
'புல்டோசர்' என அனைவராலும் அழைக்கப்பட்ட, தந்தம் இல்லாத ஆண் (மக்னா) யானை, 'அவுட்டு காயைக்' கடித்ததில் நாக்கு சிதறி தாடைப் பகுதியில் படுகாயம் அடைந்த நிலையில், கடந்த ஆக., 15ம் தேதி கோவை மருதமலை பகுதியில் கோவை வனத்துறையினரால் கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயன்றனர். ஆனால், ஆக., 17ம் தேதி ஆணைக்கட்டி வழியாக கேரளா வனப் பகுதிக்குள் சென்று விட்டது.

பின், மன்னார்காடு பகுதியில் வனத்துறையினர் அதற்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், 'அந்த யானை உணவு உட்கொள்ள முடியாததால் அதன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. நீண்ட காலம் உயிர்வாழாது' என, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த யானை மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.
கோவை மற்றும் கேரள வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வலியுடன் திரிந்து வந்த யானை, இன்று காலை அட்டப்பாடி, சோலையூர் சாலை, அருகே மரப்பாலம் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்தது.

கேரள பகுதியில் புல்டோசர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட, அந்த யானையின் சடலத்திற்கு அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள், அவர்கள் முறைப்படி, பூ, பழம் போன்றவற்றை படைத்து, அந்த யானைக்கு பிரியாவிடை அளித்தனர்.
'மலையை ஒட்டிய பகுதியில் விவசாயம் செய்பவர்கள் பயிர்களை காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து காக்க அவுட்டுக்காய் வைக்கின்றனர். இதனால், வன உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. கோவை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களில் அவுட்டுக்காயால் உயிரிழந்த வனவிலங்கு மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது. அவுட்டுக்காய் வைப்பவர்களைப் பிடிக்கவும், கடும் தண்டனை வழங்கவும் வனத்துறை முயற்சிக்க வேண்டும்' என, சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE