'ஹிந்தி தெரியாது போடா...' விவகாரத்தில், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை, சமூக வலைதளங்களில், பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஹிந்தி எதிர்ப்பில் வளர்ந்த கட்சி என்பதால், தி.மு.க., தொடர்ந்து, ஹிந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டி வருகிறது. 'தி.மு.க., - ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி' என்ற, பா.ஜ.,வின் பிரசாரத்தை எதிர்கொள்ள, சமீபகாலமாக, ஹிந்தி எதிர்ப்பை, தி.மு.க., கையில் எடுத்துள்ளது.
சமீபத்தில், 'ஹிந்தி தெரியாது போடா...' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட, 'டி - சர்ட்'களை, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர், 'மெட்ரோ' சிரீஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அணிந்தனர். அதை, தங்களின் சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்தனர்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க., வினரும், 'தமிழ் பேசும் இந்தியன், ஹிந்தி தெரியாது போடா...' என்ற வாசகங்கள் அடங்கிய, 'டி - சர்ட்'களை அணிந்து, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்தனர்.இதற்கு பதிலடியாக, பா.ஜ., தரப்பினர், 'தி.மு.க., வேண்டாம் போடா...' என்ற, 'ஹேஸ்டேக்'கை உருவாக்கி, தேசிய அளவில் டிரெண்டாக்கினர்.
'ஹிந்தி தெரியாது போடா' என்ற, 'டி - சர்ட்' அணிந்திருந்த யுவன்சங்கர் ராஜா படத்தையும், அவர் ஹிந்தி பாடல் பாடும் வீடியோவையும், சமூக ஊடகங்களில் பலர் வெளியிட்டனர்.
அவர்கள், 'நீங்கள் ஹிந்தி கற்றுக் கொண்டு, ஹிந்தி பாடல்களை பாடுவீர்கள். ஆனால், நாங்கள் மட்டும் ஹிந்தி கற்கக் கூடாதா?' என்ற, கேள்வியை பதிவிட்டனர்.
அவரை தொடர்ந்து, 'டிவி' பேட்டி ஒன்றில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஹிந்தி பேசும் வீடியோவை வெளியிட்டு, 'நீங்கள் மட்டும் ஹிந்தியை தெரிந்து கொண்டு, ஹிந்தி தெரியாது போடா எனச் சொல்வது நியாயமா; 'நீங்கள் மட்டும் ஹிந்தியை படித்து முன்னேறுவீர்கள்; மற்றவர்கள் ஹிந்தி படிக்கக் கூடாதா?' என, அவரையும் வறுத்தெடுத்தனர்.இதையடுத்து, தன் டுவிட்டர் பக்கத்தில், 'ஹிந்தி தெரியாது போடா' என்ற, 'டி - சர்ட்'டுடன் இருந்த போட்டோவை, ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கிவிட்டார்.
அதேபோல, மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், 'எனக்கு ஹிந்தி தெரியாது' என்ற பதிவுள்ள, 'டி - சர்ட்' அணிந்து, 'டிவி' விவாதம் ஒன்றில் பங்கேற்றார்.
ஆனால், ஏற்கனவே, மற்றொரு ஹிந்தி சேனலில், ராதாகிருஷ்ணன் ஹிந்தி பேசியுள்ள வீடியோவை வெளியிட்டு, 'நீங்கள் மட்டும் ஹிந்து கற்று கொண்டு, ஹிந்தியில் பேட்டி அளிக்கிறீர்கள். நாங்கள் தமிழை மட்டும் கற்று, கும்மிடிப்பூண்டியை தாண்டக் கூடாதா...' என்ற கேள்வியை, சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளனர்.
தி.மு.க., வுக்கு ஆதரவாக, நடிகை குஷ்பு, ஹிந்தியில் பிரசாரம் செய்த வீடியோவும் வெளியானது. அதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பதவி ஏற்பு விழாவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வங்காள மொழியில் பேசிய வீடியோக்களும் வெளிவந்தன. அத்துடன், ஹிந்தியின் முக்கியத்துவம் குறித்து, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் பேட்டியும், அதில் இடம் பெற்றிருந்தது.
மேலும், உதயநிதியின் மனைவி கிருத்திகா ஒரு பேட்டியில், 'எனக்கு ஆங்கிலம் தான் வசதியான மொழி. தமிழில் எழுத்துகூட்டி தான் படிக்கத் தெரியும். பள்ளிக் கூடத்தில் ஹிந்தி படித்துள்ளேன்' எனக்கூறிய வீடியோவும் இடம் பெறுகிறது.இப்படி, அடுத்தடுத்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு, ஹிந்தி விவகாரத்தில், தி.மு.க., வின் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டுவது, அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -