காங்., எழுவது கஷ்டம் தான்!

Updated : செப் 07, 2020 | Added : செப் 06, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
 காங்., எழுவது கஷ்டம் தான்!

நாட்டின் முதல் தேசிய கட்சியான காங்கிரஸ், விடுதலைக்கு முன், 1885ல், தோற்றுவிக்கப்பட்டது. தாதாபாய் நவ்ரோஜி, மதன்மோகன் மாளவியா, சுரேந்திரநாத் பானர்ஜி, சங்கரன் நாயர், கோபால கிருஷ்ண கோகலே, மோதிலால் நேரு போன்ற, தலைவர்களால் இந்திய விடுதலையை முன்னெடுத்துச் செல்ல துவக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சி.மஹாத்மா காந்தியுடன் இணைந்து, நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்து பல தியாகங்களை செய்த கட்சி தான் அது. எனினும், இப்போது அக்கட்சி நிலை மிகவும் பரிதாபமே.

நாட்டின் விடுதலைக்குப் பின், ஆச்சார்ய கிருபளானி, சித்தராமய்யா, ஜவஹார்லால் நேரு, இந்திரா, நீலம் சஞ்சீவ ரெட்டி, காமராஜர், நிஜலிங்கப்பா, ஜெகஜீவன் ராம் போன்ற பெரியவர்கள் தலைவராக இருந்த கட்சி அது. இப்போது, அதன் தலைவர் யார் என தேட வேண்டியதாக இருக்கிறது.பல பெருமைகள், புகழ், சிறந்த தலைவர்களையும் கொண்டிருந்த அந்த கட்சி இப்போது, நிரந்தர தலைவர் இன்றி, மாலுமி இல்லாத கப்பல் போல திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது.




சோனியாவுக்கு கடிதம்



தலைவராக நியமிக்கப்பட்ட, இந்திரா குடும்பத்தை சேர்ந்த ராகுல், சில ஆண்டுகளிலேயே, 'சீச்சி, இந்த பழம் புளிக்கும்...' என்று கூறி, வெளியேறி விட்டார். அவரின் தாய், சோனியாவுக்கு உடல் நலமில்லை. எனினும், கட்சியையும், கட்சியின் சொத்துகளையும் காப்பாற்ற, விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளார்.அவரை உசுப்பேற்றும் விதமாக, 'நிரந்தர, முழு நேர, சுறுசுறுப்புடன் செயல்படக் கூடிய, கட்சி அலுவலகங்களுக்கு வரக் கூடிய, முழு நேர தலைவர் தேவை' என, 20க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள், சோனியாவுக்கு கடிதம் எழுதினர். அதன் விளைவாக, கட்சியின் செயற்குழு கூட்டத்தை, சில நாட்களுக்கு முன் கூட்டினார் சோனியா. கொரோனா பீதியால், காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சி தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்த சோனியா, சில தலைவர்களை மிரட்டும் வகையில், 'இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகப் போகிறேன்' என அறிவித்தார்.'நேரு, இந்திரா குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான், கட்சிக்கு தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும்' என, பலர் இன்னும் தங்கள் குடும்பம் மீது உண்மை விசுவாசத்துடன் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த சோனியா, துருப்புச் சீட்டாக தன் முடிவை வெளியிட்டுப் பார்த்தார்.அவர் நினைத்தது போலவே, 'சோனியா தான், காங்., தலைவராக நீடிக்க வேண்டும்' என்று பெரும்பாலானோர் குரல் கொடுத்துள்ளனர்.

சிலர், ராகுல் தலைமையேற்க வேண்டும் என்றும் கோரினர்.உண்மையில் சொல்லப் போனால், அவ்விருவர் கட்டுப்பாட்டில் தான், கட்சி இப்போதும் உள்ளது. எனினும், அவ்வப்போது, 'ராஜினாமா' என நாடகம் ஆடி, கட்சியை வலுவாக தன் பிடிக்குள் வைத்திருக்கும் தொழில்நுட்பத்தை, சோனியா அறிந்துள்ளார்.மூத்த தலைவர்கள் யாரும், கட்சித் தலைவர் பதவிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் போன்றோர், பா.ஜ.,விடம் தொடர்பு வைத்துள்ளதாக, சோனியாவின் அரசியல் வாரிசு ராகுல், பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.




செயற்குழு கலைந்தது



அதைத் தொடர்ந்து, நீண்ட நேரமாக பேசியும், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படாததால், 'காங்கிரசுக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, சோனியாவே இடைக்கால தலைவராக நீடிப்பார்' என்று முடிவு செய்து, செயற்குழு கலைந்தது.காங்கிரசின் இப்போதைய தலைவருக்கு, அக்கட்சி வளர்ந்த விதம், முழுவதும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர், இடையில் தான், இந்தியா வந்தவர். காங்கிரஸ் முன்னாள் பிரதமர் ராஜிவின் மனைவியாக, இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவருக்கு, கட்சியின் முந்தைய தலைவர்களின் அருமை, பெருமைகள் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

காங்கிரஸ் தலைவர் பொறுப்பை வகித்த காமராஜர், நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எழும் உட்பூசல்களையும், கோஷ்டி பூசல்களையும், சுமுகமாக தீர்த்து வைத்தார்.நேரு பிரதமராக இருந்தபோது, சில சிக்கலான பிரச்னைகளை தீர்ப்பதற்கு, காமராஜரிடம் ஆலோசனை கேட்பார். நேருவிற்குப் பின், காங்கிரஸ் என்னாகுமோ என்று தொண்டர்கள் கவலைப்பட்ட நேரத்தில், இந்திராவை பிரதமராக்கி, கட்சிக்கும், ஆட்சிக்கும் வலு சேர்த்தவர் காமராஜர்.


அதுபோல, தமிழகத்தில், காங்கிரசை காக்க, வளர்க்க பாடுபட்ட தலைவர்களுள், ஜி.கே.மூப்பனாரும் ஒருவர். கட்சியின் பொதுச் செயலராக இருந்த போது, மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் கோஷ்டிப் பூசல்களை சுமுகமாக தீர்த்து வைத்துள்ளார்.ராஜிவ் மறைவுக்குப் பின், காங்கிரசை வழி நடத்திச் செல்ல திறமையான தலைவர்கள் இல்லை. ராகுல் மீது அதிக நம்பிக்கை வைத்த தொண்டர்களுக்கு, பல முறை ஏமாற்றத்தையே கொடுத்தார் ராகுல்.ராஜிவைப் போல, நல்ல கவர்ச்சியான தோற்றமும், சுறுசுறுப்பும் கொண்ட ராகுல், தந்தையைப் போலவே செயல்படுவார் என்று தொண்டர்கள் நினைத்தனர். ஆனால், அவர்கள் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக, ராகுலின் செயல்பாடுகள் இருந்தன.

துடிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ராகுல் காட்டிக் கொண்டாலும், அவரின் பேச்சும், செயல்களும், கட்சியினரை கூட கவரவில்லை. கட்சி அவர் தலைமையின் கீழ் இருந்த போது, தொடர்ந்து பல தேர்தல்களில் தோற்றது. தோல்விக்கு காரணம் கண்டறியாமல், தலைமை பொறுப்பிலிருந்து அஞ்சி விலகி ஓடினார் ராகுல். அதற்காக, அனுபவம் மிக்க மூத்த தலைவர்களை அனாவசியத்திற்கு விமர்சிப்பதும், அவ்வப்போது காணாமல் போவதும், ராகுலின் செயல்கள், கேலிக் கூத்தாகவும், நகைப்பிற்கிடமாகவும் அமைந்து விட்டன.காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை கட்டுக் கோப்பாக வைத்திருக்க, முன்னாள் பிரதமர் இந்திராவும், அவர் மகன் ராஜிவும் மிகவும் பிரயாசைப்பட்டனர்.


இரும்புப் பெண்



எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் எதிர் கொண்டு சமாளிக்கும் திறன், இந்திராவிடம் இருந்தது. அதனால் தான் அவர், 'இந்தியாவின் இரும்புப் பெண்' என, அழைக்கப்பட்டார்.தோல்வியைக் கண்டு துவளாத மனம் படைத்தவர் அவர். 1977ல், எமர்ஜென்சிக்கு பின், உ.பி.,யின் ரே பரேலி தொகுதியில், ராம் நாராயணிடம் படுதோல்வியடைந்த போது, சிறிதும் மனம் தளரவில்லை. கட்சியும் ஆட்சியும் வேண்டாம் என்று ஓடி ஒளியவில்லை. அதன்பின், நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, துவண்டு போன கட்சிக்கு புத்துயிர் கொடுத்தார்.

தன் பாட்டியிடம் இருந்த இரும்பு மனம், ராகுலிடம் அறவே இல்லை. அவரிடமிருந்த நெஞ்சுறுதி, சாணக்கியத்தனம், வைராக்கியம்ராகுலிடம் அறவே கிடையாது.அகில இந்திய அளவில் பலம் வாய்ந்த, மிகப் பெருமைகளையும், புகழையும், வரலாற்று சிறப்பையும் கொண்ட காங்கிரஸ் கட்சியை, நேரு, இந்திரா, காமராஜர், ஆச்சர்ய கிருபளானி போன்ற பல்வேறு ஜாம்பவான்கள் தலைமை ஏற்று வழிநடத்திய காங்கிரசை, தலைமை பொறுப்பேற்று நடத்திச் செல்வதற்கு இப்போது ஆட்களே இல்லை.காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரமாக பேசப்படும் ராகுலின், சிறு பிள்ளைத்தனமான பேச்சும், செயலும் முகம் சுளிக்க வைக்கின்றன. தந்தை ராஜிவிடம் காணப்பட்ட பணிவும், பண்பும், திறமையும், ராகுலிடம் காணப்படவில்லை.

பிரதமர் மோடியை எதிர்த்து அவர், காரசாரமான பேசுவதும், அறிக்கை விடுவதும் ரசிக்கத் தக்கதாக இல்லை.குறிப்பாக, பார்லிமென்டில், பா.ஜ.,வை விமர்சித்து, காரசாரமாக பேசி விட்டு, பிரதமர் இருக்கைக்கு சென்று, அவரை கட்டித் தழுவி, கட்சி உறுப்பினர்களை பார்த்து கண்ணடித்தது கோமாளிக் கூத்தின் உச்சமாக இருந்தது. இது போன்ற கோமாளித்தனங்களை செய்து, அவ்வப்போது ஊடகங்களுக்கு பரபரப்பான செய்திகளையும், மக்களுக்கு நகைச்சுவை உணர்வையும் ஏற்படுத்துவாரே தவிர, பொறுப்பாக எதையும் செய்ததாக செய்திகள் இல்லை.ராகுலின் தேர்தல் பிரசாரம், தமிழகம், கேரளா தவிர வேறு எங்கும் எடுபடவில்லை. ம.பி., போன்ற பல மாநிலங்களில், காங்கிரஸ் காலாவதி ஆவதற்கு, கட்சித் தலைமை தான் காரணம். சரியான, வலுவான தலைமை இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என, கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. கட்சித் தலைவர் பதவியை ராகுல் விரும்பவில்லை; சோனியா, வேண்டாவெறுப்பாக அந்த பொறுப்பில் உள்ளார். இதனால், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு, கட்சியினருக்கு உள்ளது.

நேரு, இந்திரா குடும்பங்களை சேர்ந்தவர்களுக்குத் தான் தலைமை பொறுப்பு என்றால், பிரியங்காவை யோசிக்கலாம். ஆனால், அவரும், தலைமை பொறுப்பில் ஆர்வம் இல்லாமல் உள்ளார். குடும்ப பெண்ணான அவரின் கணவர், ஏராளமான முறைகேடுகளில் தொடர்புடையவராக இருப்பதால், தலைமை பொறுப்புக்கு வர பிரியங்கா விரும்பவில்லை.எனவே, காங்கிரசை வலுப்படுத்தக் கூடிய சுறுசுறுப்பான, திறன் வாய்ந்த தலைமையை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியது தான், இப்போதைய முதல் வேலையாக இருக்க வேண்டும். கட்சியின் அடையாளங்களான கோஷ்டி பூசல்களையும், அதிருப்தியாளர்களையும் சமாளித்து கட்சியை திறம்பட நிர்வகிக்கக் கூடிய துடிப்பான தலைவரை கண்டுபிடிப்பது தான், இப்போதைய தலையாய கடமை.


ரத்தக்கண்ணீர்



கட்சியை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது குறித்து, தமிழக கூட்டணி கட்சியான, தி.மு.க.,வைப் பார்த்து, காங்., தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதுபோல, கடந்த எட்டாண்டுகளாக, கட்சித் தலைமைக்கு எதிராக, ஒரு சிறு குரல் கூட வராமல் பார்த்துக் கொள்கிறது, பா.ஜ., அந்த தொழில்நுட்பத்தையும், காங்., ஆராய வேண்டும். பல மாநிலங்களில், இன்னும் சில மாதங்களில், சட்டசபை தேர்தல் வரவுள்ளது. அதற்குள், காங்., புதிய தலைவரை கண்டுபிடிக்குமா என்பது, 'மில்லியன் டாலர்' கேள்வியாகவே உள்ளது. காங்கிரசின் இப்போதைய நிலைமை, கட்சியின் தொண்டர்களுக்கு, ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது. பழம்பெரும் தலைவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த காங்கிரசை, பதவி ஆசை பிடித்த சில தலைவர்கள் படுகுழியில் தள்ளி விட்டனர். இனிமேலும் அக்கட்சி எழுந்து வர, ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு! தொடர்புக்கு: வ.பா. நாராயணன், சமூக ஆர்வலர், மொபைல்: 95510 13773

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
09-செப்-202016:20:27 IST Report Abuse
Madhusoodhana Ramachandran இந்த கட்டுரை மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. எப்பேர்ப்பட்ட கட்சி எப்போது கட்டெறும் ஆனகதையாகிவிட்டது. சரியான எதிர்கட்சியும் யில்லாவிட்டால் நாட்டுக்கு அவ்வளவு நல்லதல்ல. தட்டி கேட்பாரில்லாவிட்டால் ஆளும் கட்சிக்கு தான் செய்வதெல்லாம் சரி என்று எண்ணம் வரும். அது நல்லதல்ல.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
07-செப்-202022:02:55 IST Report Abuse
Tamilnesan மத்தியில் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் திமுக அழிவதும் இந்தியா மற்றும் தமிழ் நாட்டிற்கு நல்ல எதிர்காலத்தை உணர்த்துகிறது.
Rate this:
Cancel
vns - Delhi,இந்தியா
06-செப்-202021:28:01 IST Report Abuse
vns எதற்க்காக இந்த ஆராய்ச்சி இப்போது? நடக்காத ஒரு நிகழ்விற்காக இத்தனை சிரமப்பட்டு இருக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X