சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எரிகிற நெருப்பில் எண்ணெய்!

Updated : செப் 13, 2020 | Added : செப் 12, 2020
Share
Advertisement
அக்கம் பக்கம்

'தலைவரே நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது; இதை தவற விட்டால், அடுத்த தேர்தலிலும் நாம் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர வேண்டும்' என, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிசை உசுப்பேற்றி வருகின்றனர், அவரது விசுவாசிகள். மஹாராஷ்டிராவில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றும், சிவசேனாவின் உள்ளடி அரசியல் காரணமாக, ஆட்சி அமைக்க முடியாமல் போய் விட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், 'மஹாராஷ்டிராவின் நிரந்தர முதல்வர் நீங்கள் தான்' என, பட்னவிசை, அவரது ஆதரவாளர்கள் உற்சாகப்படுத்தினர். எதிரெதிர் முகாமில் இருந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திடீர் கூட்டணி அமைத்து, பட்னவிசின் கனவை கலைத்து விட்டன. இதற்கு பின், விரக்தியுடன் வலம் வந்த பட்னவிசுக்கு, இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் முதல்வராக இருந்த
போது, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். தற்போது அந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, அதிரடியாக களத்தில் குதித்துள்ளார் பட்னவிஸ்.'மஹாராஷ்டிர அரசு, இட ஒதுக்கீடு வழக்கில் சரியாக வாதாடவில்லை. மராத்தா சமூகத்தினருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. இனியாவது, மராத்தா மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்' என,
எரிகிற நெருப்பில் எண்ணெயை லிட்டர் லிட்டராக ஊற்றி வருகிறார் பட்னவிஸ்.


துாங்கி வழியும் முதல்வர்!



'கொரோனா காலத்திலும், இந்த எதிர்க்கட்சி தலைவர்கள் நிம்மதியாக இருக்கவிட மாட்டார்கள் போலிருக்கிறதே' என, கடும் கோபத்துடன் குமுறுகிறார், தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான சந்திரசேகர ராவ்.கடந்த சில வாரங்களாக தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இத்தனை நாட்களாக சுருண்டு படுத்திருந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இப்போது நிமிர்ந்து அமர்ந்து, கேள்வி மேல் கேள்வி கேட்கத் துவங்கி உள்ளனர். 'கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகை குறித்து கணக்கு காட்ட வேண்டும். இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. 'மருந்து வாங்கியது, மருத்துவ கருவிகள் வாங்கியது என, எல்லாவற்றிலும் முறைகேடு நடந்துள்ளது' என, காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த புகார்களுக்கு, முதல்வரிடமிருந்து எந்த பதிலும் வராததால், கடும் கோபம் அடைந்த காங்கிரஸ் பிரமுகர்கள், 'இவருக்கு சந்திரசேகர ராவ் என பெயர் வைத்ததற்கு பதிலாக, கும்பகர்ணன் என வைத்திருக்கலாம்; எப்போதும் துாங்கி வழிகிறார்' என, கிண்டலடித்தனர். சந்திரசேகர ராவோ, 'இது உச்சக்கட்ட அவமானம்; இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது' என, பதிலடி கொடுப்பதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். எதிர்க்கட்சியினரோ, 'இதை, இதைத் தான் உங்களிடம் எதிர்பார்த்தோம்' என, கேலி பேசுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X