புதுடில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு ரூ.1 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. செப்.,15க்குள் கட்ட தவறினால் 3 மாதம் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை, 'டுவிட்டரில்' விமர்சனம் செய்தது தொடர்பாக, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்துள்ளது.இந்த வழக்கில், பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை குறித்த வாதங்கள், கடந்த வாரம் துவங்கின. அப்போது, டுவிட்டரில் தெரிவித்த கருத்திற்கு, இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷனுக்கு, நீதிமன்றம் 3 நாள் அவகாசம் அளித்தது.

அந்த கால அவகாசமும் முடிந்த நிலையில், 24ம் தேதி பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த பதில் மனுவில், 'நான் நம்பும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில் தான் கருத்து தெரிவித்து இருந்தேன். 'அது குறித்து நிபந்தனைகளோடோ, நிபந்தனைகளற்றோ, மன்னிப்பு கோருவது சரியாக இருக்காது. 'அது என் மனசாட்சிக்கு, அவமதிப்பு செய்யும் வகையில் இருக்கும். எனவே, எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை, ஏற்றுக் கொள்ள தயார்' என, தெரிவித்திருந்தார்.
இதன்பின், நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது: தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில், தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள, பிரசாந்த் பூஷன் மறுக்கிறார். மன்னிப்பு கேட்பதால், என்ன குறைந்து விட போகிறது; மன்னிப்பு என்பது மோசமான வார்த்தையா; மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்பவரிடம், இனி இதுபோன்று செய்யக் கூடாது என, கண்டிப்பதில் அர்த்தமில்லை. வரும், 2ம் தேதியுடன், நான் ஓய்வுபெறப் போகிறேன். இந்த நேரத்தில், இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பது வருத்தமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

இந்நிலையில், இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த அபராதத்தை செப்.,15க்குள் கட்ட வேண்டும். தவறினால் 3 மாதம் சிறை மற்றும் 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE