புதுடில்லி: 'ஊரடங்கு காலத்தில் விமான 'டிக்கெட்' முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் பணம் திரும்பத் தரப்படும்' என உச்ச நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதையடுத்து கடந்த மே 25ம் தேதி உள்நாட்டு விமான சேவைகள் துவங்கப்பட்டன. எனினும் சர்வதேச விமான சேவைகளுக்கு உள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.
ஊரடங்கு குறித்து அறியாததால் விமான டிக்கெட்களை பலரும் முன்பதிவு செய்து வாங்கி இருந்தனர். அந்த டிக்கெட்டுகளுக்கு பலனில்லாமல் போனது. டிக்கெட் பணத்தை விமான நிறுவனங்கள் இதுவரை திரும்ப வழங்காமல் உள்ளன. ஆகையால் இந்த விவகாரத்தில் இந்திய விமான பயணியர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு இதுகுறித்து பதிலளிக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டி.ஜி.சி.ஏ. எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில் உச்ச நீதிமன்றத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குனரகம் நேற்று பதில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மார்ச் 25 முதல் மே 3 வரையிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் அந்த தொகை திரும்பத் தரப்படும். பணத்தை திரும்ப வழங்காமல் இருப்பது 1937ம் ஆண்டின் விமான விதிகள் மற்றும் விமானப் போக்குவரத்து தேவைகளை மீறும் செயலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE