாக இணைந்து எழுப்புவோம். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது எனது கோரிக்கை. உச்சநீதிமன்றம், சென்று, நிலைமை சரியாகாத வரை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைப்போம்.

உத்தவ் தாக்கரே பேசுகையில்,
நாம் பயப்பட வேண்டுமா அல்லது அரசுக்கு எதிராக போராட வேண்டுமா என்பது குறித்து நாம் முடிவு செய்ய வேண்டும். பா.ஜ., அரசை தேர்வு செய்தவர்கள் தான், நம்மையும் தேர்வு செய்தார்கள். ஆனால், நாம் எது செய்தாலும் அது குற்றம். அவர்கள் எது செய்தாலும், புண்ணியமா? அமெரிக்காவில் பள்ளிகள் திறந்ததால் 97 ஆயிரம் மாணவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபோன்ற சூழ்நிலை இங்கு உருவானால் என்ன செய்வது.

மம்தா பானர்ஜி:
கூட்டாட்சி தத்துவம் என்ற பெயரில் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. நாம் அனைவரும் உச்சநீதிமன்றத்தை நாடுவோம். இந்த விவகாரத்தை பற்றி அங்கு பேசுவோம். மாணவர்களுக்கு மன ரீதியாக அழுத்தம் தரப்படுகிறது. நிலைமை மோசமாக உள்ளது. நமது குழந்தைகளுக்காக நாம் பேச வேண்டியுள்ளது.
ஹேமந்த் சோரன், உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு முன்னர், பிரதமர் மோடியை சந்தித்து பேசலாம் எனக்கூறினார். அதற்கு மம்தா அளித்த பதில், நாம் மோடியை சந்தித்து பேசலாம். ஆனால், அவர் நமது கோரிக்கையை ஏற்க மாட்டார். இதனால், உச்சநீதிமன்றம் செல்வதை சிறந்தது என தெரிவித்தார்.

அமரீந்தர் சிங்:
தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். நாம் அனைவரும் கூட்டாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்ற மம்தாவின் முடிவினை நான் வரவேற்கிறேன் . கொரோனா சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இதுவரை 500 கோடி செலவு செய்துள்ளோம். மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்கவில்லை. எனக்கூறினார்.

பூபேஷ் பாகெல்:
கடந்த 4 மாதங்களாக, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவில்லை. நிலைமை பார்க்கும் போது அச்சமாக உள்ளது.
நாராயணசாமி:
தேர்வை நடத்துவதன் மூலம் நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் நான் அனைவரும் கூட்டாக ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE