வேடசந்தூர்: இன்று (செப்.,11) நமது தினமலர் நாளிதழில் ‛பாலை தந்து வாழ்வை தந்த பசு, சாலையில் பலியானதால் தவிப்பு' என்ற செய்தி வெளியானது. கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பணி நிமித்தமாக காரில் திண்டுக்கல் வழியாக சென்று கொண்டிருந்த போது, இந்த செய்தியை படித்துள்ளார்.
அதில் பாதிக்கப்பட்ட வெள்ளத்தாய் என்பவரது மொபைல் எண்ணும் இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்பு கொண்டு பேசிய ராதாகிருஷ்ணன், ஆறுதல் கூறியதுடன் கண்டிப்பாக உதவி செய்வதாகவும் உறுதி கூறினார். மேலும், திண்டுக்கல் கால்நடைத்துறை இணை இயக்குனரிடம், பாதிக்கப்பட்ட ஏழை வெள்ளைத்தாய்க்கு உரிய ஆறுதல் கூறி மீண்டும் நன்கு பால் தரக்கூடிய பசுமாடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நேரில் சென்று ஆறுதல் கூற அறிவுறுத்தினார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடமும் இதுகுறித்து உதவிட கேட்டுக்கொண்டார்.


அதனடிப்படையில் கால்நடைத்துறை டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறையினர், திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள கிரியம்பட்டியை சார்ந்த பாதிக்கப்பட்ட வெள்ளத்தாயை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். வாழ்வாதாரம் இழந்த ஒரு ஏழைப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் மனிதநேயத்துடன் நிவாரணம் கிடைத்திட உதவிய ராதாகிருஷ்ணனுக்கும், மனிதநேயத்துடன் செய்தி வெளியிட்டு பேருதவியாக இருந்த தினமலர் நாளிதழ் நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி என பலரும் பாராட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE