சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

சற்று கவனியுங்கள் முதல்வரே!

Updated : செப் 13, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கே.சின்னசாமி, ஈரோட்டில் இருந்து எழுதுகிறார்: நீர் நிலை ஆக்கிரமிப்பு, சாலை புறம்போக்கு, அரசு நிலம், வனத்தை ஒட்டிய ஆபத்து பகுதியில் குடியிருப்போருக்கும், வீடு இல்லாத, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினர், குடிசையில் வசிப்போருக்கும் குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியம் மூலம், அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி தருகின்றனர்.
தற்போது, அதே வீடுகளுக்கு, ஆறு முதல் ஏழு தளம், முழு மின்சார வசதி, கழிப்பறை, ஆழ்துளை கிணறுடன் மின் மோட்டார், மேல்நிலை தொட்டி போன்றவை ஏற்பாடு செய்கின்றனர். பயனாளி பங்கு தொகை என, வீட்டின் மதிப்பில், 10 சதவீதத்துக்கு மேல் பெறுகின்றனர். பராமரிப்பு தொகையாக மாதம் ஒரு தொகையும் பெறுகின்றனர்.ஏற்கனவே இக்குடியிருப்பில் இருந்தவர்களின் பழுதான வீட்டை இடித்தும், புதிய நபர்களுக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கட்டி உள்ளனர். இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2019 பிப்., முதல், கடந்த மார்ச்க்குள் கட்டி முடித்துவிட்டனர். இதில், 5,000 வீடுகளில் மட்டுமே பயனாளிகள் வசிக்க துவங்கி உள்ளனர். மீதமுள்ள, 25 ஆயிரம் வீடுகள் வரை ஓராண்டுக்கு மேலாக பூட்டிக்கிடக்கின்றன. கடந்த ஜூன் முதல், முதல்வர் இ.பி.எஸ்.,சால் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமும், மாவட்டம் வாரியாக ஆய்வுக்கு செல்லும் போதும் திறப்பு விழா கூட நடந்துவிட்டது.
உதாரணமாக, ஈரோடு பெரியார் நகரில், 336 வீடு, பெரும்பள்ளம் ஓடை அருகே, 464 வீடு, கருங்கல்பாளையத்தில், 272 வீடு கட்டி முடித்து ஓராண்டுக்கு மேலாகி, திறப்பு விழா கண்டு மூன்று மாதத்துக்கு மேலாகிறது. பயனாளி பங்கு தொகையை செலுத்தி, வீடு வழங்கப்படாமல், வாடகை வீடுகளிலும், தெரு ஓரங்களிலும் வசிக்கின்றனர். இதே போல், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டி முடித்த, 25 ஆயிரம் வீடுகளை, பயனாளிகளிடம் ஒப்படைக்காததால் சிரமப்படுகிறோம். அதிகாரிகளிடம் கேட்டால், 'சென்னையில் விரைவில் நடக்கும் விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர்' என்கிறார்.கொரோனா ஊரடங்கால் வேலை, வருமானம் இழந்து, வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கிறோம். இந்நேரம், குடியிருப்பை வழங்கினால், வாடகையாவது மிச்சமாகும்.
வீடு கட்டி முடித்தும், பயனாளிக்கு வீடுகளை வழங்காமல் இழுத்தடிப்பது ஏன்? வரும் சட்டசபை தேர்தலுக்காக வீடுகளை ஒப்படைக்காமல் உள்ளதாகவும், தேர்தல் அறிவிப்புக்கு முன், வீடுகளை ஒப்படைத்து ஓட்டு வங்கியை பெற நடக்கும் நாடகமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஸ்டாலினை எடை போடணும்!அண்ணா அன்பழகன், நாகையிலிருந்து எழுதுகிறார்: திராவிட இயக்கம், மேடை பேச்சால் வளர்ந்தது. ஈ.வெ.ரா., சிறந்த பேச்சாளரில்லை என்றாலும், எதார்த்தமான வழக்கு மொழி பேச்சால், மக்களை கவர்ந்தவர்.அண்ணாதுரை, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர், சிறந்த பேச்சாளராக திகழ்ந்த திராவிட இயக்கத்தினர். அவர்கள், எந்த தலைப்பு கொடுத்தாலும், அது குறித்து உடனே பேசக்கூடிய திறமை படைத்தோர். பத்திரிகையாளர் சந்திப்பில் கூட, எந்த கேள்வி கேட்டாலும், அதற்கு சளைக்காமல் பதில் தந்தனர்.வைகோ, காளிமுத்து, ரகுமான் கான், க.சுப்பு போன்ற திராவிட தலைவர்களும், நல்ல பேச்சாளர்கள் தான். ஆனால் இன்று, நான்காம் தலைமுறையென, 'போஸ்டர்' அடித்துக் கொள்ளும், தி.மு.க., தலைவரான ஸ்டாலின், பேச்சில் திறமை படைத்தவராக இல்லை.துண்டு சீட்டைப் பார்த்து, 'ஆக... ஆக' என்று இழுத்து, யோசித்து, சில நேரங்களில் தவறாக பேசி வருவது, திராவிட இயக்கத்திற்கு இழுக்காகும்.பத்திரிகையாளர் சந்திப்பில் கூட, ஏற்கனவே தயாரித்து வந்த உரையை மட்டும் பேசி, இடத்தை காலி செய்கிறார்; நிருபர்களின் கேள்விகளை சந்திக்க பயப்படுகிறார்.பேச்சும், அணுகுமுறையும் அரசியல் கட்சித் தலைவருக்கு தேவையான தகுதிகள். கட்சிக் கூட்டம், 'நமக்கு நாமே' பயணம் அனைத்தும் ஜோடிக்கப்பட்டதே தவிர, இயல்பான நேருக்கு நேர் சந்திப்பாக இருப்பதில்லை.இதை, குற்றமாக, ஏளனப்படுத்தும் எண்ணத்தோடு, சுட்டிக் காட்டவில்லை. தன் கருத்து, திட்டம் குறித்து, நேரடியாக கேள்வி - பதில் முறையில், ஸ்டாலின் பதில் அளித்தால் தான், முதல்வருக்கான தகுதி, அவருக்கு இருக்கிறதா என்பதை, மக்கள் எடை போட முடியும்.
வரும் பொதுத் தேர்தலுக்கு முன், ஊடகங்களில், நேரடியான கேள்விகளை எதிர்கொண்டு, அவர் பதில் அளிக்க வேண்டும். அது தான், அவரது வளர்ச்சிக்கு உதவும்.அவர்கள் குடியேற அனுமதியுங்கள்!நா.பாண்டுரங்கன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கொரோனா தொற்று நோய் பரவலால் அமலான ஊரடங்கு, பல தரப்பினரையும், பொருளாதார ரீதியில் அதல பாதாளத்திற்கு தள்ளி விட்டது.இந்நேரத்தில், அரசின் திட்டங்களில் சில தளர்வுகளை அறிவித்து, பயனாளிகளுக்கு உதவ வேண்டும். சென்னை, மணலி புதுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகள் குடியேற, தயார் நிலையில் உள்ளது.தற்போது ஊரடங்கால், வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால், பயனாளி பங்களிப்பு தொகையை மொத்தமாக கோராமல், மாத தவணையில் பெற்று, அவர்கள் குடியேற அனுமதிக்க வேண்டும்.கடந்த, 1988ல், வீட்டுவசதி வாரியத்தால், மணலி புதுநகரில், 288 வீடுகள் உடைய, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 30 ஆண்டுகள் கடந்ததால், அந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, 2017ல், புதிய குடியிருப்புகள் கட்டும் பணியை துவங்கின.
புதிய குடியிருப்புக்கான ஆணை வழங்கப்பட்ட பின், பழைய குடியிருப்பில் வசித்தோர் வெளியேற்றப்பட்டு, கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.வீடு ஒன்றின் மதிப்பு, 11 லட்சம் ரூபாய். அதில், மத்திய அரசு, 1.50 லட்சம் ரூபாய்; மாநில அரசு, 5.90 லட்சம் ரூபாய் மானியம் போக, பயனாளிகள், 3.60 லட்சம் ரூபாய் பங்களிப்பு தொகையை கட்ட
வேண்டும்.அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு, நடப்பாண்டு, பிப்., 25ல், காணொலி காட்சி வழியாக, முதல்வர், இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.அதற்குள், கொரோனா பேரிடர் ஏற்பட்டதால், கூலி தொழிலாளி, தெருவோர வியாபாரிகளான பயனாளிகள் பலரும் வேலையிழந்தனர். தற்போது இருக்கும் வீட்டிற்கு, வாடகை கொடுக்க முடியாமல், அவர்கள் தவித்து வருகின்றனர்.
எனவே வாரியம், மனமிரங்கி, பயனாளி பங்களிப்பு தொகையான, 3.60 லட்சம் ரூபாயில், 10 சதவீதம் முன்பணமாக பெற்று, புதிய குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியேற அனுமதிக்க வேண்டும். மீதி தொகையை, தவணை முறையில் வாரியமே வசூலித்துக் கொள்ளட்டும்.தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள்!அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு, வெகு நாட்களாகி விட்டது உண்மையே. ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவர், இன்று ஒருவர் கூட இல்லை.அ.தி.மு.க.,விற்குள் நடக்கும் உட்கட்சி பூசலால், 'மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்' என்ற நம்பிக்கை, அக்கட்சியினருக்கே இல்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து, அக்கட்சிக்குள் நடக்கும் களேபரங்கள், வலிமையான தலைவர் அங்கில்லை என்பதை,
அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டது.தி.மு.க., தான், அடுத்து ஆட்சியை பிடிக்கும் என, நம்பும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூட, இன்று வரை, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை விட்டு விட தயாராக இல்லை.கடந்த, 2016 சட்டசபைத் தேர்தலில், 1 சதவீதம் ஓட்டு வித்தியாசத்தில் தான், தி.மு.க., ஆட்சியை பறிகொடுத்தது. அதனால் தான், 'லெட்டர்பேடு' கட்சிகளின் ஆதரவைக் கூட இழந்து விடக் கூடாது என, எச்சரிக்கையாக உள்ளது.தே.மு.தி.க., - பா.ம.க., ஆகியவை, ஆளுங்கட்சி என்ற தகுதிக்கு போட்டியிடப் போவதில்லை; கூட்டணிக் கட்சி என்ற நிலையில் தான், அவை இருக்கும்.
நடிகர் ரஜினியை, சமூக வலைதளத்தில் சிலர் கிண்டல் செய்தாலும், அவர் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக அவர், பணம் சம்பாதிக்க வரவில்லை; மேலும், மக்களிடம், 'நல்ல மனிதர்' என்ற நம்பிக்கையை பெற்றுள்ளார்.அவர் கட்சி ஆரம்பித்ததும், தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறிவிடும். ஏனெனில், மாற்றத்தை விரும்பும் மக்களின் கவனம், ரஜினியின் பக்கம் சாய்ந்து விடவே வாய்ப்பு அதிகம்.புதிய மற்றும் நடுநிலை வாக்காளர்கள், திராவிட கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள், ரஜினிக்கு ஆதரவு தர முன்வருவர்.கடந்த, 1996 முதல், ரஜினி ஏதோ ஒரு விதத்தில், அரசியல் சூழலுக்குள் இருந்து வருகிறார். அரசியல் பற்றி தெரிந்ததால் தான், அவர் இத்தனை ஆண்டு காலம் பொறுமையாக இருந்தார். இப்போது, அவர் அரசியலில் இறங்குவதற்கான காலம் கனிந்திருக்கிறது.
எந்த நிலையிலும், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற தவறான முடிவை, அவர் எடுத்து விடக்கூடாது; ஏனெனில், தமிழக மக்கள், அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.


ஊழலை மறைக்க முடியாது!டாக்டர் ராம்.மோகன்தாஸ், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, முதல்வராக பொறுப்பேற்ற பின், ஊழல், கமிஷன் போன்றவை தலை துாக்கின என்றால், அது மிகையல்ல.அவரின் ஆட்சியில் ஊழல் மட்டுமே வளர்ந்தது என்பதை, மறுக்க முடியுமா?யார் யாரோ பாடுபட்டு உருவாக்கிய, தி.மு.க.,வை, தன் குடும்ப சொத்தாக மாற்றியது தான், அவரின், 'திறமை'களில் முக்கியமானது.தன் ஆட்சியின்போது நடந்த ஊழல் காரணமாக, அதை மறைக்க வேண்டும் என்பதற்காக, தமிழகம் நிறைய இழந்துள்ளது.கடந்த, 1974ல், அப்போதைய பிரதமர், இந்திரா, நமக்கு சொந்தமான கச்சத்தீவை, இலங்கைக்கு தாரை வார்த்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, வாய் மூடி மவுனமான இருந்தார். கச்சதீவை இழந்ததால், நாம் அனுபவிக்கும் பிரச்னைகள் ஏராளம்.காவிரி நதி நீர் பங்கீடு ஒப்பந்தம், 1974ம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர், கருணாநிதி. அதனால், தமிழகம் சந்தித்து வரும் இழப்புகள் ஏராளம்.கடந்த, 1973-ல், கருணாநிதி ஆட்சி காலத்திலேயே, வீராணம் குடிநீர் திட்டம் முன் வைக்கப்பட்டது. அன்று நடந்த ஊழல் காரணமாக, அத்திட்டம் தோல்வி அடைந்தது. பின், ஜெயலலிதா அதை சாதித்து காட்டி, சென்னையின் தாகத்தைப் போக்கினார்.தொலைநோக்கு திட்டமின்மையால், தமிழகம் மின்வெட்டு மிகை மாநிலமாக மாறியதை, நாம் மறக்க முடியாது.மக்களுக்கு இலவசங்கள் வழங்கினார்; ஏனெனில், கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் கிடைக்கும் என்பதால்!அரசு பணிக்கு, வசூல் வேட்டை நடந்தது, கனிமவள சுரண்டலுக்கு அனுமதித்து, நில அபகரிப்பு என, கருணாநிதியின் ஆட்சியில், தமிழகம் சந்தித்த துயரங்கள் ஏராளம்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, மொழி உணர்வை துாண்டி, கணக்கில்லா ஊழல் பட்டியலை, தி.மு.க., மறைக்கநினைக்கிறது; அது, நடக்காது!


