சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி பட்டா வழங்கி மோசடி: தலைமறைவு ஆர்.ஐ., கைது

Added : செப் 12, 2020
Share
Advertisement

ராணிப்பேட்டை: போலி பட்டா வழங்கி மோசடி செய்த, ஆர்.ஐ., கைது செய்யப்பட்டார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது, வாலாஜாபேட்டை ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில், 2013-14ல், வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் ராஜசேகரன், 42. இவர், முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த, 300 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக கூறி, தலா, 35 ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கினார். பின்னர் போலியாக பட்டா தயாரித்து வழங்கினார். பட்டா வழங்கிய இடத்தில் சிலர் வீடு கட்ட, சர்வேயர்கள் மூலம் அளந்து பார்த்ததில், அந்த இடம் அரசுக்கு சொந்தமானது இல்லை, தனியாருக்கு சொந்தமானது என, தெரியவந்தது. இதனால், 300 பேரும், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், முந்தைய வேலூர் கலெக்டர் ராமன் கையெழுத்தை போலியாக போட்டு, அரசு டிரைவர், கிளார்க், அலுவலக உதவியாளர் என, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாய் மாமூல் வாங்கிக் கொண்டு, போலி பணி நியமன ஆணை வழங்கியதாக ராஜசேகரன் மீது புகார்கள் வந்தன. இதனால், வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், சென்னை- கன்னியாகுமரி தொழில் தடம் திட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்திற்கு மாற்றப்பட்டார். இத் திட்டத்தில், பள்ளூரிலிருந்து திருத்தணி வரை உள்ள சாலை, 100 அடியாக மாற்றப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அப்போது, நிலம் கையகப்படுத்தாமலிருந்த பலரிடம், 25 ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கியதாக இவர் மீது புகார்கள் வந்தன. இதையடுத்து, ராஜசேகரன் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் இலவச வீட்டுமனை திட்டம், போலி பணி நியமன உத்தரவு, நிலம் கையகப்படுத்தாமலிருக்க மாமூல் வாங்கியது என, 2 கோடி ரூபாய்க்கு மோசடி செய்தது தெரியவந்தது. இதனால், கடந்த மார்ச் மாதம் ராஜசேகரனை சஸ்பெண்ட் செய்து, ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவர்கள், வருவாய்த்துறை சார்பில், ராணிப்பேட்டை போலீசில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்ததால், ராஜசேகரன் தலைமறைவானார். இந்நிலையில், சோளிங்கரில் பதுங்கியிருந்த ராஜசேகரனை, ராணிப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில்,' மோசடியில் ராஜசேகரன் கூட்டாளிகள், 10 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X