புதுடில்லி,: மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில், சோனியாவும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் தீவிர ஆர்வம் செலுத்துகின்றனர். இதன் அடிப்படையில், காங்., மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஏழு மாநில முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக இணைந்து வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, மே மாதம் நடக்க வேண்டிய மருத்துவப் படிப்புக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு, 'நீட்' ஜூலை, 26க்கு தள்ளி வைக்கப்பட்டது.அதேபோல பொறியியல் படிப்புக்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வு, ஜூலை, 18 முதல், 23 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், அதுவும் தள்ளி வைக்கப்பட்டது.
என்.டி.ஏ.,
இந்நிலையில், 'செப்., 1 மற்றும் 6ம் தேதிகளில் ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வும்; செப்., 27ல், ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வும்; செப்., 13ல், நீட் தேர்வும் நடத்தப்படும்' என, என்.டி.ஏ., எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.'கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாததால், இந்தத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்' என, மாணவர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், 'திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்' என, என்.டி.ஏ., தெரிவித்துள்ளது. தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவும், கடந்த வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுடனான சந்திப்புக்கு, காங்கிரஸ், தற்காலிக தலைவர், சோனியா அழைப்பு விடுத்திருந்தார்.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடுகளை மாநிலங்களுக்கு ஒதுக்குவது உட்பட பல பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, சோனியா அழைப்பு விடுத்திருந்தார்.'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான, ஹேமந்த் சோரன் பங்கேற்றனர்.
இவர்களுடன், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களான, பஞ்சாபின் அமரீந்தர் சிங், சத்தீஸ்கரின் பூபேஷ் பாகெல், ராஜஸ்தானின் அசோக் கெலாட், புதுச்சேரியின் வி. நாராயணசாமி
பங்கேற்றனர்.
மனதளவில் பாதிப்பு
இந்தக் கூட்டத்தில், பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டாலும், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாகவே, முக்கியமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மம்தா பானர்ஜி பேசியதாவது:
மாணவர்களின் நலன்களை காக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என கூறிக் கொண்டு, மத்திய அரசு தன் அதிகாரத்தை முழுமையாக செலுத்துகிறது. இது மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. மேலும், இந்த தேர்வுகள் மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. தற்போதுள்ள பிரச்னை மிகவும் தீவிரமானது.
மாணவர்களின் சார்பில் நாம் பேச வேண்டும். நாம் அனைவரும் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடருவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.இதற்கு, உத்தவ் தாக்கரே உட்பட, பல மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ள கேரளாவின் முதல்வர், பினராயி விஜயனை அழைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால், அதுகைவிடப்பட்டது.டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.தமிழகத்தில் ஆட்சியில் உள்ள, அ.தி.மு.க., அரசு, மத்தியில் ஆளும் பா.ஜ., உடனான கூட்டணியில் உள்ளதால், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மற்ற முதல்வர்கள் பேசியது என்ன?
இந்தக் கூட்டத்தில் மற்ற முதல்வர்கள் மற்றும் தலைவர்கள் பேசியதாவது:
காங்., தலைவர் சோனியா: மாணவர்களின் பிரச்னை மற்றும் தேர்வு குறித்து மத்திய அரசு கருணையோடு பரிசீலிக்காமல் நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தவ் தாக்கரே: உண்மையே வெல்லும்; அதிகாரம் வெல்லாது. நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இணைந்து போராடுவோம்.
அமரீந்தர் சிங்: இந்த பிரச்னை தொடர்பாக, பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதிவிட்டோம். ஆனால், பலனில்லை. நாம் அனைவரும் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
ஹேமந்த் சோரன்: தற்போதுள்ள நிலைமை அச்சம் அளிப்பதாக உள்ளது. என்னுடைய பெற்றோர்களுக்கு கூட, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சுமுக தீர்வு!
மாணவர்கள் தங்களுடைய உடல்நலம் மற்றும் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள். அசாம், பீஹாரில் வெள்ள பாதிப்பு உள்ளது. இந்த நேரத்தில், மாணவர்களின் குரலை, மத்திய அரசு செவி கொடுத்து கேட்க வேண்டும். அனைத்து தரப்பினருடன் இணைந்து, சுமுகமான தீர்வு காண வேண்டும்.ராகுல்எம்.பி., - காங்.,