போலீஸ் வயிற்றை கலக்குது மொட்டை: அம்பலமானது மாமூல் வேட்டை| Dinamalar

போலீஸ் வயிற்றை கலக்குது 'மொட்டை': அம்பலமானது மாமூல் வேட்டை

Updated : செப் 08, 2020 | Added : செப் 08, 2020
Share
பணி நிமித்தமாக, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டுக்கு வந்திருந்த சித்ராவும், மித்ராவும், கூடாரத்துக்குள் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, வளாகம் முழுவதும் நோட்டம் விட்டு விட்டு, சிங்காநல்லுார் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர்.பஸ்சில் சாரை சாரையாக பயணிகள் ஏறுவதை பார்த்த மித்ரா, ''அக்கா, வைரஸ் நோய் பயம், மக்களிடம் சுத்தமா போயிடுச்சு போலிருக்கே. பஸ் ஓடத் துவங்கியதும், கூட்டம்
 போலீஸ் வயிற்றை கலக்குது 'மொட்டை': அம்பலமானது மாமூல் வேட்டை

பணி நிமித்தமாக, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டுக்கு வந்திருந்த சித்ராவும், மித்ராவும், கூடாரத்துக்குள் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, வளாகம் முழுவதும் நோட்டம் விட்டு விட்டு, சிங்காநல்லுார் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர்.பஸ்சில் சாரை சாரையாக பயணிகள் ஏறுவதை பார்த்த மித்ரா, ''அக்கா, வைரஸ் நோய் பயம், மக்களிடம் சுத்தமா போயிடுச்சு போலிருக்கே. பஸ் ஓடத் துவங்கியதும், கூட்டம் கூட்டமா வெளியே வர ஆரம்பிச்சிட்டாங்களே,''''மித்து, இப்ப, ஒரு நாளைக்கு, 5,000 பேருக்கு 'டெஸ்ட்' எடுக்குறாங்களாம்; 500 பேருக்குதான், 'பாசிட்டிவ்' வருதாம். 30 சதவீதமா இருந்த நோய் பாதிப்பு, 10 சதவீதமா குறைஞ்சிடுச்சாம். அதனால, அதிகாரிகள் தெம்பா இருக்காங்க. கொஞ்ச நாளா, உயிர் பலியும் குறைவாதான் இருக்காம்,''''அதெல்லாம், அதிகாரிங்க சொல்ற வழக்கமான கணக்கு; உண்மைன்னு நம்பிடாதீங்க. 'கொடிசியா' மையத்துல, 'ரம்மி' விளையாடுற மாதிரி, 'வாட்ஸ்அப்'புல வீடியோ வந்துச்சே, பார்க்கலையா,''''அதுவா, சுகாதாரத்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பலமுறை 'வார்னிங்' செஞ்சிருக்காங்க; அவுங்க நோயாளிகள்ங்கிறதுனால, யாரும் நம்மகிட்ட நெருங்க மாட்டாங்கங்கிற நெனைப்புல, ஆட்டத்தை தொடருறாங்களாம். அதிகாரிகளாலும், கடுமையா நடந்துக்க முடியலையாம்,''அப்போது, அவிநாசி ரோட்டில், பீளமேடு போலீஸ் ஸ்டேஷனை கடந்து, பஸ் சென்று கொண்டிருந்தது.ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வந்த சித்ரா, ''மித்து, இன்ஸ்., ஒருத்தரு, வாரம், மாசம், வருஷம் என, மாமூல் தொகையை பிரிச்சு வசூலிக்கிறாராம். ஸ்டேஷன் லிமிட்டுக்குள்ள எந்த பிரச்னை வந்தாலும், பெரும்பாலும் கட்டப்பஞ்சாயத்து செஞ்சே முடிச்சு வைக்கிறாராம்,''''மதுக்கடை பார்களில் இருந்து மட்டும், லட்சக்கணக்குல கரன்சி மழை மாமூலா கொட்டுதாம். 'பியூட்டி பார்லர்' பெயரில் நடக்குற மசாஜ் சென்டர்ல, வசூல் வேட்டை நடக்குதாம்,''''கல்லுாரியில், 'சீட்' வாங்கித்தர்றேன்னு சொல்லி, பெரிய தொகை வாங்குறாராம். கரன்சி மழை கொட்டுறதுனால, வேற யாரும் ஸ்டேஷனுக்கு வராத அளவுக்கு பார்த்துக்கிறாராம். வசூல் எக்குத்தப்பா வர்றதுனால, நஞ்சுண்டாபுரம் ரோட்டுல, ஒன்றரை கோடி ரூபாயில், பங்களா டைப் வீடு கட்டுறாராம்,'' என்றாள்.''அதெல்லாம் சரி, 'மொட்டை கடுதாசி'யா இருந்தாலும், சீரியசா விசாரிக்கிறாங்களாமே,'' என, கொக்கி போட்டாள் மித்ரா.''ஆமா மித்து, உண்மைதான்! கடிதத்தின் துவக்கமே அப்படிதான் ஆரம்பிக்குது. 'மொட்டை கடுதாசி என, நினைக்க வேண்டாம்'னு சொல்லிட்டு, ஒரே ஸ்டேஷன்ல, 5 வருஷம், 10 வருஷம், 15 வருஷமா வேலைபார்க்குற காவலர்களை பத்தி எழுதியிருக்காங்க,''''காவல் அலுவல் வேலை செய்யாமல், இன்ஸ்.,களுக்கு பணி விடை செய்றாங்க. பாஸ்போர்ட் விசாரணை, 'சிடி' ரைட்டர், ஸ்டேஷன் ரைட்டர், ஏசி ரைட்டர் பணியிடத்துல இருக்கறவங்களை வேறிடத்துக்கு மாத்தணும்னு சொல்லியிருக்காங்க. துணை கமிஷனர் அந்தஸ்துல இருக்குற, அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த கடுதாசி போயிருக்கு,''''சட்டம் - ஒழுங்கை கண்காணிக்கிற துணை கமிஷனர், இந்த கடுதாசியை அசால்ட்டா விடாமல், இதையே புகாரா பதிவு செஞ்சிருக்காரு; சிட்டி லிமிட்டுக்குள்ள இருக்கற ஸ்டேஷன் இன்ஸ்.,களுக்கு நகல் அனுப்பி, ரெண்டு நாளுக்குள் அறிக்கை அனுப்பச் சொல்லியிருக்காராம்,''அப்போது, ஹோப் காலேஜ் பாலத்தை சுற்றி, சிங்காநல்லுார் நோக்கி, வரதராஜபுரம் ரோட்டில், பஸ் சென்றது.''மித்து, இந்த ஏரியாக்காரர்தானே, கார்ப்பரேஷன் நிர்வாகத்தை குற்றம் சுமத்தி, பிளக்ஸ் பேனர் வச்சிருந்தாரு,'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.''ஆமாப்பா, கார்ப்பரேஷன் அதிகாரிங்க, ரொம்பவே 'அப்செட்' ஆகிட்டாங்க. இனி, தனி வீடுகளை தகரம் வச்சு அடைக்க வேண்டாம்; 'தனிமைப்படுத்திய வீடு'ன்னு, ஸ்டிக்கர் மட்டும் ஒட்டுனா போதும்னு சொல்லியிருக்காங்களாம்,''சிங்காநல்லுார் வந்தடைந்ததும், பஸ்சில் இருந்து கீழிறங்கிய மித்ரா, சூலுாருக்கு புறப்பட்டுச் சென்ற பஸ்சை பார்த்ததும், ''அக்கா, ஆளுங்கட்சி வி.ஐ.பி., சூலுார் தொகுதிக்கு மாறப்போறதா சொல்றாங்களே, உண்மையா,'' என, கிளறினாள்.''அப்படித்தான், எனக்கும் தகவல் வந்திருக்கு. தொகுதி முழுக்க பேசிட்டு இருக்காங்க. அவரது ஆட்களுக்கு, 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காங்களாம். அரசு அலுவலகங்களுக்கு போயி, புள்ளி விவரங்களை திரட்டிட்டு இருக்காங்க; முக்கிய நிர்வாகிகள், அரசியல் சாராத பிரமுகர்களையும் சந்திச்சு, ஆதரவு திரட்டுறாங்க,''''கட்சி நிகழ்ச்சியா இருந்தாலும், அரசு விழாவா இருந்தாலும், கட்சி நிர்வாகி வீட்டு விசேஷமா இருந்தாலும், ஆளுங்கட்சி வி.ஐ.பி., தவறாம ஆஜராகிடுறாரு. அதனால, தொகுதி மாறுறது உறுதியா இருக்குமோன்னு, கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க,''''அக்கா, கூட்டணி பைனலாகணும்; தொகுதி பிரிக்கணும்; அதுக்கப்புறம்தானே, யாருக்கு தொகுதின்னு முடிவு செய்வாங்க. இப்போதைக்கு தொகுதியை 'ரெடி' பண்ணி வச்சுக்குவாங்க,'' என்ற மித்ரா, திருச்சி ரோடு வழியாக காந்திபுரம் செல்லக்கூடிய டவுன் பஸ்சில் ஏறி அமர்ந்தாள்.சிங்காநல்லுார் சந்திப்பில், சிக்னலுக்காக, பஸ் காத்திருந்தபோது, சுழலும் விளக்குடன் அதிகாரி ஒருவர் கார் விரைந்து சென்றது.பஸ்சில் இருந்தபடி, அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மீறி, அதிகாரிகள் பலரும், தங்களது காரில் சுழலும் விளக்கு பொருத்த ஆரம்பிச்சிட்டாங்க,'' என, சப்ஜெக்ட் மாறினாள்.''அப்படியா, அந்தளவுக்கு யாருக்கு தில்லு இருக்கு,''''கலெக்டர் காருல, ஊதா நிற சுழலும் விளக்கு இருக்கு. டி.ஆர்.ஓ., காரிலும், கார்ப்பரேஷன் துணை கமிஷனர் காரிலும், போலீஸ் உயரதிகாரிகள் காரிலும், 'மல்டி கலர்' சுழலும் விளக்கு பொருத்தியிருக்காங்க. ஆனா, கார்ப்பரேஷனுக்கு புதுசா வந்திருக்கிற கமிஷனரோ, தனது காரில் இருந்த ஊதா நிற சுழலும் விளக்கை கழட்டிட்டாரு. மத்த அதிகாரிங்க, சுழலும் விளக்கு மாட்டி, 'கெத்து' காட்டுறாங்க,''''அக்கா, கீழ்மட்ட அதிகாரிகள் பலரும், இஷ்டத்துக்கு சுழலும் விளக்குகளை பயன்படுத்தியதை தடுக்கறதுக்கு தானே, புது சட்டமே கொண்டு வந்தாங்க. இப்படி, அப்பட்டமா மீறுனாங்கன்னா, உளவுத்துறைக்காரங்க கண்காணிச்சு, மத்திய அரசுக்கு 'ரிப்போர்ட்' அனுப்புவாங்கங்கறது, இவங்களுக்கு தெரியாதா, என்ன,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''அதெல்லாம் இருக்கட்டும், கார்ப்பரேஷன்ல நடக்குற ஆய்வு கூட்டத்துல, 'துணை'யான அதிகாரியை, சரிக்கு சமமா உக்கார வைக்கிறதை பார்த்து, மத்த அதிகாரிங்க, அதிர்ச்சியாகிட்டாங்களாமே,''''அடடே, ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா! துணையான அதிகாரி அந்தஸ்துல இருக்கறவங்க, தலைமை அதிகாரியின், வலது பக்க அல்லது இடது பக்க இருக்கையில் அமருவது வழக்கம்.புதுசா வந்திருக்கிற அதிகாரி, சரிக்கு சமமா இருக்கை போட வச்சு, பேசுறதுக்கு அனுமதிக்கிறாராம்,'' என, சித்ரா கூறியபோது, ஆரிய வைத்திய பார்மசியை, பஸ் கடந்து சென்றது.அதை கவனித்த மித்ரா, ''பா.ஜ., மாநில தலைவர் முருகன், மாங்கரையில் இருக்கிற, ஆயுர்வேத மருத்துவமனையில் முதுகு வலிக்கு, 'டிரீட்மென்ட்' எடுக்குறாராம். அவரை சந்திக்கிறதுக்கு ஏகப்பட்ட பிரமுகர்கள் தினமும் போறாங்களாம்.'புத்துணர்வு சிகிச்சைக்கு வந்திருக்கிறேன்; தினமும் கூட்டம் கூட்டமா வராதீங்க; ஆன்-லைன்ல பேசிக்கலாம்னு, ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டாராம்,'' என்றபடி, தனது மொபைல் போனுக்கு வந்திருந்த, 'வாட்ஸ்அப்' பதிவுகளை பார்க்க ஆரம்பித்தாள்.''மித்து, பா.ஜ., மாநில துணை தலைவரை, பாரதியார் பல்கலை சிண்டிகேட் உறுப்பினரா நியமிச்சது, கல்வியாளர்கள் மத்தியில் புகைச்சலை கிளப்பியிருக்காமே,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினாள் சித்ரா.''ஆமாக்கா, பல்கலை சிண்டிகேட் உறுப்பினரா கனகசபாபதியை நியமிச்சிருக்காங்க. இதுக்கு முன்னாடியும், இதே பதவியில் இருந்திருக்காரு. அப்ப, அரசியல் கட்சி நிர்வாகியா இல்லை. இப்ப, பா.ஜ., மாநில துணை தலைவரா இருக்காரு. அதனால, தவறான முன்னுதாராணம் ஆகிடும்னு, கல்வியாளர்கள் கொதிச்சுப் போயிருக்காங்க,''''ஓ... அப்படியா,'' என்ற சித்ரா, ''வடவள்ளி வி.ஏ.ஓ., ஆபீசுல இருக்குற தண்டல்காரங்க, வி.ஏ.ஓ., பெயரை சொல்லி, சான்றிதழ் வாங்க வர்றவங்களிடம், எக்குத்தப்பாய் காசு பறிக்கிறாங்களாம். வடவள்ளிக்காரர் சிபாரிசில் வர்றவங்களிடம் மட்டும் வாங்குறதில்லையாம்,'' என சொன்ன போது, பஸ் காந்திபுரத்தை வந்தடைந்தது.பஸ்சில் இருந்து கீழிறங்கிய இருவரும், பேக்கரி ஒன்றில், டீ ஆர்டர் கொடுத்தனர். டீயை வாங்கி உறிஞ்சிய மித்ரா, தனது மொபைல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியானாள்.''என்னப்பா, என்னாச்சு,'' என, சித்ரா கேட்க, ''அக்கா, கோவைபுதுார், கனரா வங்கி பக்கத்துல இருக்குற, 122ம் நம்பர் ரேசன் கடையில், கார்டுதாரர் இலவச அரிசி வேண்டாம்னு சொன்னாலும், வாங்குனதா வரவு வைக்கிறாங்களாம்,''''என்னென்ன பொருள் வாங்குனாங்கங்கிற மெசேஜ், குடும்ப தலைவரின் மொபைல் போன் நம்பருக்கு போறதுனால, குடும்ப தலைவிகளுக்கு தெரியறதில்லையாம். மாவட்ட வழங்கல் அதிகாரிங்க, கடைகளில் நேரடி ஆய்வு செஞ்சா, ரேஷன் அரிசி கடத்தலை கண்டுபிடிக்கலாம்னு சொல்றாங்க,'' என்றபடி, டீயை குடித்து முடித்து விட்டு, ஸ்கூட்டர் நிறுத்திய இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X