வளமான நிலத்துக்கு ஏங்கும் விதைகள்!

Updated : செப் 14, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
பண்படாத நிலத்தில் விதைக்கப்படும் விதைகள், மண்ணைப் பிளந்து, முளைத்து துளிர் விட சாத்தியமில்லை. பொறுப்போடு ஏற்றுக்கொண்டு செயல்படக்கூடிய மனப் பக்குவமும், செயல் திறனும் இல்லாதவர்களிடம் கூறப்படும் அறிவுரைகள் பலனளிக்கும் வாய்ப்பில்லை.சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் மிகப்பெரிய பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருக்கும் பலர், தங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி, யாருக்குமே
வளமான நிலத்துக்கு ஏங்கும் விதைகள்!

பண்படாத நிலத்தில் விதைக்கப்படும் விதைகள், மண்ணைப் பிளந்து, முளைத்து துளிர் விட சாத்தியமில்லை. பொறுப்போடு ஏற்றுக்கொண்டு செயல்படக்கூடிய மனப் பக்குவமும், செயல் திறனும் இல்லாதவர்களிடம் கூறப்படும் அறிவுரைகள் பலனளிக்கும் வாய்ப்பில்லை.சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் மிகப்பெரிய பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருக்கும் பலர், தங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி, யாருக்குமே இல்லை என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

அரசியல்வாதிகளும், மதவாதிகளும், பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும், தங்களைச் சுற்றி தொண்டர்கள் என்ற மிக வலிமையான தடுப்புச்சுவரை அமைத்துக் கொண்டுள்ளனர். தொண்டர்கள் அவர்களின் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.பெற்றோர் அறிவுரைகளை எல்லா பிள்ளைகளும் கேட்பதில்லை. ஆசிரியர்களின் அறிவுரைகளையும் எல்லா மாணவர்களும் கேட்பதில்லை. காரணம், அதற்கான மனப் பக்குவம், மன வளம் அவர்களிடம் இல்லை. மனதளவில் அவர்களைத் தயார் செய்த பின், தங்களது முயற்சியைத் துவக்கும் திறமை, பல பெற்றோர், ஆசிரியர்களிடம் இல்லை.


மனப் பக்குவத்தோடு அவற்றை ஏற்றுக்கொண்ட மன வளம் மிக்க குழந்தைகள், அதன் பயனாக வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்து சாதனை படைத்ததை, ஊடகங்கள் வாயிலாக வெளிச்சம் போட்டுக் காட்டும் போது தான், பல குழந்தைகளுக்கு தங்களின் தவறு, காலம் கடந்து புரிகிறது.


சொற்பொழிவுகல்வி நிலையங்களும், பல வர்த்தக உயர் நிறுவனங்களும், தங்களின் மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும், ஒரு உந்துதலை ஏற்படுத்துவதற்காக, ஊக்கமளிக்கும் சொற்பொழிவுகளை வழங்குகின்றன. அதை கேட்ட அனைவர் மனதிலும் முழுமையான மாற்றத்தை அது நிகழ்த்தி, அவர்கள் அத்தனை பேரையும் புதியவர்களாக மாற்றப் போவதில்லை. எனினும், அவர்களில் பலரின் மனதில் இருந்த சில காயங்களுக்கு மருந்தாகவும், தேங்கியிருந்த அசுத்தங்களுக்கு வடிகாலாகவும் அந்த சொற்பொழிவு இருக்கும்.

இது, கேட்டவர்களின் மனப் பக்குவம், மன வளம், நல்லதை ஏற்றுக்கொள்ளும் பண்பு, சிந்திக்கும் திறன் இவற்றையும் பொறுத்திருக்கிறது. இதைத் தான், பண்பட்ட நிலத்தில் விதைக்கப்படும் விதைகள் என்கிறேன்.நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் நம்மால் தீர்மானிக்கப்படாததாக இருக்கலாம்; நம் எதிர் நோக்குதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால், அதன் தாக்கம் நம்மை பாதிக்காதிருக்க, நாம் செயல்படுத்தும் எதிர்வினையைத் தீர்மானிக்கும் வாய்ப்பு, நம்மிடம் தான் இருக்கிறது.தனி மனிதனின் செயல்பாட்டை, அவனது உள்நோக்கத்தை, நம் முன் நிகழும் ஒரு நிகழ்வை, நம்மைச் சுற்றி நிலவும் ஒரு சூழ்நிலையை நாம் மிகச் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, அதற்காக நாம் ஆற்றும் எதிர்வினை, இயற்கையாக இருக்கும்.

சரியான புரிதல் இல்லாமல் செயல்படுபவரிடம் முறையான செயல்பாட்டை எதிர்பார்க்க முடியாது.

'என்னைப் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்' என்பது, கணவனை பற்றி மனைவியும், மனைவியை பற்றி கணவனும், பிறரும் குறைபட்டு கொள்ளும் வாடிக்கையான வாக்கியமாக ஆகிவிட்டது.சரியான புரிதல் இல்லாததன் விளைவு தான், காதலித்து மணந்தவர்கள் கூட, குறுகிய கால வாழ்க்கைக்கு பின், பிரிதல் வேண்டி நீதிமன்றத்துக்குப் போய், பொறுப்பை நீதிபதியிடம் ஒப்படைக்கின்றனர். இருவரையும் வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு கொடுக்காத உரிமையை, முற்றிலும் புதியவரான நீதிபதியிடம் கொடுப்பதில் அவர்களுக்கு தயக்கமில்லை.விளைவுகளை அனுமானிக்கும் திறமை, அனுபவமிக்கவர்களுக்கே உண்டு. அது தான், அறிவு சார்ந்த அனுமானம். மற்றவை, தான்தோன்றித்தனமான குருட்டு அனுமானம். அது, சூதாட்டத்துக்கு ஒப்பானது. இப்படி நடக்குமென்று நான் நினைக்கவேயில்லை என்ற புலம்பல், மிகச் சாதாரணமாகக் கூறப்படும் விளக்கமாக பலரிடமிருந்தும் வெளிப்படுகிறது.


அரசு அதிகாரிகள் மிக உயர்ந்த கல்வித் தகுதியுடன், போட்டித் தேர்வுகளில் எல்லாம் திறமை காட்டி, அரசு பதவிக்கு வருபவர்கள். எதையும் எளிதாக உள்வாங்கி புரிந்து கொண்டு, மனதுக்குள் நிறுத்தி, தக்க சமயத்தில் முறையாக வெளிப்படுத்தும் திறமை கொண்டவர்கள்.

அரசு பதவி என்னும் அதிகாரமிக்க ஆசனத்தில் அமர்ந்தவுடன் ஒரு சிலர், தங்களின் அந்த திறமைகளை தொலைத்து விடுகின்றனர். பண்பட்ட வளமான நிலம் தன் விளைவிக்கும் ஆற்றலை இழந்து விட்டது போல, அவர்கள் தங்கள் திறனை இழந்து விடுகின்றனர்.'தாங்கள் மிகப்பெரிய அறிவு ஜீவிகள்; தங்களிடம் வருபவர்கள் எவ்விதத்திலும் உயர்ந்தவர்கள் இல்லை; அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை' என்ற எண்ணம், அவர்களது எண்ணத்தில் குடிகொண்டு, தலைக்கனமாகி விடுகிறது.உயர் நிலையில் இருக்கும் அரசு அதிகாரிகள் முதல், அனைத்து அதிகார வர்க்கமும் இதை உணர வேண்டும். உண்மையிலேயே அவர்களை அந்த உயர்ந்த நிலையில் அமர்த்தியது, இந்த சமுதாயம் தான்.


மக்கள் சேவைதோல்வியடைந்து, அவர்களுக்கு வழிவிட்ட அனைவரும், அவர்களின் நன்றிக்கு பாத்திரமானவர்கள் தான்.தன் அறைக்கு வெளியே மணிக்கணக்கில் காத்துக் கிடப்பவர்களின் கோரிக்கைகளை, சில மணித்துளிகளை ஒதுக்கி கவனத்துடன் கேட்டு, உரிய நடவடிக்கைக்காக, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி கண்காணிக்கும் பொறுப்பும், துணிவும் பல அதிகாரிகளிடம் இன்று காணப்படவில்லை.அரசியல்வாதிகளைப் பற்றி விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்களில் தங்களின் அறிவையும், திறமையையும், மக்கள் சேவையில் உள்ள ஆர்வத்தையும் வைத்து, முன்னேற்றம் காண்பவர்கள் அரிதிலும் அரிதாகி விட்டனர்.
அவர்களில் சிலர் அதிபுத்திசாலித்தனமாக ஈடுபடும் செயல்களும், உதிர்க்கும் வார்த்தைகளும், சமூக ஊடகம் உட்பட அனைத்து ஊடகங்களிலும் நகைச்சுவை காட்சிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

மக்களின் தேவைகள், கோரிக்கை வடிவில் அவர்களிடம் சேர்க்கப்படுவது, வளமற்ற நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளாகவே, பல சந்தர்ப்பங்களில் போய் விடுகிறது. அனைத்து வகையிலும், வழிமுறையிலும் தோல்வியைச் சந்தித்தவர்கள், இறுதியாக இறைவனிடம் மன்றாடுவது போல, நம்பியிருக்கும் இடம் நீதிமன்றம். அங்கு தான் பலருக்கு நீதி கிடைக்கிறது.நீதிமன்றங்களைப் பற்றி பேசப்படும் செய்திகளும், வக்கீல்கள் மத்தியில் ஊடுருவியுள்ள போலி வக்கீல்களும், தங்களை பிரபலமானவர்களாக காட்டிக் கொள்வதற்காகவே, தன்னிடம் வருபவர்களிடம் மரியாதை குறைவாகவும், அலட்சியமாகவும் நடத்து கொள்ளும் சில வழக்கறிஞர்கள் பற்றிய செய்திகளும், அவர்களின் அவல நிலையை வெளிப்படுத்துகிறது.

வழக்கறிஞர்கள் சிலர் தங்களின் கட்சிக்காரர்களிடம் பேசும்போது, 'இந்த நீதிபதி இப்படிப்பட்டவர்; இவரிடம் போனால் நமக்கு நியாயம் கிடைக்காது. பொறுத்திருங்கள் அடுத்த வாரம் பொறுப்பு மாறுகிறது; அந்த நீதிபதி வருவார்; அவர் மிகவும் நேர்மையானவர்; திறமையானவர்' என்பது வழக்கம். எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கும் சக்தியாக, தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்கள் விளங்கிக் கொண்டிருக்கின்றன. சிறிய விஷயத்தையும் ஊதிப் பெரிதாக்கினால், அதற்கு எப்படியும் தீர்வு கிடைக்க அரசும், அரசு அதிகாரிகளும், நீதிமன்றமும் போட்டி போட்டு முன் வருகின்றனர்.இதுவும் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியது தான் என்றாலும், இந்த நிலவரம், இந்த முயற்சி எல்லாருக்கும் சாத்தியமா...


முன்னுரிமைமேலும், ஊடகங்கள் செய்திகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஆளாளுக்கு தனித்தனி அளவுகோல்களை வைத்துள்ளன. மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் தகுதியுள்ள செய்திகளுக்குத் தான் அவர்கள் முன்னுரிமை கொடுப்பர். எனவே, பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் தீர்வு கிடைக்க வாய்ப்பேஇல்லை.மக்கள் தங்களிடம், கோரிக்கைகள், தேவைகள், அராஜகத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை என்று எண்ணற்ற வித்துக்களை வைத்துக் கொண்டு, வளமான விளைநிலத்தை தேடி அலைகின்றனர். பொறுப்பான இடத்தில் அமர்ந்திருக்கும் பூமித்தாய்க்கு நிகரான அரசும், நீதிமன்றங்களும், ஊடகங்களும் பண்பட்ட விளைநிலமாக தங்களின் மன வளத்தை பராமரிக்க வேண்டும்: மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டும்!தொடர்புக்கு: மா. கருணாநிதி, காவல்துறை கண்காணிப்பாளர், ஒய்வு: மொபைல்: 98404 88111

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
13-செப்-202020:48:35 IST Report Abuse
A.Gomathinayagam சிறந்த கட்டுரை. சிறந்த லட்சியங்களை கொண்டவர்களும் ,சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறுகிறார்கள்.எதிர் நீச்சல் போட தயாராக இல்லை. தனித்தன்மை எதற்கு என்று மெஜாரிட்டியுடன் இணைந்து விடுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X