பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவாணியில் தொடர்கிறது மழை: அணை நிரம்பும் என நம்பிக்கை

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு தொடர்வதால், நீர் மட்டம், 39.50 அடியாக உயர்ந்திருக்கிறது.இம்மாத துவக்கத்தில் இருந்தே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு காணப்படுகிறது. அதனால், சிறுவாணி அணைக்கு நீர் வரத்து காணப்படுகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, நீர்ப்பிடிப்பு பகுதியில், 115 மி.மீ., மழை பதிவாகியது.முத்திக்குளம், பட்டியாறு, பாம்பாறு உள்ளிட்ட அருவிகளில் இருந்தும் நீர் வரத்து தென்படுவதால், நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம், 39.50 அடியாக (மொத்த உயரம் - 50 அடி) உயர்ந்திருந்தது.கடந்த, 1ம் தேதியில் இருந்து நேற்று வரையிலான காலகட்டத்தில், 9 நாட்கள் மழைப்பொழிவு இருந்தது; இந்நாட்களில், மொத்தம், 587 மி.மீ., மழை கிடைத்துள்ளது. இன்னும் சில நாட்கள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பதால், நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பிருக்கிறது.நொய்யலிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு, 300 கனஅடி, நீர் வழங்கு வாய்க்காலில், 180 கனஅடி, குனியமுத்துார் வாய்க்காலில் 120 கன அடி, உக்கடம் பெரிய குளத்துக்குச் செல்லும் வாய்க்காலில் 80 கன அடி, குறிச்சி குளத்துக்கான வாய்க்காலில் 70 கன அடி, வெள்ளலுார் வாய்க்காலில் 30 கன அடி தண்ணீர் செல்கிறது.பாலக்காடு கணவாய் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை, கோவை மேற்குப்பகுதியில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அடுத்த, 5 நாட்களில் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து எதிர்பார்க்கலாம். கோவை நகர் பகுதியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படும்; அவ்வப்போது சாரல் மழை பெய்யலாம்.--சந்தோஷ் கிருஷ்ணன்,வானிலை ஆராய்ச்சியாளர்.மழை தொடர்ந்தால் அணை நிரம்பும்மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சிறுவாணி அணை பகுதியில், இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால், நீர் மட்டம் மேலும் உயரும். கேரள அரசுடன் நடத்திய பேச்சு சுமூகமாக முடிந்திருப்பதால், நடப்பாண்டு முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க வாய்ப்பிருக்கிறது. மழை தொடர்ந்தால், அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X