தமிழ்நாடு

பி.எம்., கிசான் திட்ட மோசடி: ஈரோடு மாவட்டத்தில் ரூ.13.10 லட்சம் பறிமுதல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஈரோடு மாவட்டத்தில், பிரதமரின் கிசான் திட்டத்தில், 580 பேரின் வங்கி கணக்கில் இருந்து, 13.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில், 2019 பிப்., முதல், 97 ஆயிரத்து, 898 பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். பிற மாவட்டங்களில், பல பயனாளிகள் போலியாக சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டு, அவர்களது வங்கி கணக்கில் இருந்து, பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.


இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், கடந்த ஏப்.,1 முதல் இணைந்த விவசாயிகளின் வங்கி கணக்கில், சில பிரச்னைகள் உள்ளன. இருப்பினும், அனைத்து பயனாளிகளின் விபரங்களையும், முழுமையாக ஆய்வு செய்தோம். இதில், உரிய ஆவணம் இல்லாதது, விதிகளுக்கு மாறானது என, 4,251 கணக்குகளை முழுமையாக ஆய்வு செய்ததில், 3,671 கணக்குகள் தகுதியானவை என உறுதியானது. 580 கணக்குகள் முடக்கப்பட்டன. அக்கணக்கில் அரசு வழங்கிய, 13.10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் போலி விவசாயிகள், நிலம் இல்லாதவர்கள் என எவரும் சேர்க்கப்படவில்லை. இவர்கள் அனைவரும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆவண குறைபாடு, நில உடமையில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள் ஆவர். தவிர, பிற மாவட்டத்தில் நிலம் வைத்திருப்பவர்களில், 1,114 பேர், ஈரோடு மாவட்டத்தில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் ஏன், ஈரோடு மாவட்டத்தில் கணக்கு வைத்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவற்றை பிற மாவட்ட வேளாண் துறையினர் ஆய்வு செய்கின்றனர். இதனால் ஈரோட்டில் உள்ள அவர்களது வங்கி கணக்கை, முடக்கி உள்ளோம். அவர்களது வங்கி கணக்கில், அரசு ஓரிரு தவணைகளாக செலுத்திய, 67.76 லட்சம் ரூபாயை முடக்கி வைத்துள்ளோம். தகுதியான பயனாளியாக இருந்தால், அவரது வங்கி கணக்கில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். தவறு கண்டறியப்படும் பட்சத்தில், அவர்களின் வங்கி கணக்கில் இருந்து உரிய தொகை பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரியில் மூன்று பேர் கைது: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதம மந்திரியின் நிதியுதவி திட்டத்தில், கடந்த ஏப்., 1ல் பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கி, வங்கி மேலாளர்கள் மூலமாக தொகையை மீட்டெடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளின்படி அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியற்ற, 8,408 பயனாளிகளில், இதுவரை, 3,007 பேரிடமிருந்து, ஒரு கோடியே, 15 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 5,401 தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து உதவித்தொகையை வசூலித்து, அரசு கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பிரதமர் கிசான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை சேர்த்து, தவறுதலாக பலனடைந்த தனிநபர்கள், கணினி மையங்கள் உள்ளிட்டோர் பற்றி, முழுமையான விசாரணை செய்து அனைத்து நபர்களையும் கண்டுபிடித்து, அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதுவரை இரு ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஒரு தனிநபர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X