மாமூல் பெய்டு... போலீஸ் எய்டு... ஸ்டாலின் ரெய்டு!| Dinamalar

மாமூல் 'பெய்டு'... போலீஸ் 'எய்டு'... ஸ்டாலின் 'ரெய்டு!'

Added : செப் 01, 2020
Share
ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுப்பு அறிவித்திருந்ததால், நகர் வலம் செல்லாமல், வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.ஓணம் ஸ்பெஷல் பாயாசத்துடன் வந்த மித்ரா, ''என்னக்கா, ஏதாச்சும் முக்கிய செய்தி இருக்கா, வரி விடாமல் படிக்கிறீங்களே,'' என, கிளற ஆரம்பித்தாள்.''கார்ப்பரேஷன் கமிஷனரை மாத்திட்டாங்களாமே; கொரோனா பரவலை கட்டுப்படுத்த
 மாமூல் 'பெய்டு'... போலீஸ் 'எய்டு'... ஸ்டாலின் 'ரெய்டு!'

ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுப்பு அறிவித்திருந்ததால், நகர் வலம் செல்லாமல், வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.ஓணம் ஸ்பெஷல் பாயாசத்துடன் வந்த மித்ரா, ''என்னக்கா, ஏதாச்சும் முக்கிய செய்தி இருக்கா, வரி விடாமல் படிக்கிறீங்களே,'' என, கிளற ஆரம்பித்தாள்.''கார்ப்பரேஷன் கமிஷனரை மாத்திட்டாங்களாமே; கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாம, தடுமாறியதால், மாத்தியிருக்கறதா சொல்லியிருக்காங்க. வேறேதும் தகவல் இருக்கா,'' என, துருவ ஆரம்பித்தாள் சித்ரா.''அக்கா, முரண்டு பிடிக்கிற அதிகாரிகளை முடக்கி வைக்கற வேலையை, ஆளுங்கட்சி தரப்புல ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பொதுப்பணித்துறை அதிகாரியை, பவானி சாகருக்கு மாத்துனாங்க. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமாரை, பணியில் இருந்து விடுவிச்சிட்டாங்க; வேற பதவி ஒதுக்காம, காத்திருப்போர் பட்டியலில் வச்சிருக்காங்க. கார்ப்பரேஷன் கமிஷனரை, வேளாண் துறைக்கு மாத்தியிருக்காங்க,''''அப்படி, என்னப்பா பிரச்னை,''''கொரோனா பரவல் அதிகரிப்பு மட்டுமே காரணம் இல்லையாம். ஆளுங்கட்சி வி.ஐ.பி., அனுமதி இல்லாமல், நாலு பைல், 'ஜம்ப்' ஆகி போயிருக்கு. விசாரணை நடத்தி, 'பட்டுவாடா' செய்றதை நிறுத்திட்டாங்களாம். அந்த கம்பெனிக்காரங்க, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அலுவலகத்துக்கு வந்துட்டு போனாங்களாம்,''''அப்புறம், டிராவல்ஸ்காரருடன் வச்சிருந்த நெருங்கிய நட்பும் ஆபத்துல முடிஞ்சிருக்கு. அவரை தொடர்பு எல்லைக்கு வெளியே வைக்கச்சொல்லி, புத்திமதி சொல்லியிருந்தாங்களாம்; இருந்தாலும், நட்பு தொடர்ந்திருக்கு. அப்ரூவல் சம்பந்தமான விசயத்துல, மண்டல அதிகாரிகளுக்கு பொறுப்பை பிரிச்சுக் கொடுத்தது, புகைச்சலை அதிகமாக்கிருச்சாம்,''''உதவி கமிஷனர் நியமனத்திலும் அரசு உத்தரவை மீறிட்டாருன்னு சொன்னாங்களே,''''ஆமாக்கா, நிர்வாக நலனுக்காக, உதவி கமிஷனர்களுக்கு வெவ்வேறு பணியிடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தாரு. அதுவும், அரசின் கவனத்துக்கு போயிடுச்சு,''அப்போது, தனது மொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்த சித்ரா, ''மித்து, கார்ப்பரேஷனுக்கு புதுசா நியமிச்ச கமிஷனர், 'ஜாயின்' பண்ணிட்டாராமே,''''ஆமாக்கா, எனக்கும் மெசேஜ் வந்திருக்கு. ஆளுங்கட்சி தரப்புக்கு வேண்டப்பட்டவருன்னு சொல்றாங்க. அப்புறம், களையெடுக்குற லிஸ்ட்டுல, இன்னும் ஐந்து அதிகாரிகள் பெயர் இருக்குதாம். அவங்க சிக்குவாங்களா; நழுவுவாங்களான்னு தெரியலை,'' என்ற மித்ரா, ''ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பி.ஆர்.ஜி.,யை சமாதானம் செஞ்சிட்டாங்க போலிருக்கே,'' என, 'ரூட்' மாறினாள்.''ஆமா, மித்து! சென்னைக்கு போயி, ஜெ., சமாதியில் மலரஞ்சலி செலுத்திட்டு, முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்திச்சு, பொக்கே கொடுத்திருக்காரு. அதே மாதிரி, ஓ.பி.எஸ்.,சையும் சந்திச்ச பிறகு, கட்சி பொறுப்பை ஏத்துக்குவாராம்,''''கூட்டத்துக்கு கூட வராம, அதிருப்தியில் இருந்தாரே! எப்படி, மனசு மாறுனாரு,'' என, கொக்கி போட்டாள் மித்ரா.''அதுவா, வடக்கு தொகுதிக்குள்ள, அவரது பரிந்துரை இல்லாம, புது நிர்வாகிகள் நியமிக்க மாட்டோம்னு உறுதி சொல்லியிருக்காங்களாம். அதனால, மறுபடியும் தெம்பு வந்திருக்கு,'' என்ற சித்ரா, ''தி.மு.க.,வுல புதுசு புதுசா பதவி உருவாக்கி, நிர்வாகிகளை நியமிக்கிறாங்களாமே,'' என, கேட்டாள்.''ஆமா, உண்மைதான்! பகுதி கழக செயலாளர் பதவியை கலைச்சிட்டு, பகுதி கழக பொறுப்பாளர், உறுப்பினர் பதவி உருவாக்கி, ஏகப்பட்ட பேருக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க,''''இப்ப, ரெண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிச்சிருக்காங்க. மாவட்ட செயலாளரே, தேர்தலில் போட்டியிட, 'சீட்' கொடுத்தால், இன்னொரு தொகுதியில் கவனம் செலுத்த முடியாத நிலைமை வரும்னு தலைமை யோசிச்சிருக்கு. அதனால, இனிமே, தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப் போறாங்களாம்,''''எப்ப பார்த்தாலும், தி.மு.க., - அ.தி.மு.க.,வை பத்தியே சொல்றியே. மத்த கட்சிகளை பத்தி சொல்லுப்பா,''''அக்கா, காங்கிரசுல இருக்கற மாதிரியே, பாரதிய ஜனதாவிலும் ஏகப்பட்ட கோஷ்டி இருக்காம்; இன்னைக்கு நிலவரப்படி, அஞ்சு கோஷ்டி செயல்படுதாம். எப்படி தேர்தலை சந்திச்சு, தாமரையை மலர வைக்கப் போறாங்கன்னு தெரியலை,''''அதிருக்கட்டும், போலீஸ்காரங்க நடுநடுங்கிட்டு இருக்காங்களாமே,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினாள் மித்ரா.''யெஸ், மித்து! புதுசா வந்திருக்கிற துணை கமிஷனர் ஸ்டாலின், ராத்திரி 10:00 மணிக்கு மேல், 'மப்டி'யில் 'ரவுண்ட்ஸ்' போறாரு; ஆயுதப்படை போலீசாரையும், 'மப்டி'யில் அழைச்சிட்டு போறாராம். காந்திபுரம் ஏரியாவில், இரண்டு மதுக்கடைகளில், அதிக விலைக்கு மது விற்பதை கண்டுபிடிச்சிருக்காரு,''''உடனே, அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை, மைக்கில் அழைத்து, 'உங்க ஏரியாவுல இல்லீகல் சேல்ஸ் நடக்குதாமே' என, கேட்டிருக்கிறார்.மறுமுனையில், 'சார், என்னோட ஏரியாவுல அப்படி நடக்காதுன்னு' சொல்லிருக்காரு இன்ஸ்.,கோபமடைந்த துணை கமிஷனர், 'காந்திபுரம் கடைக்கு முன்னாடி தான் நிற்கிறேன்; இல்லீகல் சேல்ஸ் நடந்திட்டிருக்கு'ன்னு சொன்னதும், பத்தே நிமிடத்தில் இன்ஸ்பெக்டரும், உதவி கமிஷனரும், அங்கு, ஆஜரானாங்களாம். அவுங்களை, கடுமையா, 'வார்ன்' செஞ்சிட்டு கெளம்புனாராம். இதை கேள்விப்பட்ட, மத்த ஸ்டேஷன் அதிகாரிகள் வெலவெலத்து போயிருக்காங்களாம்,''''மதுக்கடைக்காரங்க மாமூல் கொடுக்கறாங்க... அதுக்காக போலீஸ் அவங்களுக்கு 'எய்டு' பண்றாங்க... அத, தடுக்க ஸ்டாலின் 'ரெய்டு' பண்றாரு... அதிரடி தொடர்ந்தா நல்லதுதானே... அதெல்லாம் சரி, வாஸ்து படி, ஸ்டேஷன் வாசலை மாத்தி கட்டியிருக்காங்களாமே,''''அதுவா, துடியலுார் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு ஏகப்பட்ட வழக்கு வந்திட்டே இருக்கு; போக்சோ வழக்கு அதிகமாயிட்டே போறதுனால, வாசலை மாத்தி அமைச்சா, பிரச்னை சரியாகிடும்னு வாஸ்து நிபுணர் சொல்லியிருக்காரு. அதை நம்பி, தெற்கு நோக்கி இருந்த வாசலை, வடக்கு பக்கமா மாத்தியிருக்காங்களாம்,'''' சரியாப் போச்சு, யார் கொடுத்த ஐடியாவோ?'' என்றபடி, 'டிவி'யை, 'ஆன்' செய்தாள் மித்ரா.ஊரடங்கு தளர்வு தொடர்பான, வழிகாட்டு நெறிமுறை வெளியாகிக் கொண்டிருந்தது. இருந்தாலும், பள்ளி, கல்லுாரிகளுக்கான தடை தொடரும்னு சொன்னதை கேட்ட சித்ரா, ''நம்மூரை, நாலு கல்வி மாவட்டமா பிரிச்சிருக்காங்க. இதுல, பேரூர், கோவை நகர், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கான பணியிடம் காலியா இருக்கு; இப்பதவிகளை கைப்பத்துறதுக்கு ஏகப்பட்ட பேரு போட்டி போடுறாங்களாம்,''''சி.இ.ஓ., ஆபீசுல வேலை பார்க்கற ஒருத்தரு, யாரெல்லாம் பதவிக்கு ஆசைப்படுறாங்கன்னு லிஸ்ட் ரெடி செஞ்சு, பல லகரங்களில் பேரம் பேசிட்டு இருக்காராம். இயக்குனரகத்துடன் தொடர்பில் இருக்குற உயரதிகாரிகளுடன், 'டச்'சில் இருக்கறதால, சக்தி வாய்ந்தவர் போல், ஆபீசுக்குள் வலம் வர்றாராம். லஞ்ச ஒழிப்புத்துறை, அப்படியே... கண்காணிப்பை தீவிரப்படுத்துவது நல்லது,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X