சென்னை:சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பெருமாளுக்கு அணிவிக்க உபயதாரர் ஒருவர் பல லட்சம் ரூபாய் செலவில் 'பாண்டியன் கொண்டை' என்ற கிரீடம் செய்துள்ளார்.
மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த பாண்டியன் கொண்டை குறித்த விபரமாவது: முதலாம் சுந்தர பாண்டியன் ஸ்ரீரங்கம் பெருமாளின்பரமபக்தர். இவர் பெருமாளுக்கு வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் ஒன்றை சமர்ப்பித்தார். அன்று முதல் அந்த கிரீடம் 'பாண்டியன் கொண்டை' என்று அழைக்கப்பட்டது.
அரங்கனின் ஆபரணங்களிலேயே அற்புதமானதும் அழகானதுமான இந்த பாண்டியன் கொண்டை கிரீடத்தை சொர்க்கவாசல் வழியாக வருவது போன்ற முக்கிய நாட்களில் பெருமாள் அணிந்திருப்பார்.அதேபோல் சென்னையில் உள்ள 'சலானி ஜுவல்லர்ஸ்' உரிமையாளரான ஜெயந்திலால் சலானி தன் மகன் ஸ்ரீபால் சலானி விருப்பத்தின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு 'பாண்டியன் கொண்டை' ஒன்றை உபயமாக வழங்க முடிவு செய்தார்.
அதன் அடிப்படையில் கடந்த 11 மாதங்களில்இந்த பாண்டியன் கொண்டை தயராகிஉள்ளது. கிட்டத்தட்ட 3 கிலோ தங்கத்தில் உருவான இந்த பாண்டியன் கொண்டையில் ரோஸ்கட் டைமண்ட்ஸ் 5645; ரூபி கற்கள் 2761; புளூ சபையர் கற்கள் 36; 'எமரால்டு' எனப்படும் பெரிய பச்சை மரகதகற்கள் 3; சிறிய மரகத பச்சை கற்கள் 209 என பதிக்கப்பட்டு அழகு சேர்க்கின்றன.'பெருமாளுக்கு செய்யும் போது கணக்கு பார்த்து செய்யக் கூடாது என்பதால் இதன் மதிப்பை சொல்வதற்கு இல்லை' என ஜெயந்திலால் சலானி கூறினார்.
அபூர்வமானது
மேலும் அவர் கூறியதாவது: இந்த பாண்டியன் கொண்டை அபூர்வமானது என்பதால் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.அக். 15ம் தேதி வரை தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள எங்கள் கடையில் காலை 11:00 மணியில் இருந்து இரவு 7:00 மணி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.அதன்பின் ஒரு நல்ல நாளில் கோவிலுக்கு சமர்ப்பிக்கப்படும். அவர்கள் இதை உற்ஸவருக்கு அணிந்து அழகு சேர்ப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE