பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவில் இது முதன்முறை: மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான கருவறை!

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020
Share
Advertisement
இந்தியா, முதன்முறை, மனநலம்,  கருவறை!

வாழ்க்கையில் எத்தகைய துன்ப நிலை தோன்றினாலும், 'நாம் பரவாயில்லை... அவர்களை விட நன்றாக இருக்கிறோம்' என, பிறருடன், ஒப்பிட்டு பேசுவது, மனித இயல்பு.அவ்வாறு ஒப்பிட்டு பேச முடியாத ஒரு நிலையில், ஒரு மனிதன் இருக்கிறான் என்றால், நிச்சயம் அந்த மனிதன், மனநிலை பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்க முடியும்.அதுவும் யாரும் இல்லாத, வீட்டை விட்டு துரத்தப்பட்ட, தெருவில் சுற்றித் திரியும், மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களின் நிலை, அந்தோ பரிதாபம். அதுவும் பெண்கள் என்றால் சொல்ல வேண்டியதில்லை.


அணைத்துக்கொண்ட அறக்கட்டளை!

'நாங்கள் இருக்கிறோம்; கவலை வேண்டாம்' என இவர்களை வாரியணைத்துக்கொள்கிறது, கொங்குநாடு மனநல மருத்துவர் கழகம். இதற்கென, 2002ம் ஆண்டில் கொங்குநாடு மனநல அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது. குணம் பெறக்கூடிய, கடினமான நிலையில் உள்ள, தீவிர சிகிச்சை தேவைப்படாத, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அதாவது, 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்கவும், மருத்துவச் சேவைகள் பெறவும், தரமான இடம் வழங்குவது என்ற நோக்குடன் இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது.அறக்கட்டளையின் கீழ், தொண்டாமுத்துார் அருகே உள்ள தாளியூரில், 114 படுக்கைகள் கொண்ட உதயம் மனநல மருத்துவ மையமாக உருவெடுத்துள்ளது.இங்கு மனநோயாளிகள் தங்க, உணவு மற்றும் மருத்துவ சேவைகள் மற்றும் மற்ற செலவுகளுக்கு தற்போது மாதம், ஆறாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆண்கள், பெண்களுக்கு தனிப்பிரிவுகள் உள்ளன.


தொழில் பயிற்சியும் உண்டு!

பகலில் தொழில் சார்ந்த பயிற்சி நேரம், உணவருந்தும் நேரங்களில் அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். இவர்களுக்கு பிறநோய் பாதிப்பு ஏற்பட்டால், சிறப்பு மருத்துவ சேவை பெறவும் வழி உண்டு. காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகாசனப் பயிற்சி வழங்கப்படுகிறது. சமூகத்திறன் மேம்பாட்டு பயிற்சியும், காகிதப்பைகள், நெகிழிப் பின்னல் பைகள் தயாரிக்கும் பயிற்சியும் வழங்கப்படுகிறது. பாக்குமட்டை தயாரிப்பு பயிற்சிலும், சிலர் ஈடுபடுகின்றனர்.


இந்தியாவில் முதன்முறை!


பட்டதாரிகள், படிப்பறிவு இல்லாதவர்கள், தொழிற்கல்வி படித்தவர்கள், தொழிலாளிகள், முதலாளிகள், பாமரர்கள், செல்வந்தர்கள் என இருந்தாலும், அனைவரும் ஒரு குடும்பமாக உள்ளதாக கூறுகிறார், அறக்கட்டளை தலைவர் டாக்டர் பிரதீப்.அவர் கூறுகையில், ''இந்த அறக்கட்டளை சார்பில் ஆட்டிசம் நோய்க்கான ஒரு கிராமம், மூளைச்சிதைவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி காப்பகம், போதை நீக்கு மையம், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், பெரியவர்களை பராமரிக்க இடம், பகல் நேர பயிற்சி மையம் என, பல கோணங்களில் விரிவுபடுத்தவுள்ளோம். இந்திய அளவில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள் இணைந்து, நோயாளிகளின் நலனுக்காக நடத்தி வரும் அறக்கட்டளை, இது ஒன்றுதான்,'' என்றார்.


அறக்கட்டளையின் துாண்கள்

கொங்குநாடு மனநல அறக்கட்டளையின் தற்போதைய தலைவராக டாக்டர் பிரதீப், செயலாளராக டாக்டர் சீனிவாசன், பொருளாளராக டாக்டர் ரமணி, அறக்கட்டளை உறுப்பினர்களாக டாக்டர்கள் மோனி, பொன்னி முரளிதரன், ஆனந்த், வெங்கடேஸ்வரன் ஆகியோர் உள்ளனர். இதில், டாக்டர் பொன்னி முரளிதரன், இந்திய மனநல மருத்துவர் சங்கம் கொங்குநாடு கிளையின் தலைவராகவும் உள்ளார்.அறக்கட்டளை நிர்வாக அலுவலர் சீனிவாசன் கூறுகையில், ''ஒவ்வொரு நோயாளியையும் பராமரிக்க, செலவு அதிகமாக இருந்தாலும், ஆறாயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது. மீதமுள்ள தொகை, கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளிடம் இருந்து பெறப்படுகிறது. நன்கொடைக்கு, 80 ஜி பிரிவில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கொடை உள்ளம் கொண்டவர்கள், 94433 33293, 96294 30355 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.


உருவாக்கியவர்களும்உயர்த்தியவர்களும்!

மனநல மருத்துவத்துறை மூத்த பேராசிரியர் டாக்டர் ஜெயராமன், அறக்கட்டளை உருவாக பெரும் முயற்சி மேற்கொண்டார். அவரைத் தவிர, அன்று உறுப்பினர்களாக இருந்த டாக்டர்கள் பாலு, பிரதீப், ராதாகிருஷ்ணன், ரமணி, மணி, ரகுநாதன், ஸ்ரீநிவாசன், நந்தகுமார், வெள்ளைச்சாமி, வெங்கடேஸ்வரன், ஆனந்த், செல்வராஜ், ரகுத்தாமன், பொன்னிமுரளிதரன் ஆகியோர், தாமாக முன்வந்து உதவினர். இந்த அறக்கட்டளை வளர்ச்சி அடைய சக்தி மசாலா, சக்தி சுகர்ஸ், பண்ணாரியம்மன் சுகர்ஸ், ரோட்டரி சங்கங்கள், மருந்து தயாரிப்பாளர்கள் பலர் உதவி வருகின்றனர்.


தினமலருக்கு நன்றி!

மனநல மருத்துவர் மோனி கூறுகையில், ''அறக்கட்டளை துவங்கும் போது, அதன் நிறுவனர் டாக்டர் ஜெயராமனுக்கு, 'தினமலர்' நாளிதழ் அளித்த ஊக்கம், இந்நிறுவனம் மேலும், மேலும் வளர துாண்டுகோலாக இருந்தது. மனநலம் சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டு, மக்களுக்கு சேவை வழங்கி வரும் தினமலருக்கு, மனநல மருத்துவர்கள் சார்பில் நன்றிகள் பல,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X