சென்னை: ‛ஹிந்தி தெரியாது போடா' என்ற ஹேஷ்டேக்கிற்கு பதிலடியாக, சமூக வலைதளங்களில் ‛திமுகவேணாம்போடா' என்ற ஹேஷ்டேக் வைரலானது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை விமான நிலையத்தில், இந்தி தெரியாது எனக்கூறிய, திமுக எம்.பி., கனிமொழியை , அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனும் தனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், விமான நிலைய ஊழியர்கள் மோசமாக நடத்தியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார். இதனால், ஹிந்தி குறித்து சமூக வலைதளவாசிகள் இடையே மீண்டும் பரபரப்பு உருவானது. குறிப்பாக திரைப்பிரபலங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்தனர்.

சமூக வலைதளத்தில் 'ஹிந்திதெரியாதுபோடா' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் வைரலானது. வெற்றிமாறனுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சிரீஸ் ஆகியோர் ‛நான் தமிழ் பேசும் இந்தியன்', ‛ஹிந்தி தெரியாது போடா' என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டுகளை அணிந்து டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்டனர். அதில் திருவள்ளுவர் படமும் இருந்தது. தொடர்ந்து, நடிகர் சாந்தனு, அவரது மனைவி கீர்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என இந்த பட்டியல் நீண்டது.

இதை சுட்டிக்காட்டி தி.மு.க., எம்.பி., கனிமொழி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல.#ஹிந்தி_தெரியாது_போடா #StopHindiImposition pic.twitter.com/NIzA1DmYVb
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 6, 2020
பா.ஜ.,வின் வானதி சீனிவாசன் கூறுகையில், ''டீ ஷர்ட் மூலம் ஒரு போதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது. தமிழ் வளர்ச்சிக்காக உண்மையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். மொழி திணிப்பு என்பதை பா.ஜ.,வும் எதிர்க்கத்தான் செய்கிறது'' என்றார்.
இதையடுத்து, 'ஹிந்தி_தெரியாது_போடா' என்ற ஹேஷ்டேக் போட்டியாக ‛திமுக_வேணாம்_போடா' என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. குறிப்பாக யுவனின் டீ-சர்ட்டில் இருந்த வள்ளுவரே, எழுத்தாணியை எடுத்து கோபமாக உன்னோட போதைக்கு நான் ஊறுகாயா ஆள விடுங்கடா சாமி. ‛திமுக_வேணாம்_போடா' என கூறுவது போன்ற மீம்ஸ்கள் வெளியாகின. தொடர்ந்து திமுக.,வை எதிர்த்து இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.
எப்போது தீரும் மொழி அரசியல்
இது தொடர்பாக ஓய்வு பெற்ற மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: நடிகர்கள், தங்கள் விரும்பியபடி புகைப்படம் வெளியிடுவது அவர்களது உரிமை. அதில் யாரும் தலையிடுவதற்கில்லை. ஆனால், படங்களில் நடிக்க ஹிந்தியில் இருந்து தான் நடிகைகளை அழைத்து வருகிறீர்கள். ஏன் தமிழகத்தில் நடிகைகள் யாரும் இல்லையா? ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தாலும் அங்கு நடிக்க செல்கிறீர்கள். அப்போது ஹிந்தி பிரச்னையாக தெரியவில்லையா. அப்போது மட்டும் ஹிந்தி தேவைப்படுகிறதா?
மொழி என்பது அவரவவர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், தமிழகத்தில் பல ஆண்டுகளாக மொழியை வைத்து அரசியல் செய்கின்றனர். எப்போதும், இந்த பிரச்னை தீரும் என தெரியவில்லை. பல அரசியல் தலைவர்கள் பள்ளி நடத்துகின்றனர். அங்கு ஹிந்தி படிக்க வேண்டும் என கூறுகின்றனர். வெளியே வந்து ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.
கொரோனா காலத்தில் பலர் தங்களது வாழ்வாதாரத்தை தக்க வைத்து கொள்ள போராட்டம் நடத்தி வரும் சூழலில் சிலர் இப்போது கூட மொழி பிரச்னையை கையில் எடுத்து அரசியல் செய்வது வேதனையாக இருக்கிறது என்பதை சாமானிய மக்களின் கருத்தாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE