சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

எங்கள் கிளப்பில் 21 - 60 வயதினர் உறுப்பினர்கள்!

Added : செப் 12, 2020
Share
Advertisement


சொல்கிறார்கள்

தங்களின் பைக் பயண பொழுதுபோக்கு குறித்து, பொள்ளாச்சி மோட்டார் பைக் கிளப் நிறுவனராக இருக்கும், தனியார் வங்கியில் மேலாளர் செல்வ மணிகண்டன்: கடந்த, 2012-ல், திருப்பூரைச் சேர்ந்த நண்பர் ஜோஷ், என்னை, 'ரைடிங்' உலகத்திற்குள் கூட்டிச் சென்றார்.எல்லா, 'பைக்கர்' கிளப்புக்கும் பொதுவான சில விதிமுறைகள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
அதையெல்லாம் கற்ற பின், 'நாம் ஏன் பொள்ளாச்சியில் ஒரு ரைடிங் கிளப் ஆரம்பிக்கக் கூடாது!' என எண்ணி, பைக் ரைடிங்கில் ஆர்வம் உள்ள, என் நண்பர்கள், கிரி பிரசாத், நிஷாந்த், கார்த்திகேயன் போன்றோருடன் ஆலோசித்தேன். அப்படித் தான், 2013-ல் ஆரம்பிக்கப்பட்டது, பி.எம்.சி., எனப்படும், பொள்ளாச்சி மோட்டார் கிளப். இன்று எங்கள் கிளப்பில், 21 - 60 வயது வரை உறுப்பினர்கள் உள்ளனர்.
எல்லா பைக்கர்ஸ் கிளப்பும் போல, எங்கள் கிளப்பிலும், 'ரைடிங் கியர்ஸ்' எனப்படும், ஹெல்மெட், கிளவுஸ் போன்றவை கட்டாயம். பொள்ளாச்சி போன்ற டவுனில், ரைடிங் கியர்ஸ் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் அப்போது இருந்தது.ஆரம்பத்தில் நாங்கள் அவற்றை அணிந்து கிளம்பியபோது, வேற்று கிரகவாசிகளை பார்ப்பது போல,
மக்கள் பார்த்தனர். ஆனால், இன்று நிறைய கல்லுாரி மாணவர்கள், எங்களை முன்னுதாரணமாக எடுத்து, ஹெல்மெட்டின் அவசியம் உணர்ந்துள்ளனர். எங்கள் கிளப்பில், ஒருவர் வாகனத்தை வைத்து அவரிடம் பாகுபாடு காட்டுவதில்லை. 150 பல்ஸர், அப்பாச்சி முதல், 250 சிசி கேடிஎம். 350 சிசி புல்லட், 1,000 சிசி ஹார்லி டேவிட்சன் ரைடர்கள்
வரை, எங்கள் கிளப்பில் எல்லாருமே ஒன்று தான்; சரிசமமாக நடத்துவோம்.உறுப்பினர்களின் பைக்கை பொறுத்து, அவர்களை, 'ஸ்லோ ஸ்டெடி, பாஸ்ட் ப்யூரியஸ்' என, இரண்டு குழுக்களாகப் பிரித்துக் கொள்வோம். ஸ்லோ ஸ்டெடி குழு, 'லீட்' எனும் வழிகாட்டியுடன், 6:00 மணிக்குக் கிளம்பிச் சென்று, 7:30-க்கு தேநீர் இடைவேளை ஸ்பாட்டை அடையும்.பாஸ்ட் ப்யூரியஸ் குழு, - 'சூப்பர் லீட்' தலைமையில், 250 சிசி மற்றும் அதற்கும் மேற்பட்ட பைக்குகளுடன், 6:30-க்குப் புறப்பட்டு, அதே, 7:30-க்கு வந்து விடுவர். எந்த லாங் ரைடாக இருந்தாலும், இதுதான் எங்கள் ரூல்.
இரவு ரிசார்ட்டை அடையும் போது, கால் மணி நேர வித்தியாசத்தில் எல்லாரும் ஒன்றாக கூடியிருப்போம். இதையும் மீறி, சில ஜூனியர் ரைடர்கள், பொசிஷனை விட்டு முந்திச் செல்வர். அவர்களுக்கு அடுத்த இடைவேளையில், தோப்புக்கரண தண்டனை உண்டு!எங்களின் ரைடிங் பிளான், வெள்ளி,- சனி, ஞாயிறு வார இறுதி நாட்களை குறிவைத்துத் தான் இருக்கும். முதல் நாள் முழுவதும் ரைடிங்; 2-ம் நாள் ரிலாக்ஸ்டாக லோக்கல் இடங்களில் ரவுண்டு; 3-ம் நாள் ரிட்டர்ன். இப்படித் தான், தமிழகம் மட்டுமின்றி, பல மாநிலங்களையும் பைக்கில் சுற்றி வருகிறோம்!

தொழிலில் நேர்மை அவசியம்!

தன் தொழில் பற்றி, பிரபல தொழிலதிபர், 'ராம்ராஜ் காட்டன்' கே.ஆர்.நாகராஜன்: எங்கள் குடும்பத்தில், நான் தான் முதல் தலைமுறையாக வியாபாரம் செய்ய வந்தவன். சிறு வயதிலிருந்தே எனக்கு சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்பது கனவு. சிறுவனாக இருந்த போது எங்கள் ஊருக்கு, வாரம்தோறும் திருப்பூரிலிருந்து ஒருவர் காரில் வருவார். அவர் எப்படி கார் வாங்கினார் என்று என் அம்மாவிடம் கேட்டேன். அவர் வியாபாரம் செய்வதாகச் சொன்னார் அம்மா. 'என்ன படித்திருக்கிறார்?' என்று கேட்டேன். மூன்றாவதோ, நான்காவதோ படித்திருப்பார் என்றார்.'பி.ஏ., - பி.எட்., படித்த என் பள்ளி ஆசிரியர் சைக்கிளில் வந்து போகிறார். நான்காவது படித்து விட்டு, இவர் எப்படி காரில் வருகிறார்' என்று கேட்டேன். அம்மாவிடம் அதற்கு பதிலில்லை.
அது முதல், அவரைப் போல நானும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. 9-ம் வகுப்புப் படிக்கும்போது, பள்ளிக் கட்டணம் செலுத்த, என் அப்பாவால் இயலவில்லை. அப்போது என் வீட்டுக்கு அருகில் ஒருவர், நியூஸ் ஏஜன்சியை நடத்தி வந்தார். அவரிடம் அந்த வியாபாரத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதற்குப் பின், ஒரு பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி, எந்த முன்பணமும் செலுத்தாமல், புத்தகத்தை விற்கும் ஏஜன்சியைப் பெற்றேன்.
மாதம்தோறும்,15 ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பை, அந்த வயதிலேயே உருவாக்கிக் கொண்டேன். நான் தொழில் செய்வதற்கு முன், எல்லா நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்த பின் தான் தொழில் ஆரம்பித்தேன். தென் மாநிலங்களின் அனைத்து வியாபாரிகளின் மனதையும் படித்தேன். இந்தியாவில் உள்ள எல்லா தொழிலதிபர்களும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்களே. தொழிலில் வாய்ப்புகளுக்கு முன், நாம் நாணயமாக இருக்க வேண்டும்.பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு மட்டும் தொழில் செய்தால் வெற்றியடைய முடியாது. என் தொழிலை ஆரம்பித்தவுடன் நெசவாளர்களுக்கு நல்ல வாழ்வாதாரம் கிடைத்தது. கடைகளுக்கு நல்ல சரக்குக் கிடைத்தது. அதை வாங்கிப் பயன்படுத்தும் மக்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதுதான் நான் ஜெயிப்பதற்குக் காரணம்.வேதாத்ரி மகரிஷியிடமிருந்து, மனவளக்கலைப் பயிற்சியைப் பெற்றவன். ஒவ்வொரு மனிதனுக்கும், சமுதாயத்தில் இருந்து ஆறு பண்புகள் அப்படியே வந்து விடுகின்றன. அவை பேராசை, கடுங்கோபம், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் மற்றும் கடும்பற்று ஆகும். இவற்றை முறையே, சீரான ஆசை, பொறுமை, கற்பு நெறி, சமநோக்கம், மன்னிப்பு மற்றும் ஈகையாக மாற்ற வேண்டும்!

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X