சென்னை :'முன்னாள் முதல்வர் அண்ணாதுரை இருந்திருந்தால், மும்மொழி கொள்கையை அவரே ஏற்றிருப்பார்' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்:புதிதாக அமலாக உள்ள, தேசிய கல்வி கொள்கையில், மும்மொழி கொள்கை பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த மும்மொழி கொள்கையானது வருத்தத்தையும், வேதனையையும் தருவதாக தாங்கள் கூறியுள்ளீர்கள். இது, எங்களை போன்ற கல்வியாளர்களுக்கு அதிர்ச்சி தருகிறது.
உண்மையில், மும்மொழி கொள்கையை, தமிழக மக்கள் எதிர்க்கிறார்களா அல்லது அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்களா என்று பார்க்க வேண்டும். மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால், அது, தமிழக மக்களுக்கு வேதனை தருவதாக இருக்கும்.குறிப்பாக, தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்தியாவிலேயே, தமிழக மாணவர்கள் மட்டுமே, தமிழை தவிர வேறு ஒரு இந்திய மொழியை கற்றுக் கொள்ள முடியாமல், 50 ஆண்டுகளாக தவிக்கின்றனர். அதனால், பல அரிய வாய்ப்புகளை தவற விடும் நிலை உள்ளது.
தமிழகத்தில் உள்ள, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மும்மொழி கொள்கை பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இரு மொழி கொள்கையே அவர்களுக்கு சிறந்தது என்றும், வாதம் செய்கின்றனர்.ஆனால், ஒன்றை கவனிக்க வேண்டும். பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும், வசதி படைத்த மாணவர்கள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும், வேறு பாட திட்டங்களிலும், தனியார் பள்ளிகளில் சேர்கின்றனர். அங்கு அவர்கள், தாங்கள் விரும்பும் கூடுதல் மொழியை கற்கின்றனர்.
கட்சிகளின் கண்ணாமூச்சி
குறிப்பாக, மும்மொழி கொள்கையை எதிர்க்கும், அரசியல் கட்சி தலைவர்களின் பிள்ளைகளும், பேர பிள்ளைகளும், மூன்று மொழிகளில் படித்துள்ளனர். பல அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தி கட்டாய மொழியாக உள்ளது; ஏன் இந்த இரட்டை நிலை. தங்கள் மாணவர்கள், கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதற்கு, அரசே ஏன் வாய்ப்பை மறுக்க வேண்டும். இது, ஏழை மாணவர்களை, மேலும், ஏழையாகவே வாழ வைப்பதாகாதா அல்லது அவர்கள் அரசு பள்ளிகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடா...
மும்மொழி கொள்கையின் முக்கிய சாராம்சங்களில் ஒன்று, பல மொழிகள் உள்ள நாட்டில், அனைவரும் சமமான சமூக அந்தஸ்தை பெறுவதற்கானது. பல் வகை கலாசாரம் மற்றும் பல் வகை மொழிகள் இருக்கும் போது, மாணவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மாறாக, குறுகிய அரசியல் நோக்கங்களுக்குள், மொழிகளை அடக்கி விடக்கூடாது.
வேலைவாய்ப்பு பெருகும்
புதிய கல்வி கொள்கையை பொறுத்தவரை, ஹிந்தி போன்ற ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டுமே படிக்க வேண்டும் என்று கூறவில்லை. அதிகம் பேர் பேசும், ஹிந்தியையும் படிக்க வாய்ப்பளிக்கிறது. அதனால், இளைஞர்களுக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
அனைவருக்கும், தேசப்பற்று மேலோங்கும், தேசிய அளவில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஏற்படும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட மதிப்பும், திறனும் அதிகரிக்கும்.
பல்வேறு மாநிலங்கள் இடையே வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் வியாபாரம் பெருக வழி ஏற்படும். பல மாநிலங்கள் இடையிலான மக்கள் இடையே, நல்லெண்ணம் உருவாகும்.
மத்திய அரசு துறைகள், பாதுகாப்பு துறைகள் போன்றவற்றில், பல்வேறு மாநில மக்களின் பங்களிப்பு பூர்த்தியாகும். தேவைக்கேற்ப ஆட்களை பணியமர்த்தி கொள்ளலாம்.
பல மாநிலங்களிலும் செயல்படும், பன்னாட்டு நிறுவனங்களில், பல மாநிலங்களை சேர்ந்த தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம்.
அண்ணாதுரை இருந்திருந்தால்...
ஹிந்தி என்பது நமது நாட்டின், அலுவல் மொழியாக உள்ளது. அதேநேரம், வணிக மொழியாக, மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது. இதை, நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான தமிழக அரசியல்வாதிகள், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை சுட்டிக்காட்டி, அவர், 1968ம் ஆண்டில் இரு மொழி கொள்கையை ஏற்படுத்தினார் என்கின்றனர். இது நடந்து, 50 ஆண்டுகளை தாண்டி விட்டது.
இந்த காலகட்டத்தில், உலகில் எவ்வளவோ மாற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லையற்ற உலகமாக விரிந்துள்ளது. எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகியுள்ளன. வணிகம், வியாபாரம், தொழிற்துறை, கலாசாரம் என, பல துறைகளிலும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இந்தச் சூழலில், தொலைநோக்கு பார்வையுடைய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை இருந்திருந்தால், அவர் வலியுறுத்தி, பின்னர் கைவிட்ட திராவிட நாடு கொள்கையை, அவர் அமல்படுத்தியிருந்தாலும் கூட, தற்போதைய சூழலுக்கு ஏற்ப மொழி கொள்கையை மாற்றியிருப்பார்.
தேசிய நீரோட்டம்
எனவே, பல்வேறு மாநில மக்களுடன் இணைந்து வளர்ச்சி பெறுவதற்கும், முன்னேறுவதற்கும், நமக்கு நேரம் வந்துள்ளது.
இந்த நேரத்தில், வளர்ச்சியை ஏற்படுத்துவதும், தேசிய நீரோட்டத்தில் நம் இளைஞர்களை ஊக்குவிப்பதும், கலாசாரம், சமூக மற்றும் பொருளாதார அளவில் மக்களை முன்னேற்றுவதும் நமது கடமையாகும். 'மொழியை கற்றுக் கொள்ளுங்கள், உங்களால் போரை தவிர்க்க முடியும்' என, பிரபலமான அரேபிய பழமொழி ஒன்று உண்டு. இந்த பழமொழி, தற்போதைய நிலைக்கு மிகவும் பொருத்தமானது.இதை ஆய்வு செய்யுங்கள். ஏன் நாம் மும்மொழி கொள்கையை எதிர்க்க வேண்டும். ஏன் கூடுதலாக ஒரு மொழியை நம் மாணவர்கள் கற்க வாய்ப்பு வழங்கக் கூடாது என்பதை ஆய்வு செய்து, சிறந்த முடிவெடுங்கள்.இவ்வாறு, பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE