சென்னை: கடந்த ஜூலை, 25ம் தேதியிட்ட, 'தினமலர்' இதழில், 'இது உங்கள் இடம் பகுதி'யில், கோவையிலிருந்து கருத்து தெரிவித்திருந்த இல.ஆதிபகவன் எனும் வாசகர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
அதில், 'நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் ஒன்றும் ஹிந்து விரோதி அல்ல என்று... அப்படியானால், விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள். தி.மு.க.,வினர், தங்கள் வீடுகளில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம் என, அறிக்கை வெளியிடுங்களேன்...' என, வினவிஇருந்தார்; அதற்கு தி.மு.க., தரப்பில் பதில் இல்லை.ஆனால், விநாயகர் சதுர்த்தி நாளில், ஸ்டாலின் மகன் உதயநிதி, சிறிய விநாயகர் சிலை ஒன்றை வைத்திருப்பதைப் போன்ற படத்தை, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதன்மூலம், 'தி.மு.க., ஒன்றும் ஹிந்து விரோத கட்சி அல்ல' என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, கட்சிசாரா நடுநிலை ஹிந்து வாக்காளர்களை தன்பால் ஈர்க்கவும் முற்பட்டார்.
'கருப்பர் கூட்டத்தின்' பின்புலத்தில் தி.மு.க., இருப்பதாக படிந்திருந்த கறையை கழுவவும் முயன்றார்.விநாயகர் சிலையுடன் போஸ்ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, மறுநாள், 'நான் சாமி கும்பிடுவதில்லை; என் மனைவியும் கும்பிட மாட்டார்; தாய் மட்டும் தான் கும்பிடுவார்...' என, எப்படி எல்லாம் மழுப்ப முடியுமோ, அப்படியெல்லாம் சம்பந்தமில்லாமல் கஷ்டப்பட்டு வார்த்தைகளைத் தேடி கண்டுபிடித்து மழுப்பினார்.உதயநிதியின் பிள்ளை, விநாயகர் சதுர்த்தி குறித்து கேட்டாராம்... அதற்காகவே விநாயகர் சிலையை அவர் எடுத்து காண்பித்தாராம். அவ்வாறே செய்திருந்தாலும், விநாயகர் சதுர்த்தி குறித்து பிள்ளைக்கு எடுத்துச் சொல்ல மட்டும் செய்ய வேண்டியதுதானே? எதற்காக, விநாயகர் சிலையுடன் போஸ் கொடுக்க வேண்டும்; அதையும் எடுத்து சமூக வலைதளத்தில் போட வேண்டும்; மறுநாள், 'நான் சாமி எல்லாம் கும்பிடுவதில்லை; ஒரிஜினல் தி.மு.க.,காரன்' என, அறிக்கை விட வேண்டும்?
நடுநிலை ஹிந்து வாக்காளர்களின் ஓட்டுகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் தி.மு.க., தலைமையும், வாரிசும் என்னதான், 'சால்ஜாப்பு' செய்தாலும், அவ்வப்போது, தமிழன் பிரசன்னா போன்ற சில 'கறுப்பு ஆடுகள்' தலைதுாக்கி காரியத்தைக் கெடுத்து விடுகின்றன.
ஆம், தி.மு.க., செய்தித் தொடர்பாளர், பிரிவு இணைச் செயலரான இவர், 'ஓணம்' வாழ்த்துகூறி, டுவிட்டரில் வெளியிட்டிருந்த, பிராமண சமூகத்துக்கு எதிரான அவதுாறு கார்ட்டூன், தி.மு.க.,வின் பச்சோந்தி முகத்தை பட்டவர்த்தனமாக காட்டிவிட்டதாக, பலரும் குற்றஞ் சாட்டுகின்றனர். இவரது செயல், பிராமண சமூகத்துக்கு எதிரான, வன்ம தாக்குதலாகவும் பார்க்கப்படுகிறது.

அதாவது, மலைநாட்டை ஆண்ட மகாபலி மன்னனின் அகங்காரத்தை அடக்க, வாமனராக அவதாரமெடுத்த திருமால், 3 அடி நிலம் கேட்டு, மகாபலியை பாதாளத்தில் அழுத்தி, முக்தியும் கொடுத்தார் என்பது ஐதீகம்.காலங்காலமாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் அந்த இறை நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக, குள்ள பிராமணராக வடிவமெடுத்து வந்த திருமாலை, அவர் அணிந்திருக்கும் பூணுாலுடன் துாக்கி, மகாபலி தொங்கவிடுவது போன்று, கார்ட்டூனில், கசடு கருத்தை திணித்து, ஹிந்து கடவுளையே நிந்திக்கத் துணிந்திருக்கிறார், பிதற்றல் பிரசன்னா.
இது, ஹிந்து விரோத செயல் அல்லவா? இவரது கருத்தை ஆமோதிக்கிறதா தி.மு.க., தலைமை? தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, 'நாங்கள் ஹிந்து விரோதி இல்லை; தி.மு.க.,வில் ஹிந்துக்கள் ஒரு கோடி பேர் இருக்கின்றனர்' என்கிறாரே... அது உண்மையா அல்லது பிரசன்னாவின் கருத்துக்கு பின்னால் நிற்கும் தி.மு.க.,வின் நிலைப்பாடு உண்மையா?
திருமால், 10 அவதாரம் எடுத்தார். ஐந்தாவது அவதாரம் தான், வாமன அவதாரம். மன்னன் மகாபலியின் அகங்காரத்தை அடக்க, குள்ள அந்தணனாக (வாமன) அவதாரமெடுத்து, திருமால் முக்தி கொடுத்தார் என்பது, ஐதீகம். அந்த அவதாரத்துக்கான விழாவிற்குத்தான், ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கிறார்.

அட்டூழியக் கார்ட்டூன்
ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த பிரசன்னா என்பவரோ, வாமன அவதாரத்தில் வந்த குள்ள அந்தணனை, பூணுாலுடன் மகாபலி துாக்கி நிற்பது போல, அட்டூழியக் கார்ட்டூனை வெளியிட்டு, வாழ்த்தும் கூறியிருக்கிறார்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் செயலும், அவரது கட்சியினரின் செயலும் எப்படி இருக்கிறது என்றால், 'பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுவது' போன்று இருக்கிறது!மக்கள் மத்தியில், தி.மு.க.,வை ஹிந்து எதிர்ப்பாளராக காட்டிக்கொள்வதா, பிராமண எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொள்வதா அல்லது ஓட்டுகளைப் பெற, ஹிந்து ஆதரவாளர்களாக பிரகடனப்படுத்திக் கொள்வதா என்ற குழப்பத்தில், அதன் தலைமை இருப்பதையே, மேற்கண்ட சம்பவங்கள் காட்டுகின்றன.
இந்த குழப்பத்தை போக்க, தெளிவான நிலைப்பாட்டை ஸ்டாலின் அறிவிப்பது நல்லது. ஹிந்துக்களால் கொண்டாடப்படும் எந்த ஒரு பெரிய பண்டிகையும், விழாவும் பிராமணர் சம்பந்தப்பட்ட விசேஷம் கிடையாது. ஓணம் பண்டிகையிலும், அப்படியொரு கூற்று முன்னிலை படுத்தப்படுவதில்லை. அவ்வாறிருக்க, பிராமணர்களுக்கு எதிரான துவேஷத்தை, பிரசன்னா போன்றவர்கள் விஷமாக கக்க வேண்டிய அவசியம் என்ன?
மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்!
தி.மு.க., தலைமை, முதலில் ஒன்றை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தி.மு.க., ஹிந்து விரோதியா, ஆதாரவாளர்களா; பிராமண எதிர்ப்பாளர்களா என்ற நிலைப்பாட்டை, உண்மையை உலகுக்கு சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லாத வரை, மக்களும் தெளிவில்லாமல்தான் இருப்பர்.'தி.மு.க.,வில் இருப்பவர்களில், 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள்' என, அதன் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, இன்னும் எத்தனை நாட்களுக்கு, வளைந்து, நெளிந்து பேசினாலும் மக்கள் நம்பமாட்டார்கள்.
இவ்விஷயத்தில் தி.மு.க., தலைமைக்கே தெளிவு இல்லாவிடில், மக்களுக்கு எப்படி தெளிவு ஏற்படும். இனியும், 'மதில் மேல் பூனை'யாக இருக்காமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.இல்லாவிடில், கிறிஸ்துவர்களின் ஓட்டும், இஸ்லாமியர்களின் ஓட்டும் கூட, தலைமையின் குழப்பத்தால், தி.மு.க.,வுக்கு இல்லாமல் போய்விடும். தேர்தல் நெருங்குது ஸ்டாலின்... இனியும் குழப்பாதீர்கள்; 'நீங்கள் யார்' என, மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்!
-சாணக்கியன்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE