திருநெல்வேலி : தமிழக பா.ஜ.க.,வில் காலியாக உள்ள மாநில பொதுச்செயலாளர் பதவி தந்திருக்கலாமே என தமது வருத்தத்தை மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பா.ஜ.,வில் இருந்து விலகபோவதாக பேச்சு நிலவியது. சில தினங்களுக்கு முன்பு அவரது நெல்லை வீட்டில் சந்தித்து மாநில தலைவர் எல்.முருகன், சமாதானப்படுத்தினார். தொடர்ந்து, சென்னையில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் நயினாருக்கு தென்மண்டல பொறுப்பாளர் எனும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகிகள் தயாசங்கர், மகாராஜன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் 7 மாதங்கள் உள்ளன. எனவே தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி தொடருமா, கூட்டணிக்கு யார் தலைமை என்பதெல்லாம் கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.
இருப்பினும் தமிழகத்தில் இப்போதுள்ள சூழலில், தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., மீது எனக்கு அதிருப்தி இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கும் எனக்கு தற்போது பதவி தந்ததற்கும் சம்பந்தமில்லை. எனது அதிருப்திக்காக பதவி தருவதாக இருந்தால் தற்போதும் காலியாக உள்ள மாநில பொதுச்செயலாளர் பதவி தந்திருக்கவேண்டும். என்னை சமாதானப்படுத்துவதற்காக இந்த பதவி தரவில்லை.
தற்போது மாவட்டங்களை பிரித்துள்ளதால் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்த வருத்தம் வருத்தம்தான். தமிழகத்திற்காக மத்திய அரசு பல்வேறு நிதி ஆதாரங்களை வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் பாதிப்பு உள்ளது மறுக்க முடியாது. மத்திய அரசின் திட்டங்களைத்தான் மாநில அரசு செயல்படுத்துகிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE