பொது செய்தி

இந்தியா

புத்தக அறிமுகம்: நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் தான்

Updated : செப் 06, 2020 | Added : செப் 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து
புத்தக அறிமுகம்: நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் தான்

சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.


01. நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் தான்ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்
வெளியீடு: மணிமேகலை பிரசுரம்
தபால்பெட்டி: 1447, சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்: 224 விலை: ரூ.200

நேரத்தின் முக்கியத்துவம் உணர்ந்தால் முன்னேற்றம் சுலபமாகும். இந்த பேருண்மையை, பொருண்மையாக்கியுள்ள நுால். கவரும், 91 தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ளது. 'குமுதம்' இதழில் தொடராக வந்தது. படித்தால், முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை உடையும்.
அன்றாடம் தவறும் சிறு விஷயங்களையும் கவனித்து, அனுபவத்துடன் கோர்த்து, வாழ்க்கை பாடமாக எழுதப்பட்டுள்ளது. சுலபமாக புரியும் மொழிநடையில் உள்ளது. 'புத்தகம் வாங்குவது செலவல்ல, முதலீடு. ஒரு புத்தகத்தில் கிடைக்கும் அனுபவப்பாடம், வாழ்க்கை பார்வையையே மாற்றிவிட வல்லது. இந்த புதிய பார்வையும், பயணமும் வளமாக்கி விடக்கூடியவை...' என்று தெளிவு படுத்துகிறார் லேனா.
எது சிக்கனம், எது முதலீடு...
இந்த சந்தேகத்தை தீர்க்க, கருத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. படித்ததும் சிந்தனைக் கோணம் நிச்சயம் மாறும்.
'ஒரு டை கட்டுகிற நேரம்... அதை அவிழ்க்கிற நேரம்... சாக்ஸ், ஷூ மாட்டும் நேரத்தில் கூட குடும்பத்தினரிடம் அன்பு, அக்கறையை வெளிப்படுத்த முடியும்...'
இது போன்ற உண்மைகளை உணர்த்துகிறது நுால்.
'கோபம் வந்தாலும் சரி, கோபத்துக்கு உள்ளானாலும் சரி, சிறு இடைவெளி தந்து, சிந்தித்து செயல்பட்டால், அதிசயங்கள் நிகழும். நினைத்ததை நிச்சயம் சாதிக்கலாம்...' இப்படி நுணுக்கமாக அறிவுரைக்கிறது.
அறிமுகங்களை பலப்படுத்துவதும், பயன்படுத்திக் கொள்வதும் அரிய கலை. இது பலருக்கு தெரிவதில்லை. அது பற்றியும் வழிகாட்டுதல்கள் உள்ளன.
'சுடு தண்ணீரை காலில் ஊற்றி வாழ்க்கையை ஓட்டாதீர்; இதய மருத்துவருக்கு வருமானம் தராதீர். அவதியை நீக்கி, லயிக்கும் மனதுடன் ஈடுபடும் எந்த செயலிலும், சாதனை தேடிவரும்...'
நம்பிக்கையை நிறைத்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. சாதிக்கத் துடிப்போருக்கு, பாதை வகுக்கும் நுால்.
- அமுதன்


02. மருக்கொழுந்து - 2 தொகுதிகள் கொத்தமங்கலம் சுப்பு கவிதைகள்தொகுப்பாசிரியர்: லஷ்மி இராமச்சந்திரன்
வெளியீடு: மீனாஷி பதிப்பகம்
185/107, அவ்வை சண்முகம் சாலை,
ராயப்பேட்டை, சென்னை - 14.
தொலைபேசி: 044 - 2811 6938
பக்கம்: 986 விலை: ரூ.800


latest tamil news
தில்லானா மோகனாம்பாள் என்ற கதையை எழுதியவர் பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு. அந்த கதை தமிழகத்தை கலக்கியது. சினிமாகவும் வந்து கவர்ந்தது. அவர் சிறந்த கவிஞராகவும் இருந்தார். அவர் புனைந்துள்ள கவிதைகளை, தொகுத்து நுாலாக்கியுள்ளார், அவரது மகள் லஷ்மி. இரு புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
முதல் தொகுதியாக உள்ள புத்தகத்தில், பண்டிகை, அறிவுரை, காதல், நாட்டு நடப்பு, நாட்டுப்பற்று என்ற பொருண்மைகளை பேசுகிறது. எளிய நடையில் அமைந்துள்ளன. 'கார் ஓட்டும் சார் கேளும் என் சொல்லை இதை கவனித்து நடந்தால் விபத்தில்லை...' என்று துவங்குகிறது ஒரு கவிதை.
இரண்டாம் தொகுதியாக உள்ள புத்தகத்தில், மூன்று பொருண்மைகளில் யாக்கப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. எளிய சந்தத்தில், வாழ்வு அறத்தை வலியுறுத்தும் நுால்.


03. மருதநாயகம்தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம்
வெளியீடு: காவ்யா பதிப்பகம்
சென்னை - 24.
அலைபேசி: 98404 80232
பக்கம்: 512 விலை: ரூ. 500


latest tamil news


Advertisementஅ.மாதவையாவின் கான்சாயபு கம்மந்தான், துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமியின் கான்சாகிபு கம்மந்தான், பேரா. ந.சஞ்சீவியின் கும்மந்தான் கான்சாகிபு, பேராசிரியர் ந.வானமாமலையின் கான்சாகிபு சண்டை, முனைவர் ந.இராசையாவின் மருதநாயகம் உண்மை வரலாறு என்னும் ஐந்து நுால்களையும் ஒன்றாக பதிப்பித்து தொகுப்பாக வந்துள்ள நுால்.
மருதநாயகம் வரலாற்றை, நுாலில் முதல் பகுதியில், 35 பக்கங்களில் விரிவாக எழுதியுள்ளார் பதிப்பாசிரியர். அது ஒரு தனி வரலாற்று நுாலாகும் அளவிற்கு அமைந்துள்ளது.
மருதநாயகம் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர், எப்படிப்பட்டவர் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைதரும் வகையில் அமைந்துள்ளது. வரலாற்றை, வரலாற்றுப் பார்வையுடன் தரவுகளுடன் தரும் வாழ்க்கை வரலாற்று நுால்.
- முகிலை ராசபாண்டியன்


04. சிவா - விஷ்ணு ஆலயங்கள்ஆசிரியர்: ஆர்.ஹேமாபாஸ்கர் ராஜு
7, மல்லீஸ்வரர் கோவில் தெரு,
மயிலாப்பூர். சென்னை - 4.
அலைபேசி: 94441 75218
பக்கம்: 216 விலை: ரூ.200


latest tamil news
சிவா விஷ்ணு ஆலயங்கள், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளன என்பன பற்றிய தகவல்களும், கோவில் அமைப்பு, சிறப்பு பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். ஐயப்பன், பைரவர், வீரபத்திரன் கோவில்கள் அமைந்துள்ள இடங்கள், வழிபாட்டு நேரம், பூஜை காலம் பற்றிய தகவல்களுடன், பரிகார விளக்கத்தையும் விரிவாக தருகிறது.
சிவன், யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் தெட்சிணாமூர்த்தி, அம்பிகை, மயில் வடிவில் இறைவனை பூஜித்த தலம் மயிலாப்பூர், சிவபெருமான் ஆடிய நடனத்தைக் காணும் பேறுபெற்றவர் காரைக்கால் அம்மையார் போன்ற நுாதனமான ஆன்மிகத் தகவல்கள் தாராளமாக உள்ளன.
பைரவரை வழிபடும் முறை, சிவனின் அம்சமான வீரபத்திரர் பற்றிய தகவல்களும் விரிவாக உள்ளது. ஆன்மிக அன்பர்களுக்கு பெரிதும் உதவும் நுால். இதைப் படித்தவுடன் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
- புலவர் இரா.நாராயணன்


05. ஒளி வித்தகர்கள்ஆசிரியர்: ஜா.தீபா
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
சென்னை - 78.
அலைபேசி: 87545 07070
பக்கம்: 160 விலை: ரூ.150


latest tamil news
கதையை காட்சி வடிவில் கண்முன் நிறுத்துவதில் முக்கிய பங்காற்றுபவர் ஒளிப்பதிவாளர். இயற்கை வளங்கள், விலங்குகள், அவற்றின் உடல் அசைவுகள், குணாதிசயங்கள், மனிதர்களின் ஆசாபாசங்களை நுட்பமாக காட்டுவது, அந்த கலையின் பரிணாமம். ஒளிப்பதிவு கலை பற்றி பேசுகிறது.
'மாஸ்டர்ஸ் ஆப் லைட்' என்ற ஆங்கில நுாலின், தமிழாக்கம். கதை காட்சியை, ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்த ஒளியில் எடுத்தால் சிறப்பாக இருக்கும்; ஒளிப்பதிவாளருக்கு, ஓவியம் எப்படி உதவி செய்யும்; கேமரா நகர்வு எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட கேள்விகளுக்கு, பிரபல ஒளிப்பதிவாளர்களே நேர்காணல் முறையில் விடை சொல்கின்றனர்.
'நகைச்சுவை, பயம் என, எதை சொல்கிறதோ, அதற்கு ஏற்ப செயல் திட்டத்தை மாற்றி கொள்ளும் பக்குவம் வேண் டும்...' என்கிறார் ஒளிப்பதிவாளர் மரியோடாஸி. அழகியலை படம் பிடிக்க ஆர்வம் உள்ளோர் படிக்க வேண்டிய நுால்.
- டி.எஸ்.ராயன்


06. சிந்தனை செய் மனமேஆசிரியர்: டாக்டர் து.சி.இராமையா
வெளியீடு: நெய்தல் பதிப்பகம்
சென்னை - 5.
தொலைபேசி: 044 - 4207 5836
பக்கம்: 176 விலை: ரூ.150


latest tamil news
கூட்டாஞ்சோறு போல கவிதை, பாட்டு, துளிப்பா, கட்டுரை, துணுக்கு, சிறுகதை, பாரம்பரிய உணவுகள் என பல்சுவையாக படைக்கப்பட்டுள்ள நுால்; உருக்கமான கட்டுரைகளும் உண்டு.
'என்னை குனிந்து பார் உன்னை பிறர் அண்ணாந்து பார்க்கும் நிலைக்கு வைப்பேன்' என, முன்னாள் ஜனாதிபதி, மறைந்த அப்துல் கலாம் பற்றிய குறுங்கவிதையும் இந்த நுாலில் உள்ளது.
- சுப வெங்க்


07. உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும்ஆசிரியர்: பேரா.பு.சி.இரத்தினம்
வெளியீடு: மணிமேகலை பிரசுரம்
தபால்பெட்டி: 1447, சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்: 160 விலை: ரூ.100


latest tamil news
கொரோனா என்ற தீநுண்மி நோயால் உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். ஆண்டு தோறும், 30 நாட்கள் கட்டாய ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற பரிந்துரையுடன் முடித்துள்ளார்.
கொரோனா அச்சம் ஏற்பட்டதில் இருந்து, நடந்த எல்லா மாற்றங்களையும் தொகுத்துள்ளார். படங்களையும் இணைத்துள்ளார். மனிதாபிமானம் மற்றும் இயற்கை ஆர்வம் சார்ந்த கண்ணோட்டம் புத்தகம் முழுதும் உள்ளது. ஆய்வு பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. தொற்று நோய், உலகில் ஏற்படுத்திய மாற்றங்களை கூறும் நுால்.


08. விஜயநகரப் பேரரசுஆசிரியர்: கா.அப்பாதுரை
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
32பி, கிருஷ்ணா தெரு,
தி.நகர், சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2433 1510
பக்கம்: 232 விலை: ரூ.200


latest tamil news
இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்த விஜயநகரப் பேரரசின் சமூக அரசியல், பொருளாதார வளர்ச்சி எழுதப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் போன்றது எனலாம். பண்டைய வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்ள, இத்தகைய நுால்கள் மிகவும் பயன்படும்.
விஜயநகர மன்னர்கள், நாயக்க அரசர்களோடு கொண்ட தொடர்புகள் மற்றும் மற்ற மன்னர்கள், சிற்றரசர்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசு ஆண்டதாக கூறியுள்ள, 14 - 17ம் நுாற்றாண்டு வரை உள்ள தமிழக வரலாறு கோர்வையாக சொல்லப்பட்டுள்ளது.
- என்.எஸ்.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-செப்-202016:41:49 IST Report Abuse
வெகுளி கவிஞர் எழுதிய வனவாசம் புத்தகம் குறித்த தகவல்களை வெளியிடுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X