பார்லி., மழைக்கால கூட்டத் தொடர், வரும், 14ம் தேதி துவங்க உள்ளது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக, 785 எம்.பி.,க்களில், பெரும்பாலானோர், பார்லி., கூட்டத்திற்கு வர மாட்டார்கள் என, தெரிகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், பார்லி., கூட்டத்தில் பங்கேற்பதற்கு, கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பார்லி., கூட்டத்திற்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன், எம்.பி.,க்கள் கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என, சான்று பெற வேண்டும்.
இதன் காரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த, 65 வயதுக்கு மேற்பட்ட, 15 எம்.பி.,க்கள், பார்லி., கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து, லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லாவிடம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
அவர்களின் வருகை குறித்து, ஓம் பிர்லா, லோக்சபா தி.மு.க தலைவர், டி.ஆர்.பாலுவிடம் உறுதி செய்து கொள்வார். எனினும், டி.ஆர்.பாலுவுக்கு, மூட்டு வலி பிரச்னை உள்ளதால், கூட்டத்தில் கலந்து கொள்வாரா என, தெரியவில்லை.
லோக்சபா சபாநாயகர் அலுவலகம், பல எம்.பி.,க்களை தொடர்பு கொண்டு, அவர்களின் வருகையை உறுதிப்படுத்தி வருகிறது. ஆனால், பெரும்பாலான எம்.பி.,க்கள், இன்னும் பதில் அளிக்காமல் உள்ளனர். தமிழகத்தை போல, பீஹார்,ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா, மேற்கு வங்க எம்.பி.,க்களும், பார்லி.,க்கு வருவதை தவிர்ப்பர் என, தெரிகிறது.
மேற்கு வங்க முதல்வர், மம்தா, '65 வயதுக்கு மேற்பட்ட, தன் கட்சி எம்.பி.,க்கள், டில்லி செல்ல வேண்டாம்' என, உத்தரவிட்டுள்ளார். இதே போல, ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான, நிதிஷ் குமாரும், தன் எம்.பி.,க்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். சிவசேனா, பார்லி., கூட்டத்திற்கு செல்வதை, எம்.பி.,க்கள் விருப்பத்திற்கு விட்டு விட்டது.
மொத்த எம்.பி.,க்களில், 65 வயதை கடந்தோர், 200பேர் உள்ளனர். இதில், முன்னாள் பிரதமர், மன்மோகன்சிங்,87, ஏ.கே.அந்தோணி, 82, உள்ளிட்ட ராஜ்யசபா எம்.பி.,க்கள் 97 பேரும் அடங்குவர்.
பார்லி., கூட்டம் 17 நாட்கள் நடக்க உள்ளது. பார்லி., வளாகத்தில், எம்.பி.,க்கள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என, 2,000க்கும் அதிகமானோர் கூடுவர் என்பதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கையாள்வது, கடினமான பணியாக இருக்கும் என தெரிகிறது.-நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE