புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டாமலே, வீடு கட்டியதாக முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே ஆலடிக்காடு கிராமம் உள்ளது. இங்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், இப்பகுதி கிராம மக்கள் வீடு கட்ட பதிவு செய்து காத்திருந்தனர். ஆனால், 80க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி முடித்து, பணம் பெற்றதாக அரசு ஆவணங்களில் கூறியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை ஆன்லைனில் அறிந்தும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
மேலும், வீடு கட்டியதற்கான ரசீதும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளதைக் கண்டு, அப்பகுதியைச் சேர்ந்த பலர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலரிடம் கேட்டபோது, உங்களுக்கு அடுத்த ஆண்டு தான் வீடு புதிதாக வரும். தற்போது பிரச்னை செய்ய வேண்டாம் என, ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன், 39, தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அறந்தாங்கி ஆர்.டி.ஓ.,விடம் கிராமமக்கள் மனு அளித்தனர். ஆனால்,இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறியதாவது:
வீடுகள் கட்டாமலேயே கட்டி முடித்தது போலவும், வீடுகள் கட்டி, பாதியிலேயே கட்டிகிடப்பில் போடப்பட்டதோடு, வீட்டிற்கு உண்டான தொகை அனைத்தையும் எடுத்து கையாடல் செய்துள்ளனர். இதேபோல, பொதுகழிப்பறை, 100 நாள் வேலை திட்டம் என, அடுத்தடுத்து ஊழல்களில் ஈடுபடும் கிராம ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன் மீது, தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிரதமர் திட்டத்தில் வீடு கட்ட காத்திருக்கும் அனைவருக்கும் வீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கும், தமிழக முதல்வக்கும் புகார் அனுப்பி உள்ளோம்.
இருக்கு, ஆனா இல்ல!:
வடிவேல் படத்தில் வரும் காட்சியை போல், கிணறு வெட்டியதற்கு ரசீது வைத்திருப்பதாகவும், கிணற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என்பது போல், பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டி முடிக்கபடாமலேயே, வீடு கட்டியதாக ரசீதுடன் நடைபெற்ற முறைகேடு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE