பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை பணிய எப்பத்தான் முடிப்பீங்க! ஆய்வு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் வேதனை

Added : செப் 12, 2020
Share
Advertisement
 பாதாள சாக்கடை பணிய எப்பத்தான் முடிப்பீங்க! ஆய்வு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் வேதனை

பொள்ளாச்சி;'பாதாள சாக்கடை திட்ட பணிகளை எப்பத்தான் முடிப்பீங்க, மக்களுக்கு பதில் சொல்ல முடியல,' என ஆய்வு கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் வேதனையுடன் பேசினர்.பொள்ளாச்சி பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். சப் - கலெக்டர் வைத்திநாதன், கமிஷனர் காந்திராஜ், தாசில்தார் தணிகைவேல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதிகாரிகள் பேசியதாவது:பாதாள சாக்கடை திட்டப்பணிகள் எப்போது முடிக்கப்படும் என தெளிவாக கூற வேண்டும். ஆய்வு கூட்டத்தில் தெரிவிப்பதை போன்று, பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில்லை. காலதாமதமாகி வருகிறது. திட்டப்பணிக்கு புதியதாக போடப்பட்ட சாலைகள் தோண்டப்பட்டது; குடிநீர் குழாய் உடைப்பு என இதுவரை, 10.24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இது தவிர, வீட்டு குடிநீர் இணைப்புகளையும் உடைத்து சேதப்படுத்துவது தொடர்கிறது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் என்றாலும், பொதுமக்கள் நகராட்சியை குறை கூறுகின்றனர். பணிகளை விரைந்து முடித்தால், ரோடுகளை சீரமைக்க முடியும். இவ்வாறு, தெரிவித்தனர்.துணை சபாநாயகர் பேசியதாவது:ஆய்வு கூட்டத்துக்கு வரும் போது பணிகளை இரண்டு மாதத்தில் முடிப்பேன் என உறுதி கொடுக்கிறீர்கள். ஆனால், அந்த மாதிரி பணி நடப்பதில்லை. கடந்தாண்டு ஏப்., மாதம் முடிக்க வேண்டிய பணிகள் இன்னும் இழுபறியாக இருக்கிறது. இதனால், மக்கள் சிரமப்படுகின்றனர்.பணிகள் தாமதமாக நடத்தினாலும், பணிக்காக கூடுதல் கட்டணம் வழங்க இயலாது. இனி பணிகள் எப்போது முடிப்பீங்க என கேட்க மாட்டேன்; இன்னும் எத்தனை ஆண்டுகளில் இந்த பணி முடிக்கப்படும் என, கேட்க வேண்டிய நிலை உள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகளை எப்பத்தான் முடிப்பீங்க, மக்களுக்கு பதில் சொல்ல முடியல. இனிமேலும், காரணம் சொல்லாமல், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில் பேசிய, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் அதிகாரிகள் அனைவருமே, பாதாள சாக்கடை திட்டப்பணி எப்போது முடிக்கப்படும் என்ற கேள்வியை முன்வைத்தனர்.மேலும், எந்த ரோட்டை எப்போது தோண்டுகிறார்கள் என்பதே தெரிவதில்லை. திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளும் பணியால், மக்கள் அதிருப்தியடைகின்றனர். பணி நிறைவடைய இன்னும் எத்தனை மாதங்களாகும் என்று கேட்டனர். அதற்கு, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர் சார்பில் மழுப்பலாக பதில் கூறியதுடன், எப்போது முடிப்போம் என தெரிவிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X