இசை என்பது ஈர்ப்பு விசையா... எப்போது கேட்டாலும் ஈர்க்கிறாயே... மன அமைதி தரும் மருந்தாகும் இசையே... உருவமில்லா இன்ப உணர்ச்சியே... என இசைக்கு மயங்காத ஜீவன்கள் இல்லை. இசையால் அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறார் பின்னணி பாடகி சென்னை ஸ்ரீநிஷா. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்.
* இசை பயணம் குறித்து
நான் சென்னை பொண்ணு. அங்கு பட்டப்படிப்பு படித்தேன். என் குடும்பத்தில் அனைவரும் இசையுடன் தொடர்பில் இருப்பவர்கள். எனவே நானும் நுழைந்தேன். 11 ஆண்டுக்கு முன் பாடதொடங்கினேன். சிறுவயதில் இருந்தே பாட்டு வகுப்பிற்கு சென்றேன். தாய், தந்தையின் பயிற்சியால் இசை கற்றேன்.
* முதல் வாய்ப்பு
திரைப்படத்தில் முதல் வாய்ப்பு தந்தவர் யுவன்சங்கர் ராஜா. எனக்கு பிடித்த இசை அமைப்பாளர். அவரது இசையில் பாடியதை பாக்கியமாக கருதுகிறேன். நான் 5ம் வகுப்பு படிக்கும்போது சூப்பர் சிங்கரில் பாட ஆரம்பித்தேன். அந்நிகழ்ச்சி முடிந்ததும் யுவன்சங்கர் ராஜா இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியம்.
* வளரும் பாடகர் விருது எப்படி
இதுவரை அதிகளவில் சினிமா பாடல் பாடியதோடு, தனி ஆல்பம் 'காஷ்வெல்' பாடியுள்ளேன். தமிழ், தெலுங்கு படங்களில் 30க்கு மேற்பட்ட பாடல்கள் வரை பாடியுள்ளேன். 'அவன் இவன்' படத்திற்காக பாடிய முதல் பாடலால் வளர்ந்துவரும் பாடகருக்கான விருது கிடைத்தது.
* இசையும், இளைஞர்களும் குறித்து
இப்ப இருக்கும் இளைஞர்கள் மிக அழகாக பாடுகின்றனர். முன்பெல்லாம் திறமையை அங்கீகாரம் செய்வதே கஷ்டமாக இருந்தது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் திறமையை எளிமையாக வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. நம்மிடம் திறமை இருந்தால் மட்டும் போதும் இசையில் நல்ல வளர்ச்சி காணலாம்.
* பிடித்த பாடகர்கள்
அனைத்து பின்னணி பாடகர்களிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். நான் சூப்பர் சிங்கரில் அதிகளவில் ஜானகி, எஸ்.பி., பாலசுப்பிரமணியன் பாடலை தான் பாடியுள்ளேன். எனது ரோல்மாடல் பாடகி ஜானகி. பாடகி சுசிலா மாதிரி இனிமையாக யாராலும் பாட முடியாது. இவர்கள் போன்று ஒவ்வொருவரிடம் இருந்து நல்ல விஷயங்களை எடுத்து பாடியதால், தான் மெல்ல மெல்ல இசையில் வளரமுடிந்தது.
* எதிர்கால ஆசை
நிலையான, நிரந்தரமான பின்னணி பாடகியாக இருப்பது தான் என் ஆசை. தொடர்ந்து எனது குரலால் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே எதிர்கால லட்சியம்.
* பொழுதுபோக்கு
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் அடிக்கடி ஒரு நிமிட பாடல்களை பாடி வெளியிடுவேன்.
* இளைஞர்களுக்கு கூற விரும்புவது
இளைய தலைமுறையினர், அவர்களது மனதில் எழுந்துள்ள ஆசை, ஆர்வத்தை நோக்கி சென்றாலே போதும். அதுவே அவர்களை எதிர்பார்க்காத உயரத்திற்கு அழைத்து செல்லும்.
* வியப்பில் ஆழ்த்திய பாடல்
நான் பாடிய ஒரு சில பாடல்கள் கேட்கும் போது எனக்கே வியப்பாக இருக்கும். ஹிப்ஹாப் தமிழா-விற்காக சீரியல் டைட்டில் டிராக் பாடியிருந்தேன். 'இமைக்கா நொடிகள்' படத்தில் டைட்டில் பாடல் பாடியது திருப்பு முனையாக அமைந்தது. 'கண்ணன் இசை காதல் ஒன்று கண்டேன்', குறும்படத்தில் மெலடி பாடினேன். முன்பெல்லாம் தைரியமாக, கட்டை குரலில் பாடிய பாடகியாக இருந்தேன். ஆனால், இக்குறும்படம் என்னை மெல்லிசையும் பாட முடியும் என காட்டியது.
இவரை பாராட்ட srinishajayaseelan26@gmail.com
வெங்கி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE