திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைக்கப்பட்டிருந்த, அன்றைய நாஞ்சில் நாடான, தற்போதைய குமரி மாவட்டத்தை, தாய் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டக் குரலுடன், திருவனந்தபுரத்தில், 1951 செப்டம்பர், 6 ல்,'தினமலர்' நாளிதழை, டி.வி.ராமசுப்பையர் துவக்கினார்.
நாஞ்சில் நாட்டு மக்களின் உரிமைக்காக போராடி, தன் முதல் லட்சியத்தில்,'தினமலர்' நாளிதழ் வெற்றி கண்டது.நாஞ்சில் நாடு தமிழகத்தோடு இணைக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் உருவானதும், திருவனந்தபுரத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு, 'தினமலர்' பதிப்பை மாற்றினார் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர். அப்போது, எல்லா நாளிதழ்களும் சென்னையில் இருந்து வெளியாகி கொண்டிருக்க, இதற்கு நேர்மாறாக, நாட்டின் தென் பகுதியில் இருந்து வெளியான, 'தினமலர்' நாளிதழ் தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்தது. வெறுமனே தகவல்கள், நிகழ்வுகளை மட்டும் தராமல், மக்களின் தேவைகளுக்காக, குறைகளுக்கு தீர்வு காண்பதற்காக, செய்திகளை தந்தது தினமலர்.

நாட்டின் வளர்ச்சிக்கு, ஒரு நாளிதழின் எழுத்து காரணமான வரலாறே, 'தினமலர்' நாளிதழின் வரலாறு. இந்த, 70 ஆண்டு களில், நாட்டு நலனுக்காக, மக்கள் பணிக்காக, 'தினமலர்' சிந்தித்ததும், சாதித்ததும் பல. அப்போது, சந்தித்த தடைகற்களை வாசகர்கள் துணையோடு வென்றும் வந்திருக்கிறது. வாசகர்களின் நீங்காத ஆதரவோடு, 1951ல் பிறந்த அதே உத்வேகத்துடனும், துணிச்சலுடனும், 70 ஆண்டுகளை தொட்டு, வெற்றி பயணத்தை தொடர்கிறது.இந்த நன்னாளில், 'தினமலர்' நாளிதழை நெஞ்சார வாழ்த்துகின்றனர் தலைவர்கள்; அவர்களின் வாழ்த்துக்கள் இதோ:
பன்வாரிலால் புரோஹித், தமிழக கவர்னர்:
'தினமலர்' தமிழ் நாளிதழ், தமிழக மக்களுக்கு, சுயநலமற்ற சேவை செய்து, 69 ஆண்டுகளைக் கடந்து, 70ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை அறிந்து பெருமைப்படுகிறேன். 'தினமலர்' நாளிதழ், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த, திருவனந்தபுரத்தில், 1951 செப்., 6ம் தேதி, புகழுக்குரிய டி.வி.ராமசுப்பையரால் துவக்கப்பட்டது. மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் வெளிப்படுத்துவதற்காக, அவர், 'தினமலர்' நாளிதழை துவக்கினார். நேர்மை, திறமை, கடின உழைப்பு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு, 'தினமலர்' மிகப் பெரிய வெற்றியை பெற்றதுடன், மக்களின் அங்கீகாரத்தை பெற்றது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், 'தினமலர்' தமிழ் நாளிதழ் குழுவினருக்கு என் வாழ்த்துகள். முழு உற்சாகத்துடனும், நேர்மறை எண்ணங்களுடனும், சமூக நலன் என்ற கடமையுடன், நமது தேசம் என்ற கட்டமைப்பை காப்பதில், தொடர்ந்து சேவை செய்ய வாழ்த்துகிறேன். 'தினமலர்' நாளிதழ், தொடர்ந்து வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.
இ.பி.எஸ்., தமிழக முதல்வர்:
'தினமலர்' நாளிதழ் துவக்கப்பட்டு, 69 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து, 70ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை அறிந்து, மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உலக நிகழ்வுகளை, நடுநிலையோடு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது, ஜனநாயகத்தின் நான்காவது துாணாக போற்றப்படும், பத்திரிகை துறையின் தலையாய கடமை. அவ்வழியில், ‛தினமலர்' நாளிதழ், நிகழ்வுகளை பகுத்தாய்ந்து, நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வருவது, மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

'தினமலர்' நாளிதழ், ஈரோடு பதிப்பு, 1984ம் ஆண்டு, எம்.ஜி.ஆரால் துவக்கி வைக்கப்பட்டதை, இத்தருணத்தில் நினைவு கூருகிறேன். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், ஜெ., அரசின் மக்கள் நலத் திட்டங்களை, அனைத்து தரப்பு மக்களும் அறியும் வகையில், உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டு வருவதில், ‛தினமலர்' நாளிதழ், முக்கிய பங்கு வகிக்கிறது. 'தினமலர்' நாளிதழ் இன்னும் சிறப்புடன் வளரவும், அதன் வாசகர் வட்டம் தொடர்ந்து விரிந்து பரவவும், இந்த இனிய நன்னாளில், மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
'தினமலர்' செய்திகளை தரும் விதமே அலாதியானது!-- துணை முதல்வர் பன்னீர்செல்வம்.
தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களை, ஒளிவுமறைவின்றி எடுத்துரைக்கும் நாளிதழாகவும், அவர்களின் உள்ளக் குரலை வெளிப்படையாக பிரதிபலிக்கும் பத்திரிகையாகவும், 'தினமலர்' விளங்குகிறது. அ.தி.மு.க., நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாகவும், ஜெயலலிதாவுக்கு மிகவும் விருப்பமானதாகவும், 'தினமலர்' திகழ்ந்தது. அ.தி.மு.க.,வின், ஆரம்ப கால வளர்ச்சியில், 'தினமலர்' நாளிதழின் பங்கு கணிசமானது என்பதை மறந்து விட முடியாது.

தமிழர் நலன் மேம்பாடு; மக்களின் உரிமை காத்தல் என்ற குறிக்கோளுடன், தமிழ் பத்திரிகை உலகின் ஜாம்பவான் டி.வி.ராமசுப்பையரால், 1951ல் துவக்கப்பட்ட, 'தினமலர்' நாளிதழ், அதன் நோக்கங்களில் இருந்து சிறிதும் வழுவாமல், 70ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது பெருமைக்குரியது. 'தினமலர்' நாளிதழ், செய்திகளை தருகின்ற விதமே அலாதியானது. அதன் தலைப்புகள், உள்ளே என்ன செய்தி சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆவலைத் துாண்டி, அதை விறுவிறுப்பாக படிக்க வைத்திடும் பாங்கு சிறப்பானது.
எம்.ஜி.ஆர்., நடைமுறைப்படுத்திய, தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை, தனது நாளிதழில் இடம்பெறச் செய்து, மற்ற நாளிதழ்களுக்கு முன்னோடியாக, 'தினமலர்' விளங்குகிறது. செய்திகளை தருவது மட்டுமே, ஒரு நாளிதழில் கடமை என்ற நிலையிலிருந்து வெகுவாக முன்னேறி, நாட்டு மக்களின் நலனுக்காக, 'தினமலர்' பணியாற்றி வருகிறது. மாணவர்களுக்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 'தினமலர்' ஆற்றி வரும் மக்கள் நலப் பணிகளையும், மாணவ - மாணவியர் நலப்பணிகளையும், பெரிதும் பாராட்டுகிறேன். இன்று, 70ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், 'தினமலர்' நாளிதழ், இன்னும் நுாற்றாண்டுகள் கடந்து, வெற்றி நடை போட வேண்டும்.தமிழகத்தின் வளர்ச்சிக்கு, மென்மேலும் சிறப்பான பங்களிப்பை நல்கிட வாழ்த்துக்கள்.
எடியூரப்பா, கர்நாடக முதல்வர்

மதிப்புகள் மற்றும் பத்திரிகை தர்மத்தின் மாதிரியாக திகழும், 'தினமலர்' தேசிய நாளிதழ், 70வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியான செய்தி.கடந்த ஏழு சகாப்தங்களாக, மதிப்புமிக்க செய்திகள் மற்றும் தகவல்கள் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க, தினமலர் கடுமையாக உழைத்துள்ளது. பாரபட்சமற்ற செய்திகள், கட்டுரைகள் மூலம் மக்களிடையே தொடர்ந்து நிலைத்திருக்கிறது. சிறந்த ஜனநாயகத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பது பாராட்டுக்குரியது.நேர்மையான பத்திரிகை நடத்தி, ஊடக துறைக்கு முன் மாதிரியாக விளங்கட்டும் என வாழ்த்துகிறேன்.
தேவகவுடா, முன்னாள் பிரதமர்

'தினமலர்' தேசிய நாளிதழ், 69ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நேற்று தான், செய்தித்தாளை துவங்கியது போன்று தோன்றுகிறது. ஆனால், பல ஆண்டுகள் வெற்றிகரமான வெளியீட்டை நிறைவு செய்துள்ளது.இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பிரபலமாக உள்ளது. உண்மையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் விஷயம்.இந்த மகத்தான வெற்றிக்கு உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துகள். அடுத்த ஆண்டுகளில் மேலும் சிறந்த உயரம் எட்டக்கூடும்.
சித்தராமையா, கர்நாடக முன்னாள் முதல்வர்

அகவை, 70ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள, 'தினமலர்' தேசிய தமிழ் நாளிதழுக்கு வாழ்த்துகள். நம்பகமான செய்திகளை, மக்களுக்கு வழங்குவதற்கான குறிக்கோளுடன், பல ஆண்டுகளாக அயராது உழைப்பது உண்மையில் ஒரு பெரிய சாதனை.இந்த நாளிதழ், கர்நாடகாவில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில், பரவலாக பிரபலமாக உள்ளது. அவர்களின் பிரச்னைகளை நிர்வாகத்தின் முன்வைப்பதில் திறம்பட செயல்படுகிறது. இந்த பணி தொடர உங்களை கேட்டுக் கொள்கிறேன். மேலும் பல வெற்றி கரமான ஆண்டுகள் நிறைவு செய்ய விரும்புகிறேன்.
சிவகுமார், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்

'தினமலர் தேசிய தமிழ் நாளிதழ், 70ம் ஆண்டில் காலடி வைத்துள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.வாசகர்களுக்கு செய்தி மற்றும் பகுப்பாய்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூக பிரச்னைகளை திருத்தி, எச்சரித்து வருகிறீர்கள்.ஜனநாயகத்தின் நான்காவது துாணாக, அமைதி, நல்லிணக்கம், உணர்வு மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களிப்பைச் செய்கிறது.நாளிதழின் சமூகவியல் சேவை தடையின்றி தொடரட்டும். இன்னும் அதிகமாக வளரட்டும். தினமலருக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்க விரும்புகிறேன்.
அஸ்வத் நாராயணா, கர்நாடக துணை முதல்வர்

'தினமலர்' தேசிய தமிழ் நாளிதழ், 70வது ஆண்டில் கால் பதித்துள்ள மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், உங்களை வாழ்த்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தகைய சாதனையை அடைவதில் உள்ள சிக்கல்களை நான் புரிந்து கொள்கிறேன். சாதனையை சாத்தியமாக்கிய உங்கள் முழு அணியின் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு தான் காரணம் என நான் நம்புகிறேன். தமிழ் மக்களுக்கு குரல் கொடுப்பதில், உங்கள் செய்தித்தாளின் முயற்சிகளை கர்நாடக அரசு மதிக்கிறது. தேசத்தைக் கட்டி எழுப்புவதற்காக உங்கள் மதிப்புமிக்க சேவைகளை தொடர்ந்து நீட்டிக்கட்டும்.உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் நான் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், எதிர்காலத்தில் இதுபோன்ற, இன்னும் பல மைல் கல்களை அடைய விரும்புகிறேன்.
ஜனநாயகத்தின் மனசாட்சி

நிறுவனர் டி.வி.ராமசுப்பையரால் துவக்கப்பட்டு 'உண்மையின் உரைகல்' என்ற வாசகத்துடன், இந்திய தேசிய மலர் தாமரையை தாங்கி வரும் தலைசிறந்த நாளிதழான, 'தினமலர்' 70வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் விருப்பமானதாகவும், நன்மதிப்புடன், 'தினமலர்' திகழ்ந்தது. ஜனநாயகத்தின் நான்காவது துாண் எனப் போற்றப்படுவது பத்திரிக்கைத்துறை. 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி, போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற வழிவகுக்கிறது. தெய்வீக சிந்தனைகளையும், தேசப்பற்றுடன் கூடிய செய்திகளையும் தனித்தன்மையுடன் வெளியிடும், 'தினமலர்' நாளிதழ் மேலும் வளர்ந்து வெற்றிப்பாதையில் பயணிக்க விரும்பும் கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை. 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்துக்கள்.
- ப.ரவீந்திரநாத்குமார், அ.தி.மு.க., எம்.பி., தேனி.
தலைமுறையைத் தாண்டி சகாப்தம்

தலைமுறையைத் தாண்டி பத்திரிகை உலகில், சகாப்தம் படைத்து வரும் 'தினமலர்' 70வதுஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்காக, 'தினமலர்' ஆசிரியர், வெளியீட்டாளர், பத்திரிகையாளர்கள், ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள். 'தினமலர்' மக்களுக்கு தினமும் செய்திகளுடன், பல்வேறு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. நாளிதழுடன் சிறுவர் மலர், ஆன்மிக மலர், வாரமலர் புத்தகங்களையும், பத்திரிகை உலகில் முதன் முறையாக வெளியிட்ட பெருமை உண்டு. இன்னும் பல தலைமுறைகளைத்தாண்டி தேசிய அளவில், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்ய, அன்னை மீனாட்சியை வேண்டுகிறேன். மாணவர்களுக்காக, ஜெயித்துக் காட்டுவோம்; வழிகாட்டி, போட்டித்தேர்வுக்கு தயாராவோருக்கு மாதிரித் தேர்வு, பட்டம் இதழ் என, செய்திச் சேவையுடன் நின்றுவிடாமல், எதிர்கால தலைமுறையினருக்கும், 'தினமலர்' சேவையாற்றி வருவது பாராட்டுக்குரியது. தினமும் காலையில் எழுந்ததும் 'தினமலர்' முகத்தில் விழித்தால் அன்றைய நாள், நல்ல நாளாக, பல்வேறு நல்ல விஷயங்களை தெரிந்துக் கொண்டதாக அமையும்.
- ஆர்.பி.உதயகுமார், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.
தனித்துவம் வாய்ந்த 'தினமலர்'
'தினமலர்' நாளிதழ் எப்பொழுதுமே ஆழ்ந்த கருத்துக்களை, அர்த்தத்தோடு தந்து வருகிறது. சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய நடையில் தகவல்களை தருகிறது. மத்திய, மாநில அரசுகளின் பொதுமக்களுக்கு தேவையான அறிவிப்புகளை அழகாக புரிந்து கொள்ள வைக்கிறது. அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு பயன்படும் எனில் அதை பாராட்ட தவறியதில்லை. பல்வேறு வகை கட்டுரைகளை, பல வடிவங்களில் தருகிறது. மார்க்கெட்டிற்கு புதிய பொருட்கள் வந்தால் மக்களுக்கு பயனுள்ளது என்றால் விளக்கமளிக்கிறது. மொத்தத்தில், 'தினமலர்' தனித்துவம் வாய்ந்து திகழ்கிறது.
ஏ.பி.செல்வராஜன், அதிபர், காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், சிவகாசி.
மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்
எந்த சம்பவத்தையும், கட்சிகளையும், அமைப்பையும் துாக்கிப் பிடிக்காமல், நடுநிலை பார்வையோடு செய்திகளை வெளியிடுவதால், 'தினமலர்' நாளிதழை விரும்பி படிக்கிறேன். ஞாயிறு இணைப்பு வாரமலரில் வரும் போட்டிகளில், விடை கண்டறிய நான் மட்டுமின்றி, எனது பேரன் வரை ஆர்வம் காட்டுவோம். பண்டிகை காலங்களிலும் ஓய்வின்றி செய்திகளை வெளியிட்டு வரும் ஒரே நாளிதழ், 'தினமலர்' தான். மக்கள் பிரச்னையை தீர்க்க முக்கியத்துவம் தரப்படுகிறது. பிரச்னைகளின் தன்மைக்கேற்ப முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறார்கள். அதனால் தான், ௭௦வது ஆண்டில், 'தினமலர்' அடியெடுத்து வைத்துள்ளது; தனித்துவம் என்றும் தொடர வேண்டும்.
- கே.எஸ்.கமலக்கண்ணன், தலைவர், நாகா குழுமம், திண்டுக்கல்.
சாதனைகள் தொடரட்டும்
பிரச்னைகளை எடுத்துரைப்பது, நடுநிலைமை, உண்மை மாறாது செய்திகளை தருவது, தவறுகளை சுட்டிக்காட்டுவதில் அஞ்சாமை என்ற, 'தினமலர்' நாளிதழின் தனித்துவமான பண்புகள் எனக்கு பிடிக்கும்.உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை அத்தனையும் தெளிவாகவும், நேர்த்தி யாகவும் தருவதில் சிறந்து விளங்கும் 'தினமலர்' நாளிதழ், 70ம் வயதில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி. அடுத்த, 70 ஆண்டுகளும் சாதனைகள் தொடர, சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
- கருமுத்து கண்ணன், தலைவர், தியாகராஜர் கல்விக்குழுமம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE