செய்தி சில வரிகளில்...இந்தியா

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020
Share
Advertisement

அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்

புதுடில்லி: மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், நேற்று காலை, அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலை, 3:57 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில், 3.5 ஆக பதிவானது.இதையடுத்து, 7:06 மணிக்கு ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில், 3.6 ஆக பதிவானது. கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து, சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பயங்கரவாதி உடல் கண்டெடுப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நீரோடையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதி அகிப் அகமது லோன் என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.கடந்த, 7ம் தேதி, அப்பகுதியில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், அவர் உயிரிழந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.

ரியா ஜாமின் மனு தள்ளுபடி

மும்பை: 'பாலிவுட்' நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில், தொடர்புடையவர் என கூறப்படும், அவரது காதலி ரியா சக்கரவர்த்தி, ரியாவின் சகோதரர் ஷோவிக் உள்ளிட்ட, ஆறு பேரை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.இந்நிலையில், ஜாமின் வழங்கக்கோரி, ரியா மற்றும் அவரது சகோதரர் தாக்கல் செய்த மனுக்களை, சிறப்பு நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஒடிசா அமைச்சருக்கு தொற்று

புவனேஷ்வர்: ஒடிசா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் துக்குனி சாஹூ, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.இதை, 'டுவிட்டர்' வாயிலாக தெரிவித்த சாஹூ, கடந்த நாட்களில், தன்னை சந்தித்த அனைவரும், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஒடிசாவில், வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாவது அமைச்சர் சாஹூ ஆவார்.

கேரள அமைச்சருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநில தொழில் துறை அமைச்சர் ஜெயராமனுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, நேற்று உறுதிபடுத்தப்பட்டது. அமைச்சரின் மனைவியும், வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, இவர்கள் இருவரும், கண்ணுாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விமான சேவைகள் இன்று துவக்கம்

மும்பை: இந்தியா மற்றும் பிரிட்டன் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, ஏற்கனவே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், லண்டனில் இருந்து ஐதராபாதிற்கு, 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' நிறுவனம், இன்று முதல், விமானங்களை இயக்க உள்ளது. வாரத்திற்கு, நான்கு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 3 குருக்கள்கள் படுகொலை

பெங்களூரு: கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள அரகேஷ்வரா கோவிலுக்குள், நேற்று புகுந்த கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடினர். இதை பார்த்த குருக்கள்கள் சிலர், கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தனர்.கொள்ளையர்கள் அவர்களை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பினர். உயிரிழந்த மூன்று குருக்கள்களின் குடும்பத்தினருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

வழக்கில் சிக்கும் அதிகாரிகள்

புதுடில்லி: வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்வதற்காக, ஐரோப்பிய நாடான, இத்தாலியைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' நிறுவனத்திடம் இருந்து, 3,600 கோடி ரூபாய் மதிப்பில், 12 ஹெலிகாப்டர்கள் வாங்க, 2007ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், 362 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக, குற்றஞ்சாட்டப்பட்டது.இந்நிலையில், மத்திய தலைமை கணக்கு தணிக்கை முன்னாள் அதிகாரி, சசிகாந்த் சர்மா, முன்னாள் விமானப் படை துணை தளபதி ஜஸ்பிர் சிங் பனேசார் ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கங்கனா மீது போதை வழக்கு

மும்பை: மஹாராஷ்டிர அரசுக்கும், நடிகை கங்கனா ரணாவத்துக்கும் இடையே, சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில் இருந்து, மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், போதைப் பொருட்களை கங்கனா உபயோகித்ததாக, அவரது முன்னாள் காதலனும், நடிகருமான ஷேகர் சுமன் புகார் அளித்தார்.இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த, மும்பை போலீசுக்கு, மஹாராஷ்டிர அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X