பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்கால பாதிப்பு தவிர்க்க 'அலர்ட்': மாவட்ட நிர்வாகம் உஷார் நடவடிக்கை

Added : செப் 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:வடகிழக்கு பருவமழை பாதிப்பு மற்றும் சேதத்தை, உடனுக்குடன், மின்னஞ்சல் வாயிலாக, பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு அனுப்ப வேண்டு மென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.வடகிழக்கு பருவமழை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, சப் கலெக்டர் பவன்குமார் முன்னிலை வகித்தனர்.கலெக்டர் பேசியதாவது:வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால், அக்., முதல் தேதியில் இருந்து, கோட்ட, தாலுகா அளவில் கட்டுப்பாட்டு அறைகள், 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மாவட்ட அளவில் மழைசேதம், பாதிப்பை collrtupddm@gmail.com என்ற பேரிடர் மேலாண்மை துறை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.பேரிடரை சமாளிக்க அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர் அனைவரும், தேவையான உபகரணங்களுடன் தயார்நிலையில் இருக்க வேண்டும். பொதுமக்கள், 1077 என்ற எண்ணில், மழை பாதிப்புகளை தெரிவிக்கலாம்.வெள்ளசேத அறிக்கையை உடனடியாக தயாரித்து, 24 மணி நேரத்துக்குள் நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் நீராதாரங்களை கண்காணிக்க வேண்டும்.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பாக தங்கவைக்க, முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.அங்கு, தொற்று பரவாமல் தடுக்க, அவர்களை விசாலமான பகுதியில் தங்கவைக்க வேண்டும். முகாம்களில் தங்கும் மக்களுக்கு, முக கவசம் வழங்க வேண்டும். சுகாதார துறையினர், உயிர்காக்கும் மருந்தை, தேவைக்கேற்ப இருப்பு வைத்திருக்க வேண்டும்.குடிநீரில், குளோரின் கலந்து வினியோகம் செய்வதை உறுதிபடுத்த வேண்டும். அனைத்து துறை அலுவலர், பணியாளர்களை கொண்டு, மண்டல அளவில் குழு உருவாக்கி, மழைக்கால நிவாரணம் மற்றும் மீட்பு பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X