போரைத் தவிர்க்க இந்தியா-சீனா இடையே மினி பஞ்சசீலம்! | Dinamalar

பொது செய்தி

இந்தியா

போரைத் தவிர்க்க இந்தியா-சீனா இடையே 'மினி' பஞ்சசீலம்!

Updated : செப் 13, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (17)
Share
புதுடில்லி,:இந்தியா - சீனா இடையே போரை தவிர்க்கும் விதமாக, உடனடியாக படைகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட ஐந்து அம்ச திட்டத்துக்கு, இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. ஏற்கனவே, இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட பஞ்சசீல கொள்கையைப் போல் இது, 'மினி' பஞ்சசீல கொள்கையாக கருதப்படுகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில், சமீப காலமாக சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியா - சீனா ,  'மினி' பஞ்சசீலம்!

புதுடில்லி,:இந்தியா - சீனா இடையே போரை தவிர்க்கும் விதமாக, உடனடியாக படைகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட ஐந்து அம்ச திட்டத்துக்கு, இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. ஏற்கனவே, இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட பஞ்சசீல கொள்கையைப் போல் இது, 'மினி' பஞ்சசீல கொள்கையாக கருதப்படுகிறது.

காஷ்மீரின் லடாக் பகுதியில், சமீப காலமாக சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், ஜூனில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டபோது, இந்திய வீரர்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது சீன வீரர்கள் தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு நடந்தது.இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, பதற்றம் தணிந்தது. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில் சீன ராணுவம், மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதால், எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இடையே, நேற்று முன்தினம், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன், எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து பேச்சு நடத்தினார்.
நீண்ட நேரம் நடந்த பேச்சின் முடிவில், எல்லையில் பதற்றத்தை தணிக்க, இரு தரப்புக்கும் இடையே ஐந்து அம்ச திட்டத்தை பின்பற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

* தற்போது எல்லையில் நிலவும் சூழல், இரு நாடுகளுக்கும் ஏற்றதாக இல்லை. இதன் காரணமாக, எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்
* எல்லை பகுதியில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை, பெரிய விவகாரமாக்கி சர்ச்சையை ஏற்படுத்தும் சூழலை, இரு தரப்பும் உருவாக்கக் கூடாது* ஏற்கனவே, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சின் அடிப்படையில், பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காணும் நடவடிக்கைகளை தொடர வேண்டும்* இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி, எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதற்காக தொடர் பேச்சு நடத்த வேண்டும்
* எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு சூழலுக்கும், இரு நாடுகளும் வாய்ப்பு அளிக்கக் கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியதாவது:இந்திய - சீன நாடுகளுக்கு இடையே, எல்லை விவகாரத்தில் கருத்து வேற்றுமை ஏற்படுவது வழக்கமானது தான். ஆனால், அந்த கருத்து வேறுபாடுகள், மிகப்பெரிய பிரச்னையாக உருவாக வழிவகுத்து விடக் கூடாது. இரு நாடுகளும், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றன. எனவே, இரு நாடுகளும் மோதலில் ஈடுபடாமல், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இரு தரப்புக்கும் எந்தவிதமான சந்தேகமும் ஏற்படாமல், நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார். சீன அமைச்சருடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், எல்லையின் லடாக் பகுதியில், சீனா அளவுக்கு அதிகமாக படைகளை குவித்து வருவது பற்றி குறிப்பிட்டு, அவற்றை உடனடியாக வாபஸ் பெறும்படியும் வலியுறுத்தினார்.இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பஞ்சசீல கொள்கை ஒப்பந்தம் போன்ற, 'மினி பஞ்சசீல' கொள்கையாக, இந்த ஐந்து அம்ச திட்டங்கள் கருதப்படுகின்றன.


பஞ்சசீல கொள்கை என்றால் என்ன?நம் நாட்டின் முதல் பிரதமரான நேரு, அண்டை நாடுகளுடனும், பிற நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக, பஞ்சசீல கொள்கையை வடிவமைத்தார். பஞ்சசீலம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு, ஐந்து நற்பண்புகள் என அர்த்தம். சுதந்திரம் அடைந்த பின், சீனாவுக்கும், நமக்கும் சுமுக உறவு நிலவி வந்தது. அப்போது, அமெரிக்க அரசு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதால், சீனாவுக்கும், நமக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத் பகுதியில், சீனாவுக்கும், நமக்கும் இடையே நல்லுறவு மற்றும் வர்த்தக உறவை மேற்கொள்ளும் வகையில், 1954 ஏப்., 29ல், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்துக்கு, பஞ்சசீல கொள்கை ஒப்பந்தம் என பெயரிடப்பட்டது. இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், அப்போதைய சீன
பிரதமர் சூ என் லாய்க்கும் இடையே, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.


ஒப்பந்தத்தின் ஐந்து முக்கிய அம்சங்கள்* ஒவ்வொரு நாடும், பிற நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும்
* எந்த ஒரு நாடும், மற்ற நாட்டை தாக்கக் கூடாது
* ஒரு நாட்டின் உள் விவகாரத்தில், மற்ற நாடுகள் தலையிடக் கூடாது
* ஒவ்வாரு நாடும் சமத்துவம் மற்றும் நல்லுறவை பின்பற்ற வேண்டும்
* ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளுடன் அமைதியான முறையில் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்த ஐந்து முக்கிய அம்சங்களே, பஞ்சசீல கொள்கை ஒப்பந்தம் என கூறப்படுகிறது. கடந்த, 1959ல், திபெத் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பின், நமக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை காற்றில் பறக்க விட்ட சீனா, 1962ல் நம்முடன் சண்டையிட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X