சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : செப் 12, 2020
Share
Advertisement

மூதாட்டியிடம் நகை 'அபேஸ்'

திருவொற்றியூர், காலடிப்பேட்டை, ஜானகி அம்மாள் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள், 65. நேற்று மதியம், உறவினர் வீட்டிற்கு சென்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினார். காலடிப்பேட்டை அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள், மூதாட்டியை வழிமறித்து, 'இப்பகுதியில் தற்போது தான் ஒரு திருட்டு நடந்தது. நீங்கள் நகைகளை கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள்' என, கூறினர். அவர்கள் பேச்சை நம்பி, மூதாட்டி நகைகளை கழற்றி பையில் வைக்க முற்பட்ட போது, வாலிபர்கள் அவருக்கு உதவியுள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்த போது, ௫ சவரன் நகைகளை காணவில்லை. திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மோசடி பேர்வழிக்கு 'குண்டாஸ்'

சென்னையில், ஒரு கும்பல், ஆயிரம் விளக்கு, வடபழநி உட்பட, பல்வேறு இடங்களில், போலி கால் சென்டர் நடத்தி, பொதுமக்களுக்கு வங்கி கடன் வாங்கித் தருவதாக, கோடிக்கணக்கில் சுருட்டியது. மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, இதுவரை, 40 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில், ஆக., 18ல், சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த சையது அலி, 45 என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, போலீசார் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில், நேற்றுடன் மூன்று பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் மோதி இருவர் உயிரிழப்பு

சென்னை, திருவொற்றியூர், விம்கோ நகரைச் சேர்ந்தவர் வரதராஜன், 48. நேற்று முன்தினம் இரவு, கடைக்கு செல்வதாக கூறி, வீட்டில் இருந்து சென்றார். விம்கோ நகர், ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, அவ்வழியே சென்ற சரக்கு ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

* எண்ணுார் ரயில் நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு, 30 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண், உடலில் காயங்களுடன், இறந்த நிலையில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார்.எண்ணுார் ரயில் நிலைய அதிகாரி, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இரு சம்பவங்களில், இறந்தவர் உடல்களை மீட்ட கொருக்குபேட்டை ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தே.மு.தி.க., வட்ட செயலர் கைது

பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலையில், டீக்கடை நடத்தி வருபவர் அக்பர் பாஷா, 40. இவர் கடைக்கு, ௫௭வது வார்டு, தே.மு.தி.க., வட்ட செயலர் ஆன்ட்ரூஸ், 33, தன் நண்பர்கள் மூவருடன் நேற்று வந்து, டீ, வடை சாப்பிட்டார். கடைக்காரர் காசு கேட்ட போது, 'நான் யார் தெரியுமா... என்னிடமே பணம் கேட்கிறாயா?' என, கேட்டு, கடையில் இருந்த பொருட்களை சூறையாடினார்.இது குறித்து, எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிந்து, ஆன்ட்ரூசை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

போராட்டம் நடத்த தடை

தமிழ்நாடு, சிட்டி போலீஸ் சட்டத்தின் படி, சென்னையில், செப்., 11ல் இருந்து, 29 வரை, பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், தெருமுனைக் கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது. மீறுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்தில் மூவர் பலி

ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சேகர், 54; காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, திருமழிசை காய்கறி மார்க்கெட்டிற்கு, ஆட்டோவில் சென்றார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி ஒன்று, திடீரென வலது புறம் திரும்பியது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, லாரி மீது மோதியது. இதில், ஆட்டோவின் முன்பகுதி நசுங்கி, சேகர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

* மேடவாக்கம், பெரும்பாக்கம் சாலை, இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 37; சமையல் கலைஞர். நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி பிரதான சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, பள்ளிக்கரணை, மூவேந்தர், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த முருகன், 44 என்பவர் சாலையை கடக்க முயன்றார்.அவர் மீது, சுரேஷின் வாகனம் மோதியது. இதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். சுரேஷ், 'ஹெல்மெட்' அணியாததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.முருகனுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இருவரும், 'ஆம்புலன்ஸ்' உதவியுடன் குரோம்பேட்டை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.விபத்து குறித்து மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* அண்ணாநகர் விரிவாக்க பகுதியைச் சேர்ந்தவர் திருச்செல்வம், 56. அவர், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில், திருமங்கலம் மேம்பால அணுகு சாலையில் சென்றார். அப்போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.பகுதிமக்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். திருமங்கலம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X