சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

நாளும் கோளும் நல்லவருக்கு இல்லை!

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 டீ கடை பெஞ்ச்

''வாய்ப்பு கிடைக்கிற இடத்துல எல்லாம் கொள்ளையடிக்கிறாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

''என்ன விஷயம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவுல புலி, சிங்கம், சிறுத்தை, கழுதைப்புலி, ஓநாய் போன்ற விலங்குகளுக்காகவும், கழுகு போன்ற பறவை இனங்களுக்காகவும், தினமும், 450 கிலோ மாட்டு இறைச்சி வாங்குறாங்க...

''இதுல, 325 கிலோ இறைச்சி, ஒப்பந்த அடிப்படையிலும், 125 கிலோ இறைச்சி, வனச்சரகர் ஒருத்தர் வாயிலாகவும் வாங்குறாங்க...

''பெரம்பூரில் இருக்குற, மாடு அறுக்கும் இடத்தில், உயிருடனும், திடமான உடல்நிலையிலும் உள்ள மாட்டை கொன்று, அதை வெட்டி, அரசு கால்நடை மருத்துவரால், அந்த இறைச்சி மீது முத்திரையிட்டு, பூங்காவிற்கு அனுப்பணும் என்பது தான், வனத் துறையின் விதிங்க...

''ஆனால், அந்த வனச்சரகர், கூடுவாஞ்சேரியில இருக்குற, தனியார் இறைச்சி விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து, நோய்வாய்ப்பட்ட, இறந்த மாட்டின் இறைச்சியை வாங்குறாருங்க...

''இப்படி மோசடி பண்ணினதுல, இரண்டு வருஷத்துல, 20 லட்சம் ரூபாய் அளவுக்கு கமிஷன் அடிச்சுருக்காங்க... வாயில்லா ஜீவன்கள், புகாரா சொல்ல போகுதுன்னு நினைச்சுட்டாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''கால்நடை டாக்டர் பணியிடம் மூணு வருஷமா காலியா இருக்கு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''இது எங்கே பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துல, 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுது... அங்கே இருக்கிற கால்நடை மருத்துவமனையில, மூணு வருஷமா டாக்டர் பணியிடம் காலியாக இருக்கு வே...

''வளர்ப்பு யானைகளுக்கும், நீலகிரியில இருக்குற வனவிலங்குகளுக்கும் அவசர சிகிச்சை வேணுமுன்னா, கோவையிலிருந்து தான் டாக்டர் வரணும் வே...

''அங்கிருந்து டாக்டர் வர தாமதம் ஆகுறதால, சில விலங்குகள் உயிரிழக்குற அவலம் தொடருது... இங்கே, கால்நடை டாக்டர் நியமிக்கிறதுக்கு, மூணு வருஷமா யார் முட்டுக்கட்டை போடுதாவன்னு தெரியாம, ஊழியர்கள் தலையை பிச்சுக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''இந்த அதிகாரிகளோட அலப்பரை தாங்க முடியலை ஓய்...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''என்ன செய்யிதாவ வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''முதல்வர் இ.பி.எஸ்., வெளி மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு போறப்போ, அவரது பத்திரிகையாளர் சந்திப்பு முடியற வரைக்கும், 'கொரோனா' பரிசோதனை முடிவுகளை வெளியிட விடாமல், அதிகாரிகள் தடுக்கறா... இதனால், சில நாட்களில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாக, இரவு, 9:00 மணி ஆகறது ஓய்...

''ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முதல்வரின் அறிவிப்பு, ஆக., 31ம் தேதி காலம்பறயே தயாராகி இருக்கு... ஆனால், ராகு காலம் முடிஞ்சு, சாயங்காலம் 6:00 மணிக்கு மேல தான், அறிவிப்பு வெளியிடணுமுன்னு சொல்லி, தேவையில்லாம, காலதாமதம் செஞ்சுருக்கா ஓய்...

''மக்களுக்கு, அத்தியாவசியமா தெரிய வேண்டிய விஷயங்களிலும், இப்படி தாமதம் செய்யறது நன்னாஇல்லை ஓய்...''என முடித்தார், குப்பண்ணா.

''நாளும் கோளும் நல்லவருக்கு இல்லைங்க...'' எனக் கூறியபடி, அந்தோணிசாமி நடையைக் கட்ட, நண்பர்களும் கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-செப்-202006:30:30 IST Report Abuse
D.Ambujavalli அவர்கள் வீட்டில் திடீரென்று ஒருவருக்கு ஹார்ட் அட்டாக், மூச்சுத் திணறல், குழந்தைக்கு காய்ச்சல் என்றால் ராகுகாலம், எம கண்டம் பார்த்து அழைத்துப்போவதற்குள், எமனே தன டூட்டியை முடித்து விடுவானே பொதுமக்களுக்கு செய்வதற்கு நாள், நட்சத்திரம்... விளங்கிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X