தமிழகத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில், எப்படியாவது இரண்டு இலக்க தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில், பா.ஜ., தலைமை உறுதியாக உள்ளது.

பிரபலமானவர்களை கட்சியில் இணைத்து, வாக்காளர்களை தன் பக்கம் இழுக்க, முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர் கட்சி தலைவர்கள். முருகன், மாநில பா.ஜ., தலைவரான பிறகு, இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, பா.ஜ.,வில் சேர்ந்தது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கட்சிக்கு புத்துணர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இவர், இனிமேல் கட்சி தொடர்பான விவாதங்களில், 'டிவி'க்களில் கலந்து கொள்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய தொலைக்காட்சிகளிலும், இவர் பங்கேற்பார் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.தவிர, கட்சி தொண்டர்களிடையேயும் உரையாற்றி, அவர்களை ஊக்குவிக்கவும், அண்ணாமலையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு கொடுக்கவும், கட்சி தலைமை யோசித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பழைய தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, முற்றிலும்புதியவர்களை பதவிக்கு கொண்டு வர வேண்டும் என, பா.ஜ., தலைமை திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாகவும், கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழக பா.ஜ., தலைவர் முருகன் எப்போது டில்லிக்கு வந்தாலும், ஏதாவது ஒரு வி.ஐ.பி.,யை கட்சியில் சேர்க்க வருகிறார் என, டில்லி பா.ஜ., தலைவர்கள் சந்தோஷப்படுகின்றனர். மறுபடியும் டில்லி வரவிருக்கிறாராம் முருகன். இந்த முறையும், பிரபலமான ஒருவர் பா.ஜ.,வில் இணையப்போகிறாராம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE