ரூ.2,085 கோடியில் வெள்ளத் தடுப்பு பணி: காஞ்சி ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.2,085 கோடியில் வெள்ளத் தடுப்பு பணி: காஞ்சி ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பேச்சு

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
 ரூ.2,085 கோடியில் வெள்ளத் தடுப்பு பணி: காஞ்சி ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பேச்சு

காஞ்சிபுரம்:''ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய அரசின் உதவியுடன், 2,085 கோடி ரூபாயில், வெள்ள தடுப்பு பணிகள் நடக்க உள்ளன,'' என்று, காஞ்சிபுரத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்ற ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லுாயிஸ், பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தடுப்பணைஅப்போது, முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:

தமிழகத்தில், வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இறப்பு விகிதமும் குறைந்து விட்டது. கர்நாடகா, ஆந்திரா, டில்லி போன்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால், அரசியல் ஆதாயம் காரணமாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழகத்தில், 88 சதவீதம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பிஉள்ளனர்.

பல் துறை ஊழியர்கள், உயிரை பற்றி கவலைப்படாமல், தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை, எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்த வேண்டாம்.வேளாண் குடும்பத்தினர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. ஊரடங்கு காலத்திலும், வேளாண் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

முதன் முதலாக, இந்த மாவட்டத்தில் தான், குடிமராமத்து பணி துவங்கப்பட்டது.அதேபோல, தடுப்பணைகள் கட்டப்படும் என, அறிவிக்கப்பட்டு, இரு தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டு, அவற்றில் நீர் தேங்குகிறது. மற்ற தடுப்பணைகள் அமைக்கும் பணியும் துவங்கப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய அரசின் உதவியுடன், 2,085 கோடி ரூபாயில், வெள்ளத் தடுப்பு பணிகள் நடக்க உள்ளன. பாலாற்றில், 250 கோடி ரூபாயில், கதவணை திட்டம், அரசு பரிசீலனை உள்ளது. செங்கல்பட்டு கொள்வாய் ஏரி, 60 கோடி ரூபாய் மதிப்பில் துார் வாரப்பட உள்ளது.


உதவித்தொகை

பல்லாவரம் முதல் குரோம்பேட்டை வரையிலான, ஜி.எஸ்.டி., சாலையில், 41 கோடி ரூபாயில், வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நீண்ட நாள் கோரிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில், 120 கோடி ரூபாயில், கலெக்டர் அலுவலகமும், 100 கோடி ரூபாயில், யோகா மையமும் அமைக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையை, 300 படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிறப்பு குறைதீர் கூட்டங்கள், தமிழகம் முழுவதும் நடத்தப் பட்டு, மனுக்கள் பெறப்பட்டன. இதன் மூலம், ஐந்து லட்சம் முதியோருக்கு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

இதையடுத்து, சிறு, குறு தொழில் நிறுவனத்தினர், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினருடன், ஆலோசனை கூட்டம் நடத்திய இ.பி.எஸ்., காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 22 ஆயிரம் பயனாளிகளுக்கு, 331 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் கூறியதாவது:காஞ்சிபுரத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டு பூங்கா திட்ட பணிகள், 25 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் நடைபெறும்.ஐந்து மாதங்களாக, கடைகளை சரிவர திறக்காததால், பட்டு சேலைகள் தேக்கம் என்பது இயல்பு தான். படிப்படியாக சரியாகும்.

தமிழக நகரங்கள் சுத்தமாகவே உள்ளன. ஸ்மார்ட் சிட்டி, பாதாள சாக்கடை திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு உள்ளதால், தமிழக நகரங்கள் சுத்தமில்லை என்ற குற்றச்சாட்டுக்கே இடமில்லை. காஞ்சிபுரம், ஓரிக்கையில் தயாராகும் ஜரிகை தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழுவதால், அதுகுறித்து விசாரிக்கப் படும். மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து, கொரோனா தொற்று குறைந்ததும் துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X