புதுடில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 அபராதத்தை செலுத்த ஒப்பு கொள்வதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில், இரண்டு முறையும் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனையடுத்து இன்று, அவருக்கான தண்டனையை அறிவித்த நீதிமன்றம், பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதிப்பதாகவும், அதனை செலுத்த தவறினால் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டு வழக்கறிஞராக பணிபுரிய தடை விதிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரசாந்த் பூஷன் நிருபர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுகிறேன். எந்தவொரு சட்டப்பூர்வமான தண்டனைக்கும் நான் கட்டுப்படுவேன் என்பதால், மரியாதையுடன் அபராதத்தை செலுத்துவேன். எனக்கான தண்டனையை மறு சீராய்வு செய்ய கோர எனக்கு உரிமை உள்ளது. இந்த விவகாரமானது எனக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் எதிரானதல்ல. எந்த நீதிபதிக்கும் எதிரானதல்ல.
உச்சநீதிமன்றம் வெற்றி பெறும் போது, ஒவ்வொரு இந்தியரும் வெற்றி பெறுகிறார். நீதிமன்றம் பலவீனமடையும் போது, அது குடியரசையும் பலவீனப்படுத்தும். உண்மை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த வழக்கு, பேச்சுசுதந்திரத்திற்கு ஒரு முக்கியமான தருணமாக உள்ளது. சமூகத்தில் நிலவும் அநீதிக்கு எதிராக பேச வேண்டும் என பலரை தூண்டியுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE