ஜெய்ப்பூர்: பாகிஸ்தானை சேர்ந்த 3 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வெழுத இந்தியா வர விசா ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் 13ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அரசு முழுவீச்சில் செய்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பாகிஸ்தான் மாணவர்கள் மூன்று பேர் மத்திய அரசின் விசா ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் வசித்து வருபவர் ஹக்கிம் மால். டாக்டரான இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூவரும் டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் உள்ளனர். இதனால் இந்தியாவில் வந்து மருத்துவம் பயில முடிவெடுத்து, இந்தியாவில் உள்ள அவர்களது உறவினர்கள் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் இவர்களுக்கான தேர்வு மையம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் இடம்பெற்றாக குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில் விசா ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர். இது குறித்து இந்தியாவில் உள்ள மாணவர்களின் உறவினர் கூறுகையில், ‛இந்திய தூதரகம், மாணவர்களின் ஆவணங்களை ஆராயும் வரை அவர்கள் இஸ்லாமாபாத்தில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மூன்று மாணவர்களுக்கான கொரோனா வைரஸ் அறிக்கைகள் எதிர்மறையாக வந்துள்ளன. இந்திய மிஷன் அவர்களின் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறது. இந்த விஷயத்தில் அவர்கள் இறுதி முடிவை எடுக்கும்போது, அவர்கள் இந்த மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்திருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,' என்றார்.