பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1 கோடி முறைகேடு: தி.மு.க.,- எம்.பி., குற்றச்சாட்டு: தர்மபுரி மாவட்ட கலெக்டர் விளக்கம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

தர்மபுரி: ''தர்மபுரி மாவட்டத்தில், வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 1 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது,'' என, தி.மு.க.,- எம்.பி., செந்தில்குமார் கூறினார்.


தர்மபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை, தர்மபுரி, தி.மு.க.,- எம்.பி., செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று பரவத்துவங்கிய போது, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கிக் கொள்ள, எம்.பி.,தொகுதி மேம்பாட்டு நிதியில், 1 கோடி ரூபாய் ஒதுக்கி கடிதம் வழங்கினேன். ஆனால், மத்திய அரசு, எம்.பி.,க்களின் நடப்பு ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியை, நாடு முழுவதும் பயன்படுத்த வேண்டும் எனக்கூறி, கடைசியில் நிதியை ரத்து செய்தது. இதனால் நான் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அளித்த நிதி இயல்பாகவே ரத்தானது. இந்நிலையில், கடந்த ஆண்டில் மத்திய அரசு, முதல் தவணையாக ஒதுக்கிய, தொகுதி மேம்பாட்டு நிதியில், ஒரு கோடி ரூபாய், என் கவனத்துக்கு தெரிவிக்கப்படாமலே, மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி கேட்டால், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அளித்த நிதி ஒதுக்கீட்டு கடிதம் மூலம், கடந்த ஆண்டு நிதியில் இருந்து, பணம் எடுத்ததாகவும், அதன் மூலம் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ததாக, மாவட்ட நிர்வாகம் பதில் கூறுகிறது. என் ஒப்புதலை பெறாமலே, 2019-20 ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணம் எடுத்துள்ளனர். இதற்கிடையில், எம்.பி., நிதியில் இருந்து எடுக்கப்பட்ட, 1 கோடி ரூபாயில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதா என, விசாரித்தபோது மருத்துவக் கல்லூரி, சுகாதாரத்துறை தரப்பில் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியில், 1 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்புக்குழு மூலம், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். கலெக்டர் மலர்விழி மீது நடவடிக்கை வேண்டும். மத்திய நிதி அமைச்சகத்துக்கும் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 1 கோடி ரூபாய் நிதியை கொரோனா பணிகளுக்கு பயன்படுத்தக்கோரி, அவரது ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. இதில், அவர் நிதியாண்டு குறித்து குறிப்பிடவில்லை. அந்த நிதி, கொரோனா தடுப்பு பணிகளுக்கு எடுக்கப்பட்டது. கொரோனா நிதியை, மாவட்ட பேரிடர் மேலாண்மைக்குழு மட்டுமே கையாளும். அக்குழுவினர் கூடி, அந்த நிதியில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையின் அடிப்படையில், உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில், எவ்வித ஒளி மறையும் இல்லை. அவர் கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். அரசியல் காரணங்களுக்காக, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X