வாஷிங்டன்: 'ஜனநாயகக் கட்சியின் சுற்றுச்சூழல் கொள்கையானது உலகை மாசுபடுத்திவரும் சீனா ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவாக உள்ளது' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக தாக்கி பேசினார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவ. 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். புளோரிடாவில் நடந்த பிரசார கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை டிரம்ப் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் காற்று மாசுபடுத்துவதை தடுப்பதில் சிறந்த நாடாக உள்ளோம். உலகிலேயே மிகவும் சுத்தமான நீர் மற்றும் காற்றை அமெரிக்கா அனுபவித்து வருகிறது.

அமெரிக்காவின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த சுற்றுச்சூழல் கொள்கையை நாம் கடைப்பிடித்து வருகிறோம். அதனால்தான் 2017ல் பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து அதில் இருந்து வெளியேறினோம். சீனா இந்தியா ரஷ்யா போன்ற நாடுகள் உலகை மாசுபடுத்துகின்றன. அவர்கள் தங்களுடைய நாட்டை சுத்தப்படுத்த மாட்டார்களாம். ஆனால் அவர்களுக்காக நாம் நம்முடைய நாட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமாம்.
மேலும் அவர்களுக்கு நாம் நிதி உதவியும் அளிக்க வேண்டும். அதனால்தான் அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினோம். ஆனால் ஜோ பிடனின் சுற்றுச்சூழல் கொள்கையானது நம் நாட்டை பாதுகாப்பதற்கானது அல்ல; நம்முடைய மத்திய வர்க்க மக்களுக்கு தண்டனை கொடுப்பதாகும். அதே நேரத்தில் சீனா, ரஷ்யா, இந்தியாவுக்காக நம் நாட்டை திறந்து விட்டுவிடுவார். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE