உலக சக்தியாக மாற இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும்| Dinamalar

'உலக சக்தியாக மாற இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும்'

Updated : செப் 02, 2020 | Added : செப் 02, 2020 | கருத்துகள் (10)
Share
வாஷிங்டன் : 'உலக சக்தியாக இந்தியா உருவெடுக்க உதவி செய்வோம்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப்., எனப்படும் அமெரிக்க - இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், 'இந்திய, அமெரிக்க லீடர்ஷிப் மாநாடு' நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஸ்டீபன் பீகன் பேசியதாவது: உலகின் இரண்டு பழமையான மற்றும் மிகப்
india, america, world, uinitedstates, china, us,  இந்தியா, அமெரிக்கா,உலகசக்தி, சீனா,

வாஷிங்டன் : 'உலக சக்தியாக இந்தியா உருவெடுக்க உதவி செய்வோம்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப்., எனப்படும் அமெரிக்க - இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், 'இந்திய, அமெரிக்க லீடர்ஷிப் மாநாடு' நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஸ்டீபன் பீகன் பேசியதாவது: உலகின் இரண்டு பழமையான மற்றும் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கடந்த, 20 ஆண்டுகளில் பெரும் வலிமையைப் பெற்றுள்ளது.உலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும். அதற்கு, அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும். இதில், இந்தியா - அமெரிக்கா இடையேயான, ராணுவ ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும். ராணுவ பலத்தில், இந்தியா தற்சார்பு அடைந்து வருகிறது. எந்த நாடும், ராணுவ பலத்தில் மற்ற நாடுகளையே முழுமையாக சார்ந்திருக்க விரும்பாது.

கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பிரதமர்களாக இருந்தவர்கள், இந்திய - அமெரிக்க நட்புறவில் பெரும் ஆர்வம் காட்டியதை மறக்க முடியாது, மறுக்கவும் முடியாது. பயங்கரவாதத்தை எதிர்க் கொள்ளவும், வளர்ச்சியடையவும், இரு நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட, இரு நாட்டு தலைவர்களும் விரும்பினர். இன்று, ராணுவம் மட்டுமின்றி, விண்வெளி ஆய்வு, எரிசக்தி பாதுகாப்பு உட்பட பல துறைகளில், இந்தியாவும், அமெரிக்கவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.நெருங்கிய உறவுகளில் தடைகள், பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால், இவற்றை பேச்சு மூலம் தீர்வு காண்பதில், இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil news
தேர்தலுக்கு முன் வர்த்தக ஒப்பந்தம்


'அதிபர் தேர்தலுக்கு முன், இந்தியா - அமெரிக்கா இடையே சிறிய அளவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்காவின் வெளியுறவு துணை அமைச்சர், ஸ்டீபன் பீகன் கூறினார்.

மாநாட்டில் இது பற்றி அவர் கூறியதாவது: பொருளாதார உறவுகளை மேம்படுத்த, வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் கருத்து வேறுபாடுகளை நீக்குவதில், இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில், பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன், இரு நாடுகளுக்கு இடையே சிறிய அளவில், வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


இந்தியா இன்றி வெற்றி பெறாது


'இந்திய - பசிபிக் பிராந்தியம் தற்சார்புடன் திகழவும், ஆதிக்க சக்திகளை ஒடுக்கவும், இந்தியாவின் பங்கு அவசியம்' என, அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர், ஸ்டீபன் பீகன் கூறினார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும் என்பதில், அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்த பிராந்தியம் தற்சார்புடன் திகழ, இந்தியாவின் பங்கு அவசியம். இந்தியா இன்றி, இந்த பிராந்தியத்தில் எதுவும் வெற்றி பெறாது. இந்திய -- பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தி, ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.


சீனாவை ஓரங்கட்டுவோம்: அமெரிக்கா அறைகூவல்


''சர்வதேச நலனுக்கு எதிராக நடக்கும் சீனாவை, அனைத்து மட்டத்திலும் ஓரங்கட்டுவோம்,'' என, அமெரிக்க வெளியுறவு துறை இணை அமைச்சர் ஸ்டீபன் பீகன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சீனாவை ஒவ்வொரு நிலையிலும் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். அதை, பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளில், அமெரிக்கா செய்து வருகிறது. அதுபோல, இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கு பிரச்னை, தென் சீனக் கடல் பகுதியை உரிமை கோரும் விவகாரம் ஆகியவற்றில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன், உலக வர்த்தக அமைப்பில், சீனா இணையும் போது, அந்நாட்டுக்கு சிறப்பு உரிமைகள் அளித்து, நவீன உலகத்துடன் இணைக்கவே, அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகள் விரும்பின. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தனக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாய்ப்பையும், சீனா வீணாக்கி விட்டது.பிற நாடுகளின் நிலம் மற்றும் கடற்பகுதிகளை ஆக்ரமிக்கும் முயற்சி முதல், தொழில்நுட்பங்களை திருடுவது வரை அனைத்து கைவரிசைகளையும் சீனா காட்டி வருகிறது. சீனா, திபெத்தின் பாரம்பரிய கலாசாரத்தை அழிக்க முயற்சிக்கிறது.

பிரிட்டன் உடன் செய்த ஒப்பந்தத்தை மீறி, ஹாங்காங்கை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம்களின் நம்பிக்கை மற்றும் வரலாற்று பண்பாட்டை சிதைக்க முயல்கிறது. அமெரிக்கா உடனான பரஸ்பர வர்த்தகத்தில், சுயலாபத்தில் குறியாக உள்ளது. அண்டை நாடான இந்தியாவில், எல்லை தகராறில் ஈடுபடுகிறது. அதனால், சீனா எடுக்கும் எந்தவொரு நிலைப்பாட்டிற்கும் எதிராகவே அமெரிக்கா நடந்து கொள்ளும். சீனாவை, அனைத்து மட்டத்திலும் ஓரங்கட்டுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X