சிங்கப்பூர் கம்பெனிக்கு, சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்து, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், அவரது மகன், சந்தீப் ஆனந்த் ஆகியோர் மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள், 'பெமா' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களின், 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பல நுாறு ஏக்கர் பரப்பளவில், 'குரோம் லெதர் கம்பெனி' என்ற, தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலை செயல்பட்டு வந்த இடமே, 'குரோம்பேட்டை' என, அழைக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், குரோம் லெதர் கம்பெனிக்கு சொந்தமான இடங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன.அப்போது, அந்த கம்பெனியின் தலைவராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். இவர், தற்போது, அரக்கோணம் லோக்சபா தொகுதி தி.மு.க., - எம்.பி.,யாக உள்ளார்.
நில மோசடி
இவர், குரோம் லெதர் கம்பெனிக்கு சொந்தமாக இருந்த, 1.55 ஏக்கர் நிலத்தை, தன் உறவினர்கள்,தெரிந்த நபர்கள், 41 பேருக்கு பிரித்து கொடுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை, ஜெகத்ரட்சகன் மறுத்து வருகிறார். இப்படி பிரித்து கொடுக்கப்பட்ட நிலத்தின் ஆவணங்கள், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நில மோசடி தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவி பெயரில், சிங்கப்பூரை சேர்ந்த ஒரு கம்பெனி, இலங்கையில், 27 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் குறித்து, லோக்சபா தேர்தலின் போது சமர்ப்பித்த, வேட்பு மனு தாக்கலில் மறைத்து விட்டார். இது, மிகப்பெரிய குற்றம் என, அப்போதே பிரச்னை எழுந்தது.இப்படி, ஜெகத்ரட்சகன், அவரது மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் அவர்களது குடும்பத்தார் மீது, நில மோசடி, சட்ட விரோத பணப் பரிமாற்றம் என, அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பணப்பரிமாற்றம்
இந்நிலையில், ஜெகத்ரட்சகன், சந்தீப் ஆனந்த் ஆகியோர், சிங்கப்பூரில் உள்ள கம்பெனியில், பங்குதாரர்களாக இருப்பது அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்த, விரிவான விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'சில்வர் பார்க் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' என்ற கம்பெனியில், ஜெகத்ரட்சகனுக்கு, 70 ஆயிரம் பங்குகளும், சந்தீப் ஆனந்திற்கு, 20 ஆயிரம் பங்குகளும் இருப்பதை, அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மேலும், இந்த கம்பெனியுடன் இருவரும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதும், அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக, 'சம்மன்' அனுப்பி, ஜூலையில், சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அமலாக்கத்துறை அலுவலகத்தில், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக, ஜெகத்ரட்சகனிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதை, 'வீடியோ'விலும், பதிவு செய்தனர்.
அதிரடி நடவடிக்கை
இந்நிலையில், 2017 ஜூன், 15ல் இருந்து, சிங்கப்பூர் கம்பெனியுடன், இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக, சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, ஜெகத்ரட்சகன்; அவரது மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். 'பெமா' என்ற, அந்நிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தில் உள்ள, அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழகத்தில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, விவசாய நிலம், காலி மனை, வீடு என, 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நேற்று பறிமுதல் செய்தனர். அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கையால், ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE