நம் முன்னோரின் பழக்க, வழக்கங்கள், வாழ்க்கையில் பின்பற்றியஒழுக்கம், ஆரோக்கியமான, கலாசார உணவு போன்றவற்றால் மட்டுமே, கொரோனா தொற்றுநோயை நாம் எதிர்கொண்டு, வெற்றி காண முடியும்.இன்றைய சூழலில் கொரோனா நோய் பரவும் வேகத்தை பார்க்கும் போது, நம் முன்னோர் பின்பற்றிய கலாசாரத்தை, சிறிதளவில் பலர் கடைப்பிடிப்பதால் மட்டுமே பாதிப்பில் இருந்து நிறைய மக்கள் தப்பித்துள்ளனர் என்பது புலனாகிறது.
பாட்டி வைத்தியம்
இது மட்டும் இல்லை என்றால், அமெரிக்காவை என்றைக்கோ பின்னுக்கு தள்ளி, கொரோனா பாதிப்பு பட்டியலில், உலகில் முதல் இடத்தில் இந்தியா வந்திருக்கும்.மேலை நாட்டு கலாசார சீர்கேட்டால், நம் சுயசிந்தனையை இழந்து இருக்கிறோம். நம் பாரம்பரிய முறைகளை மறந்து விட்டிருக்கிறோம். அதனால் தான், கொரோனாவால் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது.இயற்கை விசாலமானது. வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி என, எல்லாவற்றையும் உள்ளடக்கியது.பாட்டி வைத்தியத்தை அனைவரும் மீண்டும் நினைவில் கொள்ள, அனைவருக்கும் ஒரு வாய்ப்பை கொரோனா வழங்கியுள்ளது.
தடுப்பூசிகள் வரலாம், போகலாம். 'ஹெர்ட் இம்முனிட்டி' எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்காக காத்திருப்பது ஒரு கற்பனை கனவு. இதில் கிட்டத்தட்ட, 85 சதவீத மக்கள் ஆன்டிபாடிகளை உருவாக்கி, கொரோனாவை எதிர்க்க வேண்டும். 85 சதவீத மக்கள் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய, நாம் உட்பட, அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களின் எண்ணிக்கையை இழக்க தயாராக இருக்க வேண்டும். இந்த அபாயகரமான பரிசோதனையை, இப்போது இந்த சூழ்நிலையில் கையாள்வது நல்லது அல்ல. கொரோனாவுக்கான ஒவ்வொரு மருந்தும் நம்பிக்கை, பரவசம், தற்காலிக மேகம் போன்றது. அதிசய மருந்துகள் என்று அறிவிக்கப்பட்ட பெரும்பாலான மருந்துகள், ஹிட்லரின் பதுங்கு குழிகளில் அடைக்கப்
பட்டுள்ளன.
ஆரோக்கியமான உணவு
அவற்றை பற்றி கவலைப்படாமல், சத்தான சீரான உணவு, மசாலா, மூலிகைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள், வழக்கமாக உடற்பயிற்சிகளை செய்யுங்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றால், உங்கள் மன அழுத்தத்தை குறையுங்கள்.ஓ.ஆர்.ஏ.சி., என்பது, பிராண வாயு உறிஞ்சும் திறன் எனப்படும். அதிக ஓ.ஆர்.ஏ.சி., ரத்தத்தில் பிராண வாயு சுமக்கும் திறன் மற்றும் நுரையீரல் பிராண வாயு திறன் சிறப்பாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
எதிர்காலத்தில், நம் உயிர்வாழ்வு, நம் நோய் எதிர்ப்பு சக்தியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.நம் வாழ்க்கைக்கு, மசாலா மிக முக்கியம். ஏனெனில், அவற்றில், ஓ.ஆர்.ஏ.சி., அதிகம் உள்ளது. 100 கிராம் கிராம்பில், 3,14,446 அளவுக்கு, ஓ.ஆர்.ஏ.சி., உள்ளது. இலவங்கப்பட்டை, 2,67,537; காபி, 2,43,000; மஞ்சள், 1,02,700; கோகோ, 80,933; சீரகம், 76,800; கொத்தமல்லி, 74,349; துளசி, 67,553; தைம் எனப்படும் மணம் உள்ள இலைகளில், 27,426; இஞ்சியில், 28,811 மதிப்பு அளவு உள்ளது.இஞ்சி, துளசி, மஞ்சள் ஆகியவற்றின் சாறுகளில், 10 மடங்கு அதிக, ஓ.ஆர்.ஏ.சி., மதிப்புகள் இருக்கின்றன.
ரத்தத்தில் பிராண வாயு உட்கொள்ளுதல் திறன் உள்ள இயற்கை பழங்கள்,காய்கறிகள், ஸ்பைசஸ்எனப்படும் மிளகு, கிராம்பு, ஏலம் போன்ற வாசனை திரவியம், மூலிகைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை மேம்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.இத்துடன், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஜின்க், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள்,நம் உடலின் சுய பாதுகாப்பை அதிகரிக்க உதவுகின்றன. இவை மாத்திரையாக, 'சிட்கா - டி.ஆர்.இசட் என்ற மாத்திரையாக, மருந்து கடைகளில் கிடைக்கிறது.
உயிர் வாழ அதிக வாய்ப்பு
துளசி, இஞ்சி, மிளகு, மஞ்சள், இலவங்கப்பட்டை, கிராம்பு தவிர, வல்லாரை, அஸ்வகந்தா, சதாவரி, அதிமதுரம், அர்ஜுனரிஷ்டம், மிளகுக்கீரை, கொத்தமல்லி விதைகள், சீரகம் போன்வற்றின் செயல்களும் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. எனவே, இது எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல், சுய நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவைப்படும் இந்த மசாலா பொருட்கள், எந்தவொரு தடுப்பூசியை விடவும் அதிக பலன் கொண்டவை.
சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ வல்லுனர்கள் கலந்துரையாடலில் இருந்து, ஒரு சில குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில், கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரை விட, ஜூன் மற்றும் ஜூலை மாதம் பாதிக்கப்பட்டோருக்கு உயிர் வாழ அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதற்கு காரணம், கொரோனா பற்றி மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள், பல மாதங்களாக ஆராய்ந்து, சிகிச்சை அளிக்க முடிந்திருக்கிறது. இதனால், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடிகிறது. இவ்வாறு அந்த வல்லுனர்கள் பேசிக் கொண்டனர்.
உங்கள் புரிதலுக்காக, 2020 பிப்ரவரியில், டாக்டர்களுக்கு தெரியாத, நான்கு முக்கிய விஷயங்களை பட்டியலிடுகிறேன்.
1.கொரோனா ஆரம்பத்தில், 'நிமோனியா' மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக இறப்புகளை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. எனவே, சுவாசிக்க முடியாத நோயுற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, 'வென்டிலேட்டர்' சிறந்த வழியாக கருதப்பட்டது. வைரஸ், நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளின் ரத்த நாளங்களில் ரத்த உறைவை ஏற்படுத்துகிறது. இதனால், ஆக்சிஜனேற்றம் குறைகிறது என்பதை இப்போது நாம் உணர்ந்துள்ளோம். வென்டிலேட்டர்களால் ஆக்சிஜனை வழங்குவது உதவாது என்பதை, இப்போது நாம் அறிவோம். ஆனால், நுரையீரலில் உள்ள மைக்ரோ கட்டிகளைத் தடுக்கவும் கரைக்கவும் வேண்டும். இதனால் தான், ஜூன் மாதத்தில் சிகிச்சை முறைகளில், நெறிமுறையாக ஆஸ்பிரின் மற்றும் ஹெபாரின் போன்ற, ரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரை மற்றும் ஊசி மருந்துகளைப் பயன்படுத்துகிறோம்.
2.முன்னதாக நோயாளிகளின் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவதால், சாலையில் அல்லது மருத்துவமனையை அடைவதற்கு முன்பே, கொரோனா நோயாளி இறந்து போவார். இதை, 'ஹைப்போக்ஸிமியா' என்கிறோம்.ஆக்சிஜன் சாட்சுரேஷன் படிப்படியாக கொரோனா நோயாளிகளுக்கு குறைந்து கொண்டிருந்தாலும், அது சில நேரங்களில், 70 சதவீதம் அளவுக்கு குறையவில்லை.
மூச்சுத் திணறல்
ஆக்சிஜன் சாட்சுரேஷன், 90 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், பொதுவாக, நாம் மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சு திணறல் ஏற்படுகிறது.இந்த மூச்சுத் திணறல், கொரோனா கோவிட் நோயாளிகளில் ஏற்படவில்லை. எனவே, பிப்ரவரியில் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு மிகவும் தாமதமாக அழைத்துச் சென்றோம்.இப்போது ஆக்சிஜன் சாட்சுரேஷன் பற்றி அறிந்ததிலிருந்து, அனைத்து கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் சாட்சுரேஷனை கண்காணித்து வருகிறோம். ஒரு எளிய வீட்டு உபயோக, 'பல்ஸ் ஆக்சிமீட்டர்' கருவி மூலம், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் செறிவை கண்காணிக்கிறோம்.அது, 93 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது நல்லது. இது, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் குறைபாட்டை சரிசெய்ய, மருத்துவர்களுக்கு அதிக நேரத்தையும், உயிர் வாழும் வாய்ப்பையும் அளித்துள்ளது.
3.பிப்ரவரி 2020ல், கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான மருந்துகள், மருத்துவர்களிடம் இல்லை. இதனால் ஏற்படும் சிக்கல்களுக்கு மட்டுமே சிகிச்சை அளித்தோம். எனவே, பெரும்பாலானநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இப்போது நம்மிடம், இரண்டு முக்கியமான மருந்துகள் உள்ளன.
முன்னெச்சரிக்கை
அவை, பாவிபிராவிர் மற்றும் ரெம்டெசிவிர். கொரோனா வைரசை கொல்லக்கூடிய ஆன்டிவைரல்கள் இவை. இந்த இரண்டு மருந்துகளையும் பயன்படுத்துவதன் மூலம், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவதை தடுக்கலாம். எனவே, அவர்கள் ஹைப்போக்சிமியாவுக்கு செல்வதற்கு முன் அவற்றை குணப்படுத்தலாம். இதை பிப்ரவரியில் கண்டறியவில்லை.
4. பல கொரோனா நோயாளிகள், வைரஸ் காரணமாக மட்டுமல்ல, 'சைட்டோகைன் ஸ்டோர்ம்' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாலும் இறக்கின்றனர். சைட்டோகைன் ஸ்டோர்ம் எனப்படும், வேதியியல் போர் மிகைப்படுத்தப்பட்ட முறையில் ஆட்டத்தை தொடங்குகிறது.இந்த வேதியியல் போர், வலுவான புயலாக மாறி, வைரஸ் பாதித்த செல்களை மட்டுமில்லாமல், நல்ல ஆரோக்கியமான செல்களையும் அழிக்கிறது.
இதனால், எல்லா உறுப்புகளுக்கும் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைபட்டு, உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்படுகிறது. பிப்ரவரியில் அது நடப்பதை எவ்வாறு தடுப்பது என்று தெரியாது. ஜூன் மாதத்தில், 'ஸ்டீராய்டுகள்' எனப்படும் மருந்து, சில நோயாளிகளுக்கு சைட்டோகைன் புயலைத் தடுக்க உதவுகிறது. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் இதை பயன்படுத்துகின்றனர். கொரோனாவைப் பற்றி பீதியடைய ஒன்றுமில்லை. ஆரம்பத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்வாழ்வதற்கான, சிறந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைவில் கொள்கிறோம்.
எனினும், தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவோம்.மக்களின் எதிர்காலம், அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியில் மட்டுமே உள்ளது. கம்ப்யூட்டர்களின் உள்ளே, 'இன்டெல் சிப்' இருப்பது போல, நமக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை, நாம் கட்டமைக்க வேண்டும்.ஆரோக்கியமாக இருங்கள்; மகிழ்ச்சியாக இருங்கள்.
ஏழைகளுக்கு உதவுங்கள்
நீங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தினால், உங்களால் உங்கள் அருகில் உள்ளவர்களை காப்பாற்ற முடியும். உலக பொருளாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளதால், தங்களால் இயன்ற அளவு, ஏழைகளுக்கு உதவுங்கள். அகிம்சையே வெல்லும் என்பது போல, புலால் உணவை முற்றிலும் தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.கொரோனா பாதிப்பு அடைந்து இறந்தவர்களை காட்டிலும் வேலை இல்லாமலும், பசி, பட்டினியில் தவிக்கும் மக்கள் தொகை மிகவும் அதிகம்.
சீனாக்காரன், வரைமுறை இன்றி, எல்லா காட்டு விலங்குகளையும் தின்றதன் விளைவு தான், இன்று, மனித இனம் சந்திக்கும் இன்னலுக்கு காரணம்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, ஊரடங்கு எந்த வகையிலும் உதவப்போறது இல்லை. இதனால் வறுமையும், பஞ்சம், பட்டினி சாவு தான் அதிகம் ஆகும்.மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் இந்த நோயை எதிர்த்து போராடுவது மிகவும் சிரமம். தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி, முக கவசம், நோய் எதிர்ப்பு சக்தி அதிக முள்ள சத்தான உணவு அவசியம். சுகாதாரத்துடன் இருப்பது தான் முக்கியம்.நம் நாட்டில், காச நோய், நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் ஏற்படும்
உயிரிழப்பை விட, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் குறைவு.என்ன தான் குழந்தைகளை, சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேஷன், ரெசிடென்ஷியல் பள்ளிகளில் படிக்க வைத்தாலும், தாய் - தந்தை கற்றுத்தரும் நல்ல பழக்க வழக்கங்களால் மட்டுமே, நல்ல பிள்ளைகளை உருவாக்க முடியும். அதே போல, மக்கள் சுய ஒழுக்கம், சமூக ஒழுக்கம், சுகாதாரம், சைவம் உண்ணுதல் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றினால் மட்டுமே, கொரோனாவிலிருந்து விடை கிடைக்கும்!
தொடர்புக்கு:
டாக்டர்.அ.பிரபுராஜ்
மருத்துவர்
சென்னை - 600 014
9884353288
இ - மெயில்: prabhuraj.arthanareegmail.com