நாமெல்லாம் நன்றி மறந்தோர்!கா.இளஞ்செழியன், குன்னுார், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இது, காந்தி பிறந்த மண் என, பெருமை நமக்கெல்லாம் இருக்கிறது. இன்று, நம் மக்கள் அனைவரும், காந்தி படமிருக்கும் பணத்தைத் தான் விரும்புகின்றனர்; காந்தியை மறந்து விட்டனர்!காந்தி பிறந்த மற்றும் காலமான நாளில் மட்டும், அவர் நினைவுகூரப்படுகிறார். நம் நாட்டில் பிறந்த, அகிம்சையின் நாயகன் காந்தியை, வெளிநாட்டினர் போற்றும் அளவிற்கு, நாம் போற்றுவதில்லை.காந்தி, 1920 - 1930ம் ஆண்டுகளில், தென்னாப்ரிக்காவில், பிரிட்டிஷ் பெட்ரோலியத்தில் பணிபுரிந்த போது, விற்பனையாளர் ஒருவரது உறவினருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட, தன் மூக்கு கண்ணாடியை பரிசாக கொடுத்துள்ளார்.அந்த கண்ணாடியை பெற்றுக்கொண்டவரின் வம்சாவளியைச் சேர்ந்த, ஆண்ட்ரூ ஸ்டோவ் என்பவர், அதை தற்போது ஏலத்திற்கு விட்டுள்ளார்.அதன் மதிப்பு, 14 லட்சம் ரூபாய் தான். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், 2.55 கோடி ரூபாய்க்கு அதை வாங்கியுள்ளார்.நாம், காந்தியின் மகத்தான கொள்கைகளை பின்பற்றாமல் வாழ்ந்து வருகிறோம். குறைந்தபட்சம், அவர் பயன்படுத்திய பொருட்களையாவது சேகரித்து, பாதுகாக்க வேண்டும்.கிரிக்கெட் அணி உட்பட, எதையெதையோ ஏலம் எடுக்கும் நம் நாட்டின் பணக்காரர்கள், காந்தியின் மூக்குக் கண்ணாடியை வாங்கவில்லை. நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தாரே என்ற எண்ணத்திலாவது, மத்திய அரசே, அந்த கண்ணாடியை ஏலம் எடுத்திருக்கலாம்.'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்ற வள்ளுவரின் வாக்கு உண்மையானது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
13-செப்-202011:25:26 IST Report Abuse
T.S.SUDARSAN ஊழலை மறைக்க முடியாது டாக்டர் ராம்.மோகன்தாஸ், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, முதல்வராக பொறுப்பேற்ற பின், ஊழல், கமிஷன் போன்றவை தலை துாக்கின என்றால், அது மிகையல்ல.அவரின் ஆட்சியில் ஊழல் மட்டுமே வளர்ந்தது என்பதை, மறுக்க முடியுமா?யார் யாரோ பாடுபட்டு உருவாக்கிய, தி.மு.க.,வை, தன் குடும்ப சொத்தாக மாற்றியது தான், அவரின், 'திறமை'களில் முக்கியமானது.தன் ஆட்சியின்போது நடந்த ஊழல் காரணமாக, அதை மறைக்க வேண்டும் என்பதற்காக, தமிழகம் நிறைய இழந்துள்ளது.கடந்த, 1974ல், அப்போதைய பிரதமர், இந்திரா, நமக்கு சொந்தமான கச்சத்தீவை, இலங்கைக்கு தாரை வார்த்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, வாய் மூடி மவுனமான இருந்தார். கச்சதீவை இழந்ததால், நாம் அனுபவிக்கும் பிரச்னைகள் ஏராளம்.காவிரி நதி நீர் பங்கீடு ஒப்பந்தம், 1974ம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர், கருணாநிதி. அதனால், தமிழகம் சந்தித்து வரும் இழப்புகள் ஏராளம்.கடந்த, 1973-ல், கருணாநிதி ஆட்சி காலத்திலேயே, வீராணம் குடிநீர் திட்டம் முன் வைக்கப்பட்டது. அன்று நடந்த ஊழல் காரணமாக, அத்திட்டம் தோல்வி அடைந்தது. பின், ஜெயலலிதா அதை சாதித்து காட்டி, சென்னையின் தாகத்தைப் போக்கினார்.தொலைநோக்கு திட்டமின்மையால், தமிழகம் மின்வெட்டு மிகை மாநிலமாக மாறியதை, நாம் மறக்க முடியாது.மக்களுக்கு இலவசங்கள் வழங்கினார் ஏனெனில், கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் கிடைக்கும் என்பதால்அரசு பணிக்கு, வசூல் வேட்டை நடந்தது, கனிமவள சுரண்டலுக்கு அனுமதித்து, நில அபகரிப்பு என, கருணாநிதியின் ஆட்சியில், தமிழகம் சந்தித்த துயரங்கள் ஏராளம். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, மொழி உணர்வை துாண்டி, கணக்கில்லா ஊழல் பட்டியலை, தி.மு.க., மறைக்கநினைக்கிறது அது, நடக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X