பொது செய்தி

தமிழ்நாடு

புதியது

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை : : கோவை பாரதியார் பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதி கொடுப்பதில் விதிகள் மீறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிய பாடப்பிரிவு துவங்கவும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் முந்தைய கல்வி ஆண்டில் அக்டோபருக்குள் பல்கலைக்கு கல்லுாரிகள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.ஆனால் இந்த ஆண்டு பாரதியார் பல்கலை இணைப்பு கல்லுாரிகள் சிலவற்றில் புதிய பாடப் பிரிவுகளை துவங்கி மாணவர் சேர்க்கையை நடத்த ஓராண்டு வரை தாமதமாக விண்ணப்பித்த கல்லுாரிகளுக்கும் அனுமதி வழங்க முடிவாகியுள்ளது.

பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சிண்டிகேட் உறுப்பினரான உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா சிண்டிகேட் கருத்துருவை முன் வைத்தார். அதாவது புதிய பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க ௨௦௧௯ அக்டோபருக்குள் விண்ணப்பிக்க தவறிய சில கல்லுாரிகள் ஓராண்டு தாமதமாக விண்ணப்பித்து இந்த ஆண்டே மாணவர்களை சேர்க்க அனுமதி கேட்டுள்ளன. அதற்கு உறுப்பினர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஒரு ஆண்டு வரை தாமதமாக விண்ணப்பித்த கல்லுாரிகளிடம் அதற்கான கூடுதல் அபராத தொகையை மட்டும் வசூலித்து விட்டு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை நடத்த சிண்டிகேட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலையின் இந்த முடிவு எதிர்காலத்தில் பல்வேறு விதிமீறல்களுக்கு வழிவகுக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.மேலும் சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிப்பதற்கு பல முக்கிய பிரச்னைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்கலையில் பணிக்கு சேர்ந்த பேராசிரியர் ஒருவர் அளித்துள்ள பணி அனுபவ சான்றிதழில் பிஎச்.டி. படித்து கொண்டிருந்த காலத்திலேயே பேராசிரியராக பணியாற்றியதாக முன்னுக்கு பின் முரண்பாடான தகவல்கள் உள்ளன. பாரதியார் பல்கலையிலும் அவர் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ளதால் அது குறித்து விசாரிக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல் பல்கலையில் அனுபவமிக்க மூத்த பேராசிரியர்களை பணியில் நியமிப்பது குறித்தும் விவாதங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் இந்த பிரச்னைகளை பேச சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.அதேநேரம் தாமதமாக விண்ணப்பித்த கல்லுாரிகளுக்கான பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து அந்த கல்லுாரிகளுக்கு சாதகமாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவில் உள்நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பசுபதி கூறியதாவது: மாணவர் சேர்க்கை அனுமதி பெற ஓராண்டு தாமதமாக விண்ணப்பித்த கல்லுாரிகளுக்கு விதிகளை மீறி அனுமதி தரக்கூடாது.

பாரதியார் பல்கலையில் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என எனக்கு தெரியாது. அவ்வாறு முடிவு எடுத்தால் அது பல்கலை விதிகளுக்கு முரணானது.சிண்டிகேட் உறுப்பினர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விதிகளை மீறி செயல்பட பல்கலை விதிகளில் இடமில்லை. எனவே அந்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X