கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உரிமை மீறல் விவகாரத்தில் மீண்டும் 'நோட்டீஸ்' ஸ்டாலின், 18 எம்.எல்.ஏ.,க்கள் ஐகோர்ட்டில் வழக்கு

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:சட்டசபைக்குள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்ற விவகாரத்தில், இரண்டாவது முறையாக உரிமைக் குழு சார்பில் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் எளிதில் கிடைப்பதாக, தி.மு.க., குற்றம் சாட்டியது.அதை நிரூபிக்கும் விதமாக, 2017 ஜூலை, 19ல், சட்டசபைக்குள் குட்காவை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து சென்று, பிரச்னை எழுப்பினர். இதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 21 பேரிடம் விளக்கம் கோரி, சட்டசபை உரிமைக் குழு, 'நோட்டீஸ்' அனுப்பியது.

நோட்டீசை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் உள்ளிட்ட, 21 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' வழக்கை விசாரித்தது. உரிமைக் குழு அனுப்பிய நோட்டீசில், அடிப்படை தவறுகள் இருப்பதால், நடவடிக்கை எடுக்க முடியாது என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.


தெளிவுப்படுத்துதல்

இதையடுத்து, செப்., 7ல், உரிமைக் குழு கூடியதன் அடிப்படையில், அன்றே சட்டசபை செயலர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனு:சபாநாயகரின் அனுமதி பெறாமல், குட்கா பாக்கெட்டுகளை சபையில் காட்டியது; சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தது; சபை நடவடிக்கைகளை அவமதிப்பு செய்தது போன்ற காரணங்களுக்காக, 19 எம்.எல்.ஏ., க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, உரிமைக் குழு முடிவு செய்துள்ளது.சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வந்து காட்டியதற்காக, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டசபை வரும், 14ம் தேதி கூடும் நேரத்தில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பதை, தற்செயலாக நடந்தது எனக்கூற முடியாது.எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., க்களை, கூட்டத் தொடரில் பங்கேற்காமல் தடுப்பது தான், நோட்டீஸ் அனுப்பியதன் நோக்கம். ஏற்கனவே அனுப்பிய நோட்டீசில், அடிப்படை தவறு உள்ளதாக, உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.


உரிமைக்குழு

தற்போதைய நோட்டீசும், 2017 ஆக., 28ம் தேதியிட்ட நோட்டீசும், சபாநாயகர் அனுப்பிய ஒரே குறிப்பில் இருந்து வெளிப்படுவது தான்.சபாநாயகர் அனுப்பிய குறிப்பில் இருந்து, உரிமை மீறல் பற்றிய கேள்விக்கு, முன்கூட்டியே முடிவு காணப்பட்டுஉள்ளது. அதனால், தற்போது அனுப்பிய நோட்டீசிலும், அதே அடிப்படை தவறு உள்ளது. சட்டசபை கூடும் நேரத்தில், உரிமைக் குழுவை கூட்டிய முடிவில் உள்நோக்கம் உள்ளது. எனவே, நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X