புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் எம்பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்., எம்பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் பணமதிப்பிழப்பை அறிவித்தார். அதனால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பயனற்று போயின. ஒட்டுமொத்த இந்தியாவும் வங்கிகளின் வாசல்முன் நின்றன. இது கருப்பு பணத்தை ஒழித்ததா? இந்தியாவில் ஏழை மக்கள் பணமதிப்பிழப்பினால் பெற்ற பயன் என்ன? என்றால் விடை ஒன்றுமே இல்லை. அப்படியானால் பணமதிப்பிழப்பினால் யார் பயனடைந்தது? இந்தியாவின் கோடீஸ்வரர்கள் மட்டுமே அதில் பயனடைந்தனர். உங்கள் சட்டை பைகளில், நீங்கள் சம்பாதித்த உங்கள் பணம் அரசாங்கத்தால் பெருமுதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய பயன்படுத்தப்பட்டது. இது அவரின் முதல் லட்சியமே. இரண்டாவது இலட்சியம் நம் ஒட்டுமொத்த அமைப்பிலிருந்தே பணத்தை துடைத்தெடுப்பதுதான்.

ரொக்க பரிவர்த்தனையில் இயங்கும் அமைப்புசாரா பொருளாதாரத்தை உள்ளடக்கியதுதான் முறைசாரா துறை. சிறுகடை வியாபாரி, விவசாயிகள், தொழிலாளிகள் ரொக்க முறையில்தான் தொழில் செய்கின்றனர். முறைசாரா, அமைப்புசாரா வகை மூலமாக புழங்கிவரும் ரொக்க பணத்தையும், பணமதிப்பிழப்பின் மூலமாக ஒழிப்பதுதான் இரண்டாவது லட்சியம். ரொக்க பரிவர்த்தனை இல்லா இந்தியா தான் தேவை என பிரதமரே கூறினார். ஆனால் இந்தியாவில் ரொக்க பரிவர்த்தனை என்பதே இல்லாமல் போனால், சிறு கடைகள், விவசாயிகள், சிறு தொழிலாளர்களே இல்லாமல் போய்விடுவார்கள்.

ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டனர். பணமதிப்பிழப்பு இவர்கள் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல். பணமதிப்பிழப்பு அமைப்புசாரா பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல். இந்த தாக்குதலை நாம் அடையாளம் காண வேண்டும். ஒட்டுமொத்த தேசமே இதனை எதிர்த்து போராடவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE