ரூ.21 ஆயிரம் கோடி ‛டெண்டர் ரத்து செய்தது மின் வாரியம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.21 ஆயிரம் கோடி ‛டெண்டர் ரத்து செய்தது மின் வாரியம்

Added : செப் 12, 2020
Share

சென்னை:ஒடிசாவில் உள்ள சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து, தமிழகத்திற்கு நிலக்கரி சப்ளை செய்ய கூடிய, 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரில், ஒரே ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்ற நிலையில், தற்போது, அந்த டெண்டரை, மின் வாரியம் ரத்து செய்துள்ளது.

ஒடிசா மாநிலம், ஆங்கூல் மாவட்டத்தில், 90 கோடி டன் இருப்பு உடைய, நிலக்கரி சுரங்கம் உள்ளது. அதை, மத்திய அரசு, தமிழக மின் வாரியத்திற்கு, 2016ல் ஒதுக்கியது. அங்கு எடுக்கப் படும் நிலக்கரியை, புதிதாக அமைக்கும் அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, சந்திரபிலா சுரங்கத்தை, தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக மேம்படுத்த திட்ட மிடப்பட்டது. அந்நிறுவனம் வாயிலாகவே, நிலக்கரியை எடுத்து, தமிழகத்திற்கு ஆண்டுக்கு, தலா, 10 லட்சம் டன் என, 35 ஆண்டுகளுக்கு சப்ளை செய்யும் பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியம், 2019 நவம்பரில், 'டெண்டர்' கோரியது. திட்ட செலவு, 21 ஆயிரம் கோடி ரூபாய். டெண்டரில் பங்கேற்க, 2020 ஜன., 13 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

நிறுவனங்கள் பங்கேற்காத நிலையில், ஊரடங்கு காரணமாக, டெண்டர் கடைசி தேதி, பலமுறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக, மே, 6ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டது. அதில், ஒரு தனியார் நிறுவனம் பங்கேற்றது. இந்நிலையில், அந்த டெண்டர், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:டெண்டரில், அதிக நிறுவனங்கள் பங்கேற்றால் தான், அவற்றுக்குள் போட்டி ஏற்பட்டு, குறைந்த விலை கிடைக்கும். இந்த சூழலில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, சந்திரபிலா சுரங்க டெண்டரில், ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றதால், குறைந்த விலை கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. அந்நிறுவனம், இவ்வளவு மதிப்பிலான பணியை மேற்கொள்வதும், இதுவே முதல்முறை. எனவே, அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிக நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில், புதிய டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X