கோவை:'எங்கள் வீட்டில் கொரோனா நோயாளி, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். வீட்டுக்கு வராதீங்க' என, கதவுகளில், ஸ்டிக்கர் ஒட்டும் பணியில், கோவை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுஉள்ளது.கோவையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், தகர ஷீட்டால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.
இது, பொதுமக்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியதால், அந்நடைமுறை கைவிடப்பட்டு, தொற்று உறுதியானவர்களின் வீடுகளில், ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.அதில், 'இந்த வீட்டில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். எங்கள் வீட்டுக்கு வர வேண்டாம்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, தனிமைப்படுத்திய நாள் மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுதவிர, பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களில்,' காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் இருந்தால், 0422 - 2396677 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியவேண்டும்; சமூக இடைவெளி முக்கியம்' என, பேனர் வைக்கப்பட்டுஉள்ளது.வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகள், பஸ் ஸ்டாண்ட்டுகள் என, முக்கியமான இடங்களில், பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், சிறிய அளவிலான பேனர் கட்டும் பணியில், மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE