விதிகளை மீறினால் சேவை சஸ்பெண்ட் விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விதிகளை மீறினால் சேவை 'சஸ்பெண்ட்' விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

Added : செப் 12, 2020
Share

புதுடில்லி:'விமான பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை மீறும் விமான நிறுவனங்களின் சேவை, இரு வாரங்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்யப்படும்' என, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் எச்சரித்துள்ளது.

பாலிவுட் நடிகை, கங்கனா ரணாவத், சில தினங்களுக்கு முன், சண்டிகரில் இருந்து, மும்பைக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் வந்தார். விமானம் தரையிறங்கியதும், முதல் வரிசையில் அமர்ந்திருந்த அவரை பேட்டி எடுக்க, ஊடக செய்தியாளர்கள் முண்டியடித்தனர். ஆனால், கங்கனா ரணாவத் பேட்டி கொடுக்காமல் சென்று விட்டார். இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, டி.ஜி.சி.ஏ., நேற்று விமான நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதன் விபரம்:விமான நிறுவனங்கள், பயணியர் விமான சட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விமானத்திற்குள், புகைப்படம், 'வீடியோ' ஆகியவை எடுக்க அனுமதிக்கக் கூடாது. அதை மீறி யாராவது படம் எடுத்தால் அல்லது விதிமீறல் நடந்தால், அந்த வான் தடத்தில், விமான நிறுவனம் மேற்கொள்ளும் சேவைக்கு, இரு வாரங்கள் தடை விதிக்கப்படும்.

விதிமீறலில் ஈடுபடுவோர் மீது, விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும் வரை தடை நீடிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, விமான இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:விமானத்திற்குள், கங்கனா ரணாவத்திற்கு மிக நெருக்கமாக பத்திரிகையாளர்கள் நிற்கும் வீடியோ வெளியானது தான், சர்ச்சைக்கு காரணம். இதில், பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன.

மேலும், சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே, சஸ்பெண்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X