'கற்பதை ஊக்குவிக்கிறது' கல்விக் கொள்கை: பிரதமர் மோடி பேச்சு

Updated : செப் 09, 2020 | Added : செப் 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : 'புதிய தேசிய கல்விக் கொள்கையானது, படிப்பதை விட கற்பதை ஊக்குவிக்கிறது. பாடத் திட்டங்களைவிட, சிந்திப்பதை ஊக்குவிக்கிறது. இதை சிறப்பாக செயல்படுத்த, அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்' என, பிரதமர், நரேந்திர மோடி கூறினார்.நாட்டின் தேசிய கல்விக் கொள்கையானது கடைசியாக, 1986ல் உருவாக்கப்பட்டது. 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், புதிய தேசிய கல்விக் கொள்கையை
புதிய கல்விக் கொள்கை, மோடி, விளக்கம்

புதுடில்லி : 'புதிய தேசிய கல்விக் கொள்கையானது, படிப்பதை விட கற்பதை ஊக்குவிக்கிறது. பாடத் திட்டங்களைவிட, சிந்திப்பதை ஊக்குவிக்கிறது. இதை சிறப்பாக செயல்படுத்த, அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்' என, பிரதமர், நரேந்திர மோடி கூறினார்.

நாட்டின் தேசிய கல்விக் கொள்கையானது கடைசியாக, 1986ல் உருவாக்கப்பட்டது. 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிவிப்போம்' என, 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ., தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுஇருந்தது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக, புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கும் நடவடிக்கைகள் நடந்து வந்தன. அதன்படி இறுதி செய்யப்பட்ட, புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், 34 ஆண்டுகளுக்குப் பின், நாட்டின் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


சந்தேகம்



இந்த கல்விக் கொள்கை குறித்து, மாநில கவர்னர்கள், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைகளின் துணை வேந்தர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று நடந்தது. இந்தக் கருத்தரங்கை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். அதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:புதிய கல்விக் கொள்கையில், பல்வேறு தரப்பினருக்கு பல சந்தேகங்கள் இருக்கும். சரியான விளக்கம் அளித்து, சந்தேகத்தை தீர்ப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

மிகவும் திறந்த மனதுடன், இந்த கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்பதே, அரசின் நோக்கமாகும்.ராணுவக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்றவை, அரசின் கொள்கையல்ல; அது, நாட்டின் கொள்கை. அதுபோலவே, இந்தக் கல்விக் கொள்கையும், நம் நாட்டின் கொள்கையாகும். நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப, இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இது, அனைவருக் கான கொள்கையாகும்.

கல்விக் கொள்கையை வடிவமைப்பது மற்றும் செயல்படுத்துவதில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சிகளின் பங்கு உள்ளது. அதே நேரத்தில், இந்தக் கொள்கையில், அரசின் தலையீடு இருக்கக் கூடாது. இதில் தொடர்புடைய, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரின் பங்கே அதிகம் இருக்க வேண்டும்.


சிந்திக்கும் திறன்



மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப, வளைந்து கொடுக்கும் வகையில் இந்தக் கொள்கை அமைந்துள்ளது. அதுபோல், இந்தக் கொள்கையை செயல்படுத்துவதிலும், வளைந்து கொடுக்கும் மனப்பாங்கு வேண்டும். அனைத்து தரப்பினரும், மாணவர்களின், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்த கல்விக் கொள்கைக்கு, நாட்டின் பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். கிராமத்தில் உள்ள ஆசிரியர்களில் இருந்து, கல்வியாளர்கள் வரை பலரும் இதை வரவேற்று, கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த கல்விக் கொள்கையானது, மாணவர்களை படிப்பதில் இருந்து கற்கும் நிலைக்கு உயர்த்தும். மேலும், பாடத் திட்டங்களில் கவனம் செலுத்துவதைவிட, சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

பாடப் புத்தகங்கள், தேர்வுகள் போன்ற நெருக்கடிகளில் இருந்து மாணவர்களை விடுவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, சில பாடத் திட்டங்களை தேர்வு செய்துவிட்டு, அது தங்களுக்கு உகந்ததாக இல்லை என்று பின்னர் வருந்தும் நிலையில் மாணவர்கள் இருந்தனர். ஆனால், புதிய கல்விக் கொள்கையில், தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.பல சர்வதேச பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை, நம் நாட்டில் திறக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.




நல்ல வாய்ப்பு



இதன் மூலம், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், நம் மாணவர்களின் அறிவுத் திறன் மேம்படும்.வெறும் பாடங்களை மட்டும் படிக்காமல், அறிவுத் திறன், தொழில் திறன் உள்ளிட்டவற்றை வளர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம், உலகின் அறிவு மையமாக இந்தியா விளங்கும். மேலும், தற்சார்பு நிலையை நாம் எட்டவும் இந்த கொள்கை உதவுகிறது.இந்த கொள்கை உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தை உணர்ந்து, அது அனைத்து மக்களையும் சென்றடைய செய்ய வேண்டியது,
நம்முடைய கடமையாகும்.இவ்வாறு, அவர் பேசினார்.


'ஆராய்ச்சிகளில் முதலீடு'



நிகழ்ச்சியில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:மிகவும் வலுவான நம் பொருளாதாரத்துக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில், ஆராய்ச்சிகளுக்காக, அதன், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில், 2.8 சதவீதம் செலவிடப்படுகிறது. தென் கொரியாவில், 4.2 சதவீதமும், இஸ்ரேலில், 4.3 சதவீதமும் செலவிடப்படுகின்றன. அதே நேரத்தில், நம் நாட்டில், 0.7 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையானது, பல்வேறு விஷயங்களில் முன்னோடியாக அமைந்துள்ளது. தாய்மொழி வழி கற்றல், அதிக மொழிகளை கற்றல் போன்றவை, அதன் உதாரணங்களாக கூறலாம். நாட்டின் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல், தற்போதைய நவீன மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்ப கல்வி இருக்க வேண்டும் என்பதையும், இந்த கொள்கை காட்டுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.


மேற்கு வங்கம் எதிர்ப்பு



மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. பல்வேறு விஷயங்களில், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராகவும், பிரதமர், நரேந்திர மோடிக்கு எதிராகவும், மம்தா பானர்ஜி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றார்.இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை குறித்து, மாநில கல்வி அமைச்சர், பார்த்தா சாட்டர்ஜி கூறியதாவது:இந்த கல்விக் கொள்கையை, தற்போதைக்கு, மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம். இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது. மாநிலங்களில் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் உள்ளது.

இதில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து சந்தேகங்கள் உள்ளன. அது தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. அதனால் தற்போதைக்கு, இந்த கொள்கையை, மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம். மாநில அரசுக்கு தற்போதுள்ள முன்னுரிமை, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தான். கல்விக் கொள்கை காத்திருக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N S - Nellai,இந்தியா
08-செப்-202006:21:12 IST Report Abuse
N S மனப்பாடம் செய்து, 'வாந்தி' எடுத்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது கம்மியாகும். அதிக மதிப்பெண்கள் பெற்று தலைசிறந்த கல்விச்சாலையில் சேர்த்து அங்கு சோபிக்க முடியாமல் போனதும், அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கமுடியாது தற்கொலை செய்துகொண்டதும் நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஒரு மாற்றமும் முன்னேற்றத்திற்கு வழிகோலும் பொழுது அதை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது சரியல்ல.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
08-செப்-202005:56:12 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மம்தாவிற்கு கல்வி நிறுவனங்கள் நிறைய உள்ளனவா தமிழ்நாட்டில் உள்ளதுபோல் கல்வி மூலம் கொள்ளை ஆடிக்க முடியாது என நினைக்கிறாரோ .என்ன அவருக்கு விளக்கம் வேண்டும் அருமையான கல்விக்கொள்கையில் கூறட்டும் பதில் சொல்லலாம். நாட்டை அழிக்கும் நயவஞ்ச கூட்டத்தை ஒழித்தால்தான் நாடு உருபடும்.வளர்க பாஜ.க.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-செப்-202004:18:44 IST Report Abuse
J.V. Iyer புதிய தேசிய கல்விக் கொள்கை நாட்டிற்கு நல்லது.மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